திரை விமர்சனம்: தங்கலான்


பத்தொன்பதாம் நூற்றாண்டில், வட ஆர்க்காடு மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் தனது மனைவி கங்கம்மா (பார்வதி) மற்றும் குழந்தைகளோடு வாழ்ந்துவருகிறார் தங்கலான் (விக்ரம்). சட்டங்களைப் பயன்படுத்தி, அந்தப் பகுதி மக்களின் நிலங்களை அபகரித்து, அவர்களை அடிமையாக்கி வேலைவாங்கும் மிராசுதார் (முத்துக்குமார்), தங்கலானின் நிலத்தையும் அபகரிக்கிறார்.

இந்நிலையில் மைசூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட கோலாரில் தங்கத்தை வெட்டி எடுக்கும் வேலைக்கு அழைக்கிறார் ஆங்கிலேயர் கிளிமெண்ட் (டேனியல் கால்டகிரோன்). அந்தப் பகுதியை ஆரத்தி (மாளவிகா மோகனன்) எனும் வனதேவதை காப்பதாகவும் தங்கம் எடுக்க முயல்கிறவர்களை அமானுஷ்ய சக்திகள் மூலம் அழித்துவிடுவாள் என்றும் மக்கள் நம்புகிறார்கள். அடிமையாகக் கிடப்பதைவிட தங்கம் எடுப்பதில் கிடைக்கும் வருவாயில் நிலத்தை மீட்டு மரியாதையுடன் வாழலாம் என்ற கனவுடன் தங்கலான், இன்னும் சிலரை அழைத்துக்கொண்டு செல்கிறார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா? ஆரத்தியின் பின்னணி என்ன? தங்கலானை உள்ளடக்கிய பூர்வகுடி மக்களுக்கு ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை கிடைத்ததா? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக் கதை.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் ஆழமான அரசியல் கருத்துகளையும் தொடர்ந்து தனது படங்களில் பதிவு செய்யும் இயக்குநர் ரஞ்சித், இதில் மாய யதார்த்தக் (ஃபேன்டசி) கூறுகளையும் கையில் எடுத்திருக்கிறார். கோலாரில் தங்கம் எடுத்தது பட்டியலின மக்கள் என்னும் வரலாற்றுத் தகவலை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப்பிரபாவும் அவரும் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.

பூர்வகுடி மக்களின் வாழ்வியலை அழுத்தமாகப் பதிவு செய்யும் தொடக்கக் காட்சிகள், அந்தக் காலகட்டத்துக்கு அழைத்துச் செல்கின்றன. தங்கலானின் மூதாதையர் சார்ந்த தொன்மக் கதை, இன்னும் ஆர்வத்துடன் ஒன்ற வைக்கிறது. பவுத்தம் சார்ந்த குறியீடுகளில் ரஞ்சித் முத்திரைப் பளிச்சிடுகிறது. பூர்வகுடி மக்களுக்கான அரசியலைப் பேசும் வசனங்கள், பிரிட்டிஷாரும் அவர்களுக்குத் துரோகம் இழைப்பது எனப் பல முக்கியமான காட்சிகள் திரையுடன் ஒன்ற வைக்கின்றன.

ஆனால், எது தொன்மம் எது உண்மை என்பதைப் பிரித்தறிய முடியவில்லை. இதனால் கதையை முழுமையாக உள்வாங்குவதும் திரைக்கதையைப் பின் தொடர்வதும் சிரமமாக இருக்கின்றன. முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் சுவாரஸியமான காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்துக்கு மேல் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான காட்சிகளைப் பார்ப்பது போன்ற சலிப்பு ஏற்படுகிறது. இறுதியில் சொல்லப்படும் வரலாறு முக்கியமானது என்றாலும் அது உரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் அவசரமாகக் கடக்கும் உணர்வு ஏற்படுகிறது. பல இடங்களில் வசனங்கள் புரியவில்லை என்பதும் பெரும் குறை.

விக்ரம் நடிப்பில் இந்தப் படம் இன்னொரு மைல்கல். தோற்றம், உடல் அமைப்பு, உடல்மொழி, வசன உச்சரிப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் என அனைத்திலும் அபாரமான பங்களிப்பைத் தந்துள்ளார். அவருக்கு இணையாக நடிப்பில் அசத்தியிருக்கிறார் பார்வதி. தொடக்கக் காட்சிகளில் வசன உச்சரிப்பில் மட்டும் கொஞ்சம் அந்நியத்தன்மை தென்படுகிறது. வைணவத்தைப் பின்பற்றுபவராக பசுபதி. பிரிட்டிஷ் அதிகாரியின் தரகராகச் செயல்படும் ஆனந்த் சாமி ஆகியோர், நடிப்பில் முத்திரைப் பதிக்கிறார்கள்.

மாளவிகா மோகனன், வனதேவதை பாத்திரத்துக்கான தோற்றத்துக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் கடுமையாக உழைத்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ், பாடல்களிலும் பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார். ஏ.கிஷோர் குமாரின் ஒளிப்பதிவும் கலை இயக்குநரின் பங்களிப்பும் கதை நடக்கும் காலகட்டத்தை நேர்த்தியாகப் பதிவு செய்ய உதவியுள்ளன.

தங்கம் எடுப்பது தொடர்பான வரலாற்றையும் தொன்மத்தையும் இணைக்கும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் முழுத் திருப்தி அளித்திருப்பான் இந்தத் ‘தங்கலான்’.

x