ஐநாக்ஸ் தியேட்டரில் 10 படம் பார்க்க ரூ.699 மட்டுமே... பிவிஆர் கொண்டுவரும் அசத்தல் சலுகை கட்டணத் திட்டம்!


ஐநாக்ஸ் திரை அனுபவம்

‘பிவிஆர் ஐநாக்ஸ் பாஸ்போர்ட்’ என்ற பெயரில் ஐநாக்ஸ் திரையரங்குகளில் 10 திரைப்படங்கள் பார்க்க ரூ699 என்னும் சந்தா திட்டத்தை பிவிஆர் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சந்தா திட்டம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

சினிமா ரசிகர்களின் பெரும் சவால்களில் ஒன்று டிக்கெட் கட்டணம். அதுவும் ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளில் விரும்பிய சினிமாவை ரசிப்பது என்பது பர்ஸை வெகுவாய் பதம் பார்க்கக்கூடியது. சாமானிய சினிமா ரசிகர்களின் இந்தக் கவலையை அகற்ற முன்வந்திருக்கிறது பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம்.

இந்த நிறுவனம் இன்று(அக்.14), ’பிவிஆர் ஐநாக்ஸ் பாஸ்போர்ட்’ என்ற பெயரில் புதுமையான திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளுக்கு சந்தா அடிப்படையில் அனுமதிப்பதில் இது முன்னோடித் திட்டம் என்றும் சொல்லப்படுகிறது.

பிவிஆர்

நாளை மறுநாள்(அக்.16) முதல் அமலுக்கு வருந்த இந்த சந்தா திட்டத்தின்படி, சினிமா பார்வையாளர்கள் மாதத்துக்கு 10 திரைப்படங்களை, ஐநாக்ஸ் திரையரங்கில் ரசிக்க ரூ699 செலுத்தினால் போதும். வார நாட்களில் திங்கள் முதல் வியாழன் வரை இந்த சலுகை செல்லுபடியாகும். ஐமேக்ஸ், கோல்ட், LUXE மற்றும் டைரக்டர்ஸ் கட் உள்ளிட்ட பிரீமியங்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.

அக்.13 அன்று, தேசிய சினிமா தினம் என்ற பெயரில் ஐநாக்ஸ் திரை அனுபவத்துக்கு ரூ99 டிக்கெட் கட்டணத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் தொடர்ச்சியாக தற்போதைய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

திரையரங்குகளில் பிரம்மாண்ட திரைப்படங்கள் மட்டுமே செல்லுபடியாகும் சூழல் நிலவுகிறது. சிறிய பட்ஜெட் படங்கள் ஜெயிப்பது சவாலாகிறது. சாமானியர்கள் மாதத்தில் ஓரிரு சினிமா காட்சிகள் மட்டுமே என்று தங்கள் பட்ஜெட்டை சுருக்குவதால், தரமான சிறிய படங்களை அவர்கள் தவிர்க்க நேரிடுகிறார்கள். இதனால் பெரிய நடிகர்களின் பெரிய படங்கள் மட்டுமே திரையரங்குகளில் ஜெயிக்கின்றன.

மாறாக புதிய பிவிஆர் சந்தா திட்டத்தின் மூலமாக, சினிமா ரசிகர் தான் விரும்பும் இதரப் படங்களையும் ஐநாக்ஸ் திரையரங்கில் அமர்ந்து ரசிக்க முடியும். இந்த வகையில் சினிமா உலகுக்கும் இது பெரும் வரப்பிரசாதம் என்கிறது பிவிஆர்.

பிவிஆர்

சென்ற தலைமுறை அளவுக்கு திரையரங்குகளை மொய்க்கும் சினிமா ரசிகர்களை இந்த சலுகைத் திட்டம் மீட்டு வரும் என்றும் பிவிஆர் நம்புகிறது. சினிமா டிக்கெட் கட்டணம் மட்டுமன்றி திரையரங்க வளாகத்தில் கிடைக்கும் தின்பண்டங்களின் விலையிலும் சுமார் 40% வரை குறைத்திருப்பதாக பிவிஆர் நிறுவனம் தெரிவிக்கிறது.

சாமானிய குடும்பங்கள், கல்லூரி மாணவ மாணவியர், இல்லத்தரசிகள் மற்றும் ஓய்வு பெற்றோர் என சினிமா பார்க்க ஆர்வமும், நேரமும் வாய்த்தவர்களை, இந்த சலுகைக் கட்டணம் ஐநாக்ஸ் திரையரங்குக்கு இழுத்து வரும் என்று நம்புகிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

x