லியோ திரைப்படம் தொடர்பான சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், தனி விமானம் ஒன்றில் நடிகர் விஜய், வெளிநாடு சென்றதாக வீடியோ பரவி வருவதால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட பாடல் வெளியீட்டு விழாவில் துவங்கி, அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பு வரை, லியோ படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரத்தை தொடர்ந்து கையாண்டு வருகிறது. நடிகர் விஜய் இந்த சர்ச்சைகள் தொடர்பாக இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தனி சொகுசு விமானம் ஒன்றில் இருந்து இறங்கி, கார் ஒன்றில் ஏறி விஜய் செல்லும், 6 நொடிகள் மட்டுமே ஓடும் ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோ காட்சிக்கு பின்னூட்டம் இட்டு வரும் ரசிகர்கள், இது சர்க்கார் படத்தில் வரும் விஜய்யின் அறிமுகக் காட்சி போன்று இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிலர் தற்போது ’விஜய் 68’ படத்தில் நடித்து வருவதால் அந்தப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விஜய் சென்று இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் இந்த வீடியோ காட்சி தொடர்பாக விஜய் தரப்பிலிருந்து நேரடியாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!
போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!