தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை இன்று நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் கட்சி கொடியை இன்று அறிமுகம் செய்து வைத்தார். பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட முக்கிய மாவட்ட நிர்வாகிகள் உட்பட விஜய் கட்சியை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். மேலும், விஜயின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் வருகை தந்தனர்.
கொடி அறிமுகத்திற்கான ஏற்பாடுகள் காலை முதலே விறுவிறுப்பாக நடந்து வந்தது. காலை 9.30 மணியளவில் வருகை தந்த விஜய் தனது பெற்றோரிடம் ஆசி வாங்கினார். பின்னர் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
மேலே கீழே சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் இடம் கொடியில் பெற்றுள்ளது. நடுவில் மஞ்சள் நிறத்தில் பிளிறும் இரு யானைகள் இருக்க, அதன் நடுவில் வாகை மலரும், அந்த மலரை சுற்றி 23 பச்சை நிற நட்சத்திரங்கள் மற்றும் 5 ஊதா நிற நட்சத்திரங்கள் இடம்பெறும் வகையில் இந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்சிக்கான பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்க, தமன் இசையமைத்துள்ளார்.
முன்னதாக, நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என்.ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என்றும் விஜய் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கட்சியில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து நிலையிலான நிர்வாகிகளும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே அவர் நடித்த ‘தி கோட்’ என்ற திரைப்படத்தின் பணிகள் முடிந்த நிலையில், கட்சிப் பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு, கட்சிக் கொடியை அறிமுகம் செய்வது ஆகியவை குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்துடன் விஜய் அவ்வப்போது ஆலோசனை நடத்தினார். இதில், மாநாட்டுக்கு முன்பாகவே கட்சியின் கொடியை அறிமுகம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த 19-ம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிறத்துடன் நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கட்சிக் கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலானது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடந்தது.