திரை விமர்சனம் - தங்கலான்


ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளியாகி இருக்கும் ‘தங்கலான்’ படத்தில் விக்ரம் மீண்டும் ஒருமுறை கதாபாத்திரங்களுக்கான தன் மெனக்கெடலை நிரூபித்திருக்கிறார். அசுரத்தனமாக உழைப்பை கொடுத்திருக்கிறார் என்பது ஒவ்வொரு ப்ரேமிலும் வெளிபடுகிறது.

கோலார் தங்க வயல் பகுதியில் தங்கம் எடுக்க விரும்புகிறார்கள் ஆங்கிலேயர்கள். இதற்காக, வட ஆற்காடு பகுதியில் வேப்பூர் கிராமத்தில் இருக்கற மக்கள் உதவியை கேட்கிறார்கள். அந்த ஊரில் தங்கள் சொந்த நிலத்தை ஜமீன்தாராரிடம் இழந்து, அடிமைப்பட்டு கிடப்பவர்கள் தங்கள் நிலத்தை மீட்க ஆங்கிலேயர்களுக்கு உதவுவதற்கு சம்மதிக்கிறார்கள். இதற்காக, தங்கலானும் ஊர் மக்களும் தங்கம் இருக்கும் இடத்திற்கு போக, அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்தான் ‘தங்கலான்’ .

விக்ரம், பார்வதி, மாளவிகா, பசுபதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தங்கலானாக அசுரத்தனமான உழைப்பைக் கொடுத்து நடித்திருக்கிறார் விக்ரம். கங்கம்மாவாக பார்வதி. கணவன், பிள்ளைகள் மீது அன்பு கொண்டவராக தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆரத்தி கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன். தங்க வளம் நிறைந்த காட்டை காப்பாத்தும் அரசியாக நடிப்பில் மிரட்டி இருக்கிறார். தங்கலானுடைய மூதாதையர் காடையனுடன் வரும் சண்டைக் காட்சிகளில் திரையரங்கில் அப்ளாஸ்களை அள்ளுகிறார் ஆரத்தி.

பூர்வ குடி பட்டியலின மக்கள் தங்கள் நிலத்தை மீட்க பலியான வரலாற்றை நாட்டார் கதை சொல்லல் வழியே படத்தில் சொல்லி இருக்கிறார் இரஞ்சித். தங்கலான் தான், சின்ன வயசுல வாய்மொழியா கேட்ட கதைகளை மேஜிக் ரியலிஸம் வழியாக காட்டுவது, பிரிட்டிஷ்காரன் கொடுத்த ரவிக்கையை முதல் முறையா பெண்கள் அணியும் போது அவர்களுடைய மகிழ்ச்சி போன்ற விஷயங்கள் படத்தின் ஸ்பெஷல் தருணங்கள். ஜிவி பிரகாஷ் இசை, கதையின் பல்ஸ் பிடித்து பார்வையாளர்களுக்கும் அதை கடத்துகிறது.

மூன்று மணி நேரம் என நீளும் காட்சிகளைக் குறைத்திருக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்புச் சுரண்டல், அவர்களுக்கான அதிகாரம், தங்கலானின் கடந்தகால, நிகழ்காலம் என அடிக்கடி காட்சிகள் மாறி மாறி வருவது சில இடங்களில் ரசிகர்களுக்கு அயர்ச்சியைத் தரலாம். இந்தக் குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால், தன் இன மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக போராடிய மக்களின் கதையை உணர்வுப்பூர்வமா செதுக்கி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் இரஞ்சித்.

x