கிராஃபிக்ஸ் பிரம்மாண்டமாக தெலுங்கில் உருவாகி, தமிழ் உட்பட உலகின் பல மொழிகளில் இந்த வாரம் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் ‘ஹனுமன்’. இதில் தேஜா சஜ்ஜா என்கிற வளரும் தெலுங்கு நாயகனுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நம்ம ஊர் தமிழ்ப் பெண் அமிர்தா ஐயர்.
‘பிகில்’ படத்தில் விஜயை பயிற்சியாளராகக் கொண்ட மகளிர் கால்பந்து அணியின் முக்கிய வீராங்கனையாக வந்து கவர்ந்தாரே அவரே தான். அதன் பிறகு சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த அமிர்தா, தற்போது கதாநாயகியாக வளர்ந்துவிட்டார். ‘ஹனுமன்’ ரிலீஸை முன்னிட்டு காமதேனுவுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது.
திருமணம் ஆகிவிட்டால் அத்தோடு கதாநாயகிகளின் திரையுலக மார்க்கெட் முடிந்துவிட்டது என்ற நிலைதான் இருபது வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. தற்போது அந்த நிலை மாறியிருப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
அம்மாக்களின் புரிதலும் ரசிகர்களின் ரசனை மாற்றமும் என்று சொல்வேன். பொதுவாக ஹீரோயின்களின் அம்மாக்கள், மகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் திருமணம் முடித்துவிட வேண்டுமே என்று கவலைப்பட்டு, சீக்கிரம் திருமணம் செய்து வைக்கத் துடிப்பார்கள். இப்போதுள்ள அம்மாக்களிடம் புரிதல் அதிகம். அதேபோல, “உனது பெர்சனல் வாழ்க்கையைப் பற்றி எங்களுக்கு என்ன இருக்கிறது. நீ நன்றாக நடித்தால் பார்ப்போம்” என்று ஏற்றுக்கொள்ளும்போது 20 ஆண்டுகளைக் கடந்தும் ஹீரோயின்களாக நடிக்க முடிகிறது. இது 30 வருடம் 40 வருடம் என்று தொடர்ந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இப்போதெல்லாம் திரையில் பெண்களை வெறும் சதையாகப் பார்க்கும் போக்கு மாறிவிட்டது; அல்லது குறைந்துவிட்டது என்பதே இதற்குக் காரணம்.
கதாநாயகிகள் பெரும்பாலும் காதல் திருமணம்தான் செய்துகொள்கிறார்கள். உங்களுக்கு காதல் திருமணத்தில் நம்பிக்கை இருக்கிறதா?
நிச்சயமாக. பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணத்தில் பாதுகாப்பு இருக்கிறது என்றுதான் சமூகம் நம்புகிறது. ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. உண்மையான காதலில் எனக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது. அதேநேரம் இன்று பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்களிலும் திருமணத்துக்கு முன்னர் ஆணும் பெண்ணும் சில மாதங்கள், பேசிப் பழகிப் பார்த்து ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள அவகாசம் தருவதும், பெற்றோர் அதை அனுமதிப்பதும் அதையும் காதல் திருமணமாக மாற்றிவிடுகிறது.
இதற்கு முன் யாரையும் காதலித்திருக்கிறீர்களா... அல்லது இப்போது யாரையாவது காதலிக்கிறீர்களா..?
பள்ளியில் தொடங்கி கல்லூரி வரை நான் கூடைப்பந்து வீராங்கனையாக இருந்தேன். அப்போது போட்டிகளுக்காக பல ஊர்களுக்குச் சென்றிருக்கின்றேன். ஒருமுறை போட்டி ஒன்றுக்குச் சென்றிருந்தபோது அற்புதமாக விளையாடிய கூடைப்பந்து வீரர் ஒருவர் மீது எனக்கு க்ரஷ் ஏற்பட்டது. அவ்வளவுதான் எனது காதல் அனுபவம். இப்போது இன்ஸ்டாவில் வந்து காதல் சொல்வது சகஜம். வாழ்க்கைக்கான காதலைத் தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது. நான் இப்போது எனது திரை வாழ்க்கையின் தொடக்கத்தில் இருக்கிறேன்.
‘ஹனுமன்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி..?
முதலில் இதை தெலுங்குப்படமாகத் தான் ஆரம்பித்தோம். கொஞ்ச நாளில் பான் இந்திய படமாகி, பின்னர் இப்போது பான் வேர்ல்ட் படமாக மாறியுள்ளது. ஹனுமனின் ஆசிர்வாதம் தான் அதற்குக் காரணம். இப்படத்தைப் பெரிய அளவில் எடுத்துச்சென்ற தயாரிப்பாளர்களுக்கு என் நன்றி.
இந்தப் படம் இந்திய சினிமா பெருமைப்படும் படமாக இருக்கும். ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடும் படமாக இருக்கும். சாதாரணப் பையனுக்கு ஹனுமனின் சக்தி கிடைத்தால் என்னாகும் என்பது தான் கதை. ஆனால், ஆன்மிகப் படமல்ல. இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிப்பார்கள்.
‘ஹனுமன்’ பட நாயகிக்கு இஷ்ட தெய்வம் யார்?
பிள்ளையார்!