நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். மக்களவைத் தேர்தலுக்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் விஜய் ‘லியோ’ படத்திற்குப் பிறகு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 'GOAT' படத்தில் பிஸியாக உள்ளார். படங்களில் ஒருபக்கம் நடித்து வந்தாலும், விரைவில் அரசியல் களத்திலும் தடம் பதிக்கும் முடிவில் இருக்கிறார் விஜய்.
அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை, இரவுநேர பாடசாலை, இலவச சட்ட ஆலோசனை மையம், வெள்ளம் பாதித்த நெல்லை மாவட்டங்களில் உதவித்தொகை, பல மாவட்டங்களில் மருந்தகங்கள் என இவரது செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அரசியல் களத்தை நோக்கியதாகவே இருக்கிறது.
சமீபத்தில் கூட, நெல்லையில் வெள்ளம் பாதித்த மக்களுக்கும் உதவித்தொகைக் கொடுத்தார் நடிகர் விஜய். மேலும், தனது பேச்சுகளிலும் நடிகர் விஜய் தனது அரசியல் நோக்கியப் பயணத்தை சூசகமாக வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த சூழலில்தான் இன்று பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை, கோவை, மதுரை என அனைத்து மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இவர்களுடன் நடிகர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
காலை 9 மணிக்குத் தொடங்கியுள்ள இந்தக் கூட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்திருக்கிறது. 150-க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற மக்களவைத் தேர்தல் குறித்தும் அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.