நடிகை கௌதமி தொடர்ந்த நில மோசடி வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கெளதமி, தனக்கு நடந்த அநியாயத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்று கூறினார்.
நடிகை கௌதமி, காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள சுவாத்தான் கிராமத்தில் நிலம் வாங்கி தருவதற்காக ரூ. 3 கோடியை பெற்றுக் கொண்டு நிலம் வாங்கி தராமல் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்தை வாங்கி கொடுத்து பணத்தை மோசடி செய்ததாகவும் அவரிடம் இருந்து ஏமாற்றப்பட்ட தொகையை பெற்று தர வேண்டும் என்றும் கேட்டு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார் .
இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியார் ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் அவர்கள் ஜாமின் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அந்த ஜாமின் மனு மீதான விசாரணை இன்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கௌதமி தன்னுடைய வழக்கறிஞர் மூலம் நீதிபதியிடம் முறையிட்டுள்ளார்.
இந்த நிலையில் நீதிமன்றத்துக்கு வந்திருந்த கௌதமி செய்தியாளர்களிடம் பேசுகையில் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் நியாயம் கிடைக்கும் வரை இறுதிவரை போராடுவேன் என்றும் தெரிவித்தார்