வெங்கட் பிரபுவின் ‘கோட்’ பிரஸ்மீட் பரிதாபங்கள்: வில்லங்கமான கேள்விகளும், விவகாரமான பதில்களும்


சென்னை: விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ‘கோட்’ படத்தின் ட்ரெய்லர் குறித்தும், படம் குறித்தும் பல்வேறு தகவல்களை வெங்கட் பிரபு பகிர்ந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அதில் சிலர் வெங்கட் பிரபுவிடம் சில வில்லங்கமான கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அதற்கு சற்றும் டென்ஷன் ஆகாத வெங்கட் பிரபு தனக்கே உரிய பாணியில் நக்கலாக அளித்த பதில்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த பத்திரிகையாளர் சந்திப்பில், செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்கள் கேட்ட வில்லங்கமான கேள்விகளையும், அதற்கு வெங்கட் பிரபு அளித்த விவகாரமான ‘தக் லைஃப்’ பதில்களையும் பார்க்கலாம்:

கேள்வி: இந்த படத்தில் ஏன் இசையமைப்பாளர் இளையராஜாவை பாடவைக்கவில்லை? மேலும் நடிகை த்ரிஷாவை ஏன் ட்ரெய்லரில் காட்டவில்லை? அவர்கள் மேல் உங்களுக்கு அப்படி என்ன கோபம்?

வெங்கட் பிரபு பதில்: முதல்ல உங்களுக்கு என்ன கோபம்?

கேள்வி: இந்த படத்தில் அரசியல் இல்லை என்று சொன்னீர்கள். ஆனால் பாடலில் ‘பார்ட்டி’, ‘மைக்’ குறித்து வருகிறதே?

பதில்: அது என் பார்ட்டி சார். நாங்கள் பார்ட்டி வைத்தால் மைக் எடுத்து பாடுவோம். அதற்காக வைத்தது.

கேள்வி: காந்தி பெயரை வைத்து மது குடிப்பது போன்ற காட்சிகள் வைக்கலாமா?

பதில்: காந்தி என்ற பெயர் வைத்தாலே குடிக்கக் கூடாது என்பது என்ன நியாயம்? என் நண்பன் ஒருவனின் பெயர் காந்தி. அவன் என்னென்ன செய்கிறான் தெரியுமா? அதை எல்லாம் வெளியே சொல்லமுடியாது.

கேள்வி: படத்தில் விஜயகாந்த் ஏஐ மூலமாக வருவதாக சொன்னார்களே? அது உண்மையா?

பதில்: அப்படியே எல்லாவற்றையும் கேட்டுவிடுங்கள். எல்லா சர்ப்ரைஸையும் நானும் சொல்லிவிடுகிறேன்.

கேள்வி: ட்ரெய்லரின் இறுதியில் ‘மருதமலை மாமணியே’ பாடல் வருகிறதே? அது முப்பாட்டன் முருகன் மாதிரியான அரசியல் ரீதியான விஷயமா?

பதில்: ‘கில்லி’ ரீதியான விஷயம்.

கேள்வி: ’இனிமே குடிக்கவே கூடாது’ என்ற டயலாக் வருகிறது. அது ‘மங்காத்தா’ படத்தில் அஜித்தின் டயலாக்கா?

பதில்: அது வெங்கட் பிரபுவின் டயலாக். இரண்டு பேரையுமே நான் தான் பேச வைத்தேன்.

கேள்வி: ’தமிழக மக்கள் கழகத்தில்’ உங்கள் குடும்பத்திலிருந்து யாராவது எம்எல்ஏ ஆவார்களா?

பதில்: அது தமிழக வெற்றிக் கழகம். நாங்கள் எங்கள் குடும்பத்தில் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைவோம். அதை ஏன் நான் உங்களிடம் சொல்லவேண்டும்?

x