'அன்னபூரணி' பட விவகாரம்... வருத்தம் தெரிவித்தார் நயன்தாரா!


நயன்தாரா

'அன்னபூரணி' பட விவகாரத்தில் மத உணர்வுகளை புண்படுத்தியதாக எழுந்த சர்ச்சையை அடுத்து நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து கடந்த டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸானது திரைப்படம் ’அன்னபூரணி’. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குநர் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடித்திருந்தார். இதில் இஸ்லாமியராக வரக்கூடிய ஜெய் கதாபாத்திரம், கடவுள் ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்றும், அர்ச்சகர் மகளான நயன்தாரா நமாஸ் செய்வது போலவும், அவர் இறைச்சி சாப்பிடுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவை இந்துமத உணர்வுகளை புண்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது. மேலும் படக்குழுவினர் மீதும் காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை இப்படி நீக்க வைப்பதா என அன்னப்பூரணி படத்திற்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன. இது போன்ற சூழ்நிலையில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என தொடங்கப்பட்ட ஒரு அறிக்கையில் மத உணர்வுகளைப் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என நயன்தாரா கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில், 'எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம். அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.

அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.

x