டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் ஷோயப் மாலிக் நடிகை சனா ஜாவத்தை மறுமணம் செய்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் இருவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தியா-பாகிஸ்தான் ஜோடி என்பதால் இந்த ஜோடியின் திருமணத்தில் ஆரம்பத்தில் சலசலப்பு எழுந்தது. இருந்தாலும் அதையும் தாண்டி, இந்த ஜோடி திருமண வாழ்க்கையைத் தொடர்ந்தது.
இவர்களுக்கு இசான் மிர்சா மாலிக் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகத் தகவல் பரவியது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சானியாவும் தனது சமூகவலைதளப் பக்கத்தில், விவாகரத்துக் குறித்து உருக்கமானப் பதிவு ஒன்றைப் பகிர்ந்து இருந்தார். இதனால், இந்த ஜோடி பிரிவது பற்றி பலரும் உறுதி செய்திருந்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத்தை சானியாவின் கணவர் ஷோயப் மாலிக் திருமணம் செய்துள்ளார். இந்தப் புகைப்படங்களை இப்போது சமூகவலைதளங்களில் இருவரும் பகிர்ந்துள்ளனர்.
இதனால், சானியா- ஷோயப் மாலிக் விவாகரத்து உறுதியாகியுள்ளது. நடிகை சனா ஜாவத்தும் ஏற்கெனவே பாடகர் உமர் ஜஸ்வாலைத் திருமணம் செய்து கடந்த வருடம் விவாகரத்துப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சானியா-ஷோயப் இருவருமே இதுவரை தங்களது பிரிவு குறித்து பொதுவெளியில் எதுவும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. எனினும், தங்கள் சமூகவலைதளப் பக்கங்களில் இருவரும் சேர்ந்து பகிர்ந்த புகைப்படங்களை நீக்கியுள்ளனர்.