மாரி செல்வராஜின் ‘வாழை’ படம் பார்க்க 10 காரணங்கள்!


சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி நடித்துள்ள ‘வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டிய 10 காரணங்கள் இங்கே..

> மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் புதிய உலகத்துக்குள் அழைத்துச் சென்று அங்கு நிகழும் கதையாடல்களுடன் நம்மை ஒன்ற வைக்கிறது.

> இரண்டு சிறுவர்களுக்கிடையிலான நட்பு, ரஜினி, கமல் ரெஃபரன்ஸ், “நம்மூர்ல ரஜினி படம் தான் ஓடுது. கமல் படம் எங்க ஓடுது” என்ற வசனம், அதையொட்டிய காட்சிகள், ‘பூவே உனக்காக’, ‘பிரியமுடன்’ போஸ்டர்களின் நாஸ்டால்ஜி தருணங்கள் என ஜாலியாக நகரும் படத்தின் தொடக்கம் ரசிக்க வைக்கிறது.

> தனக்கு பிடித்த ஆசிரியை மீது அந்தப் பருவத்தில் விளையும் ஈர்ப்பை எந்த வகையிலும், கொச்சையாகவோ, மிகைப்படுத்தியோ சொல்லாமல் மிக கவனமாக நேர்த்தியாக கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது.

> பழைய திரைப்படங்களில் ஹிட்டான 2 பாடல்களை வெவ்வேறு இடங்களில் சரியான தருணத்தில் பயன்படுத்தியிருப்பது திரையரங்கை ஆர்பரிக்க வைக்கிறது.

> கொத்தடிமை வாழ்க்கை, ஒரு ரூபாய் கூலி உயர்வு போராட்டம், அதனால் ஏற்படும் இழப்பு, இடைத்தரகர்களின் வஞ்சகம், கம்யூனிஸ்ட், அம்பேத்கர் குறியீடுகள் என உழைக்கும் மக்களின் வலியை அழுத்தமாக பதிய வைக்கிறது படம்.

> படத்தின் இறுதிக் காட்சி பார்வையாளர்களை உலுக்கிவிடுவதோடு, அதன் தாக்கம் படம் முடிந்தும் நீள்கிறது.

> சிறுவன் பொன்வேல், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி, ஜனனி ஆகியோரின் அழுத்தமான மற்றும் யதார்த்தமான நடிப்பு எளிதாக அவர்களின் வாழ்வியலுக்குள் பயணிக்க வைக்கிறது.

> சந்தோஷ் நாராயணனின் இசையில், ‘தென்கிழக்கு தேன் சிட்டு’ ‘பாதவத்தி’ பாடல் தரும் அனுபவத்துக்காகவே பார்க்கலாம்.

> தேனி ஈஸ்வரின் கறுப்பு வெள்ளை, ஷில்அவுட் காட்சிகள், லாங் ஷாட்ஸுடன் புளியங்குளத்தை காட்சியப்படுத்தியிருக்கும் விதம் கண்களுக்கு விருந்து படைக்கும் திரையனுபவம்.

> நேரடியாக காட்சிப்படுத்தும் விஷயங்களைத் தாண்டி மாரி செல்வராஜின் ‘உருவக’ காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. வெறும் வலியை மட்டும் திணித்து கடத்தாமல், வெகுஜன ரசனையிலும், திரை அனுபவத்திலும் கவனம் செலுத்தியிருக்கும் இப்படம் இறுதியில் உங்களை ஆட்கொள்ளும்.

x