தான் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சினிமாவை விட்டு விலகுவதாகவும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அதிர்ச்சியானப் பதிவை பகிர்ந்துள்ளார்.
நிவின் பாலி நடித்த ‘நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இந்தப் படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. அதன் பிறகு மலையாளத்தில் சாய் பல்லவி, நிவின் பாலி நடிப்பில் ‘பிரேமம்’ படத்தை இயக்கி டிரெண்ட் செட் செய்தார். இதன் பிறகு ‘கோல்டு’ படத்தை இயக்கினார்.
நடிகர் விஜயிடம் தான் கதை சொல்லியதாகவும் அந்தக் கதையில் விஜய் தன் மகன் சஞ்சயை நடிக்க வைக்க விரும்பியதாகவும் இவர் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அல்போன்ஸ் புத்திரன், தான் ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‘தியேட்டருக்கான எனது சினிமா பயணத்தை நான் நிறுத்துகிறேன். நான் ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதை நான் நேற்றுத்தான் கண்டறிந்தேன். அதனால், நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. இனிமேல் நான் தொடர்ந்து பாடல்கள், வீடியோக்கள், குறும்படங்கள் மற்றும் அதிகளவில் ஓடிடியில் படங்கள் செய்ய முடிவெடுத்துள்ளேன்.
நான் சினிமாவை விட்டு விலக விரும்பவில்லை. ஆனால், எனக்கு வேறு வழியில்லை. தேவையில்லாமல் நான் உறுதி கொடுத்து அதை செய்ய முடியாமல் போக நான் விரும்பவில்லை. உடல்நிலை மோசமாகி வாழ்க்கை எதிர்பாராத சிக்கலில் இருக்கிறது. படத்தின் வலுவான இடைவேளைக் காட்சி போல உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைத் தனக்கு சிறுவயதில் இருந்தே இருந்ததாகவும் இப்போதுதான் அது குறித்தான புரிதல் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால், பதிவிட்ட கொஞ்ச நேரத்திலேயே அல்போன்ஸ் புத்திரன் தனது பதிவை டெலிட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.