‘மகாராஜா’ பட வாய்ப்பை இழந்ததற்கு காரணம் என் அப்பா பாக்கியராஜா? - சாந்தனு விளக்கம்


சென்னை: ‘மகாராஜா’ படத்தில் நடிகர் சாந்தனுதான் முதலில் நடிப்பதாக இருந்ததாக இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் கூறியிருக்கிறார். இதுபற்றி நடிகர் சாந்தனு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, அபிராமி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியான இது வெற்றி பெற்றதோடு ஓடிடி தளத்தில் பலதரப்பட்ட பார்வையாளர்களால் விரும்பப்பட்டது.

இந்தப் படத்தின் கதையை முதலில் நடிகர் சாந்தனுவுக்குதான் சொன்னதாக இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் சமீபத்திய யூடியூப் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். ‘மகாராஜா’ படக்கதையை முதலில் எடுப்பதாக இருந்தவருக்கு காலதாமதம் ஆனதால் பின்பு ‘குரங்கு பொம்மை’ படத்தை முதலில் இயக்கி இருக்கிறார். இதன் பிறகே ‘மகாராஜா’ படத்திற்காக விஜய்சேதுபதியை அணுகி படமாக்கினார்.

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பாக்கியராஜால்தான் சாந்தனுவுக்கு இந்தப் பட வாய்ப்பு கிடைக்காமல் போனதா என்று கேள்வி எழுப்ப அதுகுறித்து சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், ‘’மகாராஜா’ படத்திற்காக நித்திலனுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் கிடைப்பதில் மகிழ்ச்சி. சரியான கதையை நான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன் என பெருமைப் படுகிறேன். பத்து வருடங்களுக்குப் பிறகும் அவர் எனக்கான கிரெடிட்ஸ் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நான் நடிக்காமல் போக என் அப்பா காரணம் கிடையாது. அவருக்கு நித்திலன் என்னிடம் கதை சொன்ன விஷயமே தெரியாது. என்னை வைத்து அப்போது தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இப்போது கண்டெண்ட்தான் கிங் என்பதை அனைவரும் புரிந்து கொண்டார்கள். நல்ல திரைக்கதைக்கு எப்போதும் நான் ரசிகன். காலம் பதில் சொல்லும்’ என்று கூறியிருக்கிறார்.

x