’பொன்னியின் செல்வன்’ படத்திற்கு தேசிய விருது: நடிகர் விக்ரம் நெகிழ்ச்சி!


'பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் நான்கு தேசிய விருதுகளை வென்று குவித்துள்ளது குறித்து நடிகர் விக்ரம் நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். எம்.ஜி.ஆர். முதல் கமல்ஹாசன் வரை பலரும் படமாக எடுக்க ஆசைப்பட்டு பல்வேறு காரணங்களால் சாத்தியப்படாமல் இருந்த எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை மணி ரத்னம் திரையில் படமாக சாத்தியப்படுத்தினார்.

பொன்னியின் செல்வன் நாவலைப் படித்திருந்த 3 தலைமுறையினரையும் திருப்திப்படுத்தும் பெரிய சவாலுக்கு இடையே, நாவலை திரை வடிவமாக்கியதில் வெற்றி கண்டார் மணி ரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகிய இதன் முதல் பாகம் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகி இருந்தது.

இந்தப் படம் தமிழில் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த படமாகத் தேர்வாகி தேசிய விருது வென்றுள்ளது. இது தவிர்த்து சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி வடிவமைப்பு மற்றும் ஒளிப்பதிவு என நான்கு பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்று குவித்திருக்கிறது. இது குறித்து நடிகர் விக்ரம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ‘ரசிகர்கள் நீங்கள் கொடுத்த அன்பால் ‘பொன்னியின் செல்வன்1’ திரைப்படம் தேசிய அளவில் விருதுகளைக் குவித்துள்ளது. தமிழ் வரலாறு, இலக்கியம், சினிமா என இவை அனைத்தும் கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்திலும் வெற்றி குவித்துள்ளது’ எனச் சொல்லி இயக்குநர் மணி ரத்னம், ரவி வர்மன் மற்றும் ரஹ்மானுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

x