30 வருடம் கழித்தும் என் வலியைப் புரிந்து கொண்டவர்களுக்கு நன்றி: மாரிசெல்வராஜ் உருக்கம்!


சென்னை: எல்லா கதைகளும் சினிமாவுக்கானதுதான் என இயக்குநர் மாரிசெல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மாரிசெல்வராஜின் ‘வாழை’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படத்தின் முதல் காட்சியை அவர் தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் மக்களோடு பார்த்திருக்கிறார். பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் எல்லா கதைகளும் சினிமாவுக்கானதுதான் எனப் பேசியிருக்கிறார்.

அவர் பேசியிருப்பதாவது, “என் உணர்வுகளைப் பலரும் புரிந்திருக்கிறார்கள். முப்பது வருடம் கழித்தும் என் வலியைப் புரிந்து கொண்டவர்களுக்கு நன்றி. இது ஆர்ப்பாட்டமில்லாத வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். என்னை நேசித்த மனிதர்களிடம் மட்டும் நான் தனியாக உணர்ந்தபோது சொன்ன கதைதான் இது. கடந்த சில மாதங்களில் வன்கொடுமைகளுக்கான சூழல் இல்லை என்ற விஷயத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. எளிய மனிதர்களுக்கான வாழ்க்கை எப்படி இருக்கிறது, அவர்களின் வலி என்ன என்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஒரு கதையை செய்யும் இயக்குநருக்கு அந்தக் கதையோடு நேரடி தொடர்பு இருந்தால் படம் இன்னும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். உன்னைப் பாதிக்கக் கூடிய உன் சமூகத்தோடு நேரடி தொடர்பில் இருக்கும் கதைகளை எடு என்பதுதான் என் எண்ணம். பலர் இது சினிமாவுக்கு உகந்த கதை இல்லை, இதை வைத்து சினிமா எடுக்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால், சினிமா என்பது எந்தக் கதையும் இல்லை. எல்லாக் கதைகளுக்குமானதுதான் சினிமா. ‘வாழை’-க்கு அடுத்து துருவ் விக்ரமுடன் ‘பைசன்’, தனுஷ் சாருடன் அடுத்த படம் செய்கிறேன்” என்றார்.

x