'லியோ' சிறப்பு காட்சி வழக்கில் பரபரப்பு... நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என அமைச்சர் அறிவிப்பு!


'லியோ' திரைப்படம்

'லியோ' திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று மதியம் 1 மணிக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அக்.19-ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம், ஆனால் 5 காட்சிகளுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டது என தயாரிப்பு நிறுவன தரப்பில் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். இதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், "அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஏற்கெனவே, ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்நிலையில், ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், பட தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டதில்லை என அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், " 'லியோ' திரைப்படத்திற்கு 5 சிறப்பு காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரை உலகம் எங்களுடை நட்பு உலகம். திமுக அரசு திரைத்துறையை முடக்கவில்லை. அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துகிறோம்.

அமைச்சர் ரகுபதி

நலிந்த தயாரிப்பாளர்களின் படங்களை கூட வெளியிடுகிறோம். திரைஉலகம் செழிப்பாக இருப்பதற்கு திமுக அரசு தான் காரணம். 'லியோ' திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் 6 சிறப்பு காட்சிகள் கொடுக்கும் போது தான் 4 மணிக்கு கொடுக்கப்படும்" என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x