காமெடி நடிகர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்! - சிவகார்த்திகேயன்


சென்னை: துரை.செந்தில்குமார் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'கருடன்'. சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர். வெற்றிமாறன் எழுதிய கதைக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் கே.குமார் தயாரித்துள்ளார். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரக்கனி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, நடிகை வடிவுக்கரசி உட்பட பலர் கொண்டனர்.

விழாவில், சிவகார்த்திகேயன் பேசும்போது, “இதன் இயக்குநர் துரை. செந்தில்குமார் நான் நடித்த எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களை இயக்கியவர். எப்போதும் சிரித்துக்கொண்டே வேலை வாங்குபவர். அவருக்கு இன்னுமொரு வெற்றிப் படமாக இது இருக்கட்டும். நடிகர் சூரி அண்ணனிடம், கதையின் நாயகனாக நீங்கள் நடிக்கலாம் என்று முதன்முதலில், கதை சொன்னது நான்தான். ‘சீமராஜா’ படப்பிடிப்பில் நான் சொன்னபோது, அதெல்லாம் வேண்டாம் என்றார்.

பிறகு திடீரென்று ஒருநாள், ‘வெற்றி அண்ணன் கூப்பிட்டாரு தம்பி, ஹீரோவாக நடிக்க கேட்டார்’ என்றார். ‘கண்டிப்பா போய் நடிங்க’ என்று சொன்னேன். அவரின் திறமை என்னவென்று எனக்குத் தெரியும். காமெடியாக நடிக்கிற ஒருவரால் எமோஷனலாகவும் சீரியசாகவும் சிறப்பாக நடிக்க முடியும். காமெடியாக நடிப்பவர்களை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். சூரி நடிப்பில் நான் தயாரித்துள்ள ‘கொட்டுக்காளி’, ‘விடுதலை’ படத்தை விட ஒருபடி மேலாக இருக்கும்” என்றார்.

சசிகுமார் பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை கேட்கும் முன்பே, இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அது சூரிக்காகத்தான்” என்றார்.