ரூ.20 லட்சம் வாடகை பாக்கி விவகாரத்தில் அவதூறு: ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு யுவன் சங்கர் ராஜா வழக்கறிஞர் நோட்டீஸ்


சென்னை: ரூ.20 லட்சம் வாடகை பாக்கி விவகாரத்தில், தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பதிலுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. இவர், சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா 6-வது தெருவில் பஷீலத்துல் ஜமீலா என்பவரின் வீட்டை கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாடகைக்கு எடுத்து, ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்துள்ளார்.

அந்த வீட்டின் மாத வாடகை 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மற்றும் வைப்புத் தொகை 12 லட்சம் ரூபாய் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மாத வாடகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, யுவன்சங்கர் ராஜா, அவர் பயன்படுத்தி வந்த நுங்கம்பாக்கம் அலுவலகத்தை காலி செய்து அண்மையில் வெளியேறியுள்ளார்.

இந்நிலையில், யுவன்சங்கர் ராஜா தனக்குவாடகை பணம் சுமார் ரூ.20லட்சம் வரை பாக்கி வைத்துவிட்டு வெளியேறியதாக பஷீலத்துல் ஜமீலா தரப்பினர் திருவல்லிக்கேணி காவல் துறையில் புகார் அளித்தனர். அதன்படி, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், யுவன்சங்கர் ராஜா, தனது வழக்கறிஞர் மூலம்பஷீலத்துல் ஜமீலா தரப்பினரிடம், ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், 195 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளேன். 28 ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ளேன். தன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள உள்ளேன்.

எனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பஷீலத்துல் ஜமீலா தரப்பினர் தொடர்ந்து அவதூறு பரப்பி, மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர்.

எனது பெயரை களங்கப்படுத்தியற்காக அவர்கள் ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என யுவன்சங்கர் ராஜா, தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

x