நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் கதைத்திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தப் படம் ‘கேப்டன் மில்லர்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது.
ஒடுக்கப்பட்ட தன் இனமக்களை உள்ளூர் அரசனிடமிருந்தும், பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் காத்து அவர்களுக்கான உரிமையை மீட்டுத் தருவதாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் கதை அமைந்திருக்கும். உண்மைச் சம்பவங்களை வைத்துதான் இந்தப் படத்தின் கதையை உருவாக்கியதாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பட வெளியீட்டிற்கு முன்பு கொடுத்தப் பேட்டிகளில் சொல்லி இருந்தார். இப்படியான சூழலில்தான் படத்தின் மீது கதைத்திருட்டு சர்ச்சை எழுந்திருக்கிறது.
பதிப்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனின் தன்னுடைய முகநூல் பக்கத்தில், ’சமீபத்தில்தான் தமிழ் திரைத்துறையைச் சார்ந்த இயக்குநர்கள் கொஞ்சம் வாசிப்புப் பக்கம் திரும்பி இருக்கிறார்கள் என்று இப்போதுதான் பலரிடமும் மகிழ்ச்சியாகப் பேச முடிகிறது. பார்க்க முடிகிறது. புதிய நூல்களைத் தேடித்தேடி வாங்குகிறார்கள். வாசிப்பு என்பது தங்களது அறிவை, கலை கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு புதியன படைப்பதற்காக இருக்க வேண்டும். அப்படித்தான் பலரும் இருக்கிறார்கள்.
ஆனால், சிலர் அப்படியே காப்பி அடைத்து பணம் சம்பாதிக்க என்று புரிந்துகொள்வது ஆபத்தானது. சமீபத்தில் இந்தப் போக்கு அதிகரித்து வருவது ஆரோக்கியமானது அல்ல. ஒரு படைப்பாளனின் படைப்பைத் திருடுவதுபோல ஒரு முட்டாள்தனமானது என்னவாக இருக்க முடியும்?
‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் நடிகர், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதி, டிஸ்கவரி வெளியிட்டுள்ள ’பட்டத்து யானை’ நாவலின் அப்பட்டமான திருட்டாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றம். படைப்பாளர்கள் குரல் கொடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். இதுகுறித்துப் படக்குழு இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை.