'லியோ' படத்தின் டிக்கெட் கிடைக்காத வெறியில் சுவர் ஏறி குதித்த விஜய் ரசிகரின் கால் உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. அரசு அனுமதித்த நேரத்திற்கு சற்று முன்னதாக 8:30 மணிக்கு, கிருஷ்ணகிரியில் உள்ள சாந்தி திரையரங்கில் 'லியோ' திரையிடப்பட்டது.
இதனால் அதிகாலையில் இருந்தே ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் கூடியிருந்ததால் ஊழியர்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே 'லியோ' படம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் 'லியோ' படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் ஆத்திரமடைந்த விஜயின் தீவிர ரசிகரான அன்பரசு என்பவர், திரையரங்க சுவர் ஏறி குதித்துள்ளார். இதில் அவரது கால் உடைந்தது. அதனைப் பொருட்படுத்தாமல் படம் பார்க்க தியேட்டருக்குள் சென்ற அவரை, போலீஸார் தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போதும், 'தளபதி படத்தை பார்க்க முடியவில்லை' என்று அவர் கதறித் துடித்த சம்பவம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.