நடிகர் விஜய் தொடங்க இருக்கும் அரசியல் கட்சியின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 'GOAT' படத்தில் பிஸியாக உள்ளார். படங்களில் ஒருபக்கம் நடித்து வந்தாலும், விரைவில் அரசியல் களத்திலும் தடம் பதிக்கும் முடிவில் இருக்கிறார் நடிகர் விஜய்.
அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை, இரவுநேர பாடசாலை, இலவச சட்ட ஆலோசனை மையம், வெள்ளம் பாதித்த நெல்லை மாவட்டங்களில் உதவித்தொகை, பல மாவட்டங்களில் மருந்தகங்கள் என இவரது செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அரசியல் களத்தை நோக்கியதாகவே இருக்கிறது.
சமீபத்தில் கூட, நெல்லையில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவித்தொகைக் கொடுத்தார் நடிகர் விஜய். மேலும், தனது பேச்சுகளிலும் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை சூசகமாக வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில், பனையூரில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். அதில் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதைத்தொடர்ந்து, வரும் பிப்ரவரி 4-ம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தை முறைப்படி கட்சியாக பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளனர். இப்படியான சூழ்நிலையில்தான், நடிகர் விஜய் தனது கட்சிக்கு ‘தமிழக முன்னேற்றக் கழகம்’ என பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது விஜய் தரப்பால் உறுதிசெய்யப்படும். ’தமுக’ கட்சி எந்த அளவுக்கு இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.