நடிகர் சிங்கமுத்து தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக ரூ. 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என நடிகர் வடிவேலு முன்பு வழக்குத் தொடர்ந்திருந்தார்.
நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் சிங்கமுத்து. ஆனால், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக படங்களில் இணைந்து நடிப்பதை நிறுத்தினர். வடிவேலு நகைச்சுவை காட்சிகளில் தனக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று நினைப்பார், மற்ற நடிகர்களை வளர விட மாட்டார், உதவி செய்ய மாட்டார் மற்றும் நிலம் தொடர்பான பிரச்சினை என்றெல்லாம் அவரைப் பற்றி பல யூடியூப் சேனல்களில் பேட்டிகள் கொடுத்து வந்தார் சிங்கமுத்து. இதனால், கோபமடைந்த வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிங்கமுத்து மீது வழக்குப் பதிவு செய்தார்.
வடிவேலு தன் மனுவில் தெரிவித்திருப்பதாவது, ‘நகைச்சுவை நடிகராக இதுவரை நான் 300 படங்களில் நடித்திருக்கிறேன். நானும் சிங்கமுத்துவும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறோம். ஆனால், 2015-ஆம் வருடத்தில் இருந்து அவர் என்னை விமர்சித்து பேசி வருவதால் அவருடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தேன். மேலும், தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய நிலத்தை அவர் எனக்கு வாங்கிக் கொடுத்ததால் அவர் மீது தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
என்னைப் பற்றி யூடியூப் சேனல்களில் அவதூறு பரப்பும் விதமாக பேசி எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வருகிறார். இதற்காக, ரூ. 5 கோடி எனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். என்னைப் பற்றி பேசவும் தடை விதிக்க வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், நடிகர் சிங்கமுத்து இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.