மாரி செல்வராஜ் படங்கள் பயமுறுத்தும்: இயக்குநர் இரஞ்சித் பேச்சு!


மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் நிகிலா, கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘வாழை’. இம்மாதம் 23ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் இயக்குநர்கள் மிஷ்கின், பா. இரஞ்சித், மாரி செல்வராஜ், நெல்சன், நடிகர்கள் கவின், துருவ் விக்ரம் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் பா. இரஞ்சித் பேச்சு கவனம் பெற்றுள்ளது.

விழாவில் பேசிய பா.ரஞ்சித், “வீட்டில் நடக்கும் உணர்ச்சிகரமான விஷயங்களைக் கூட நான் படம் எடுக்க முடியாமல் அழுது விடுவேன். ஆனால், மாரி செல்வராஜ் தனது முதல் படத்திலேயே அழுத்தமான விஷயத்தைப் பேசியவர். மாரி செல்வராஜ், தான் சந்தித்த வலிகளை படமாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

மிகவும் எளிமையான கதைகளை ஜனரஞ்சகமாக மக்களிடம் கொடுக்க வேண்டும் என தெளிவாக இருக்கிறார். நடக்கும் கொடுமைகளை அப்படியே அவர் படத்தில் காட்டும்போது எனக்கு பயமாக இருக்கும். அவருடைய படங்களில் வலிகளைக் காட்டும்போது கைத்தட்டுபவர்கள், கர்ணன் சண்டை போடும்போது அதை வன்முறையாக மிகைப்படுத்தறாங்க. விமர்சனம் செய்யறாங்க. ’மாமன்னன்’ நல்ல படம் இல்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வாழ்க்கையை எளிமையாகப் பேசியிருக்கும் ‘வாழை’ படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.

x