நடிகர் மோகன்லால் குறித்து அவதூறு: பிரபல யூடியூபர் கைது!


நடிகர் மோகன்லால் குறித்து அவதூறு பரப்பியதற்காக பிரபல யூடியூபர் அஜூ அலெக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூடியூபர் அஜு அலெக்ஸ் பத்தனம்திட்டாவில் உள்ள திருவல்லாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் செகுதான் என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று நடிகர் மோகன்லால் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாகப் பார்வையிட்டார். பின்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்விற்காக ரூ.3 கோடி நன்கொடையாக வழங்கினார். இதுபற்றி விமர்சித்த யூடியூபர் அஜூ, மோகன்லால் மற்றவர்களின் நேரத்தை வீணடிப்பதற்காக அங்கு வந்ததாகவும், அவருக்கு சுயமரியாதை இல்லை என்றும் கூறி சர்ச்சையை கிளப்பினார். மேலும், வயநாட்டிற்கு நிதி திரட்டும் மோகன்லாலின் முயற்சிகளையும் அவர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இந்த விஷயம்தான் அவரை கைது வரை கொண்டு சென்றிருக்கிறது. மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளரான நடிகர் சித்திக் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யூடியூபர் அஜூ மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 192 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதல்) மற்றும் 296 பி (பொது இடத்தில் அல்லது அருகில் ஏதேனும் ஆபாசமான வார்த்தைகளை உச்சரித்தல்) மற்றும் பிரிவு 120 (ஓ) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

x