சிவகார்த்திகேயனை சிபாரிசு செய்த கமல்ஹாசன்: பிக்பாஸ்-8 தொகுப்பாளர் யார்?


சென்னை: பிக் பாஸ் தமிழின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பெயரை சிபாரிசு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்பே ஒத்துக் கொண்ட சினிமா பணிகள் காரணமாக அடுத்து ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் விலகியதும் அடுத்த தொகுப்பாளர் யார் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

முன்பு கமல் பிஸியாக இருந்தபோது, அவருக்குப் பதிலாக ஓடிடி சீசனை நடிகர் சிம்புவும், சில வாரங்களுக்கு ரம்யா கிருஷ்ணனும் தொகுத்து வழங்கி இருந்தார்கள். இதனால், இவர்களில் ஒருவர் எட்டாவது சீசனை தொகுத்து வழங்குவார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சிம்பு அடுத்தடுத்தப் படங்களில் பிஸியாக இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லை என சொல்லப்பட்டது.

இதற்கடுத்து நடிகர்கள் விஜய்சேதுபதி, சரத்குமார், பார்த்திபன் எனப் பலருடைய பெயர்கள் அடிபட்டது. ஆனால், கமல்ஹாசன் தன் தரப்பில் இருந்து சிவகார்த்திகேயன் பெயரை பிக் பாஸ் தொகுத்து வழங்க சிபாரிசு செய்திருக்கிறாராம். விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளராக வளர்ந்தவர் சிவகார்த்திகேயன். ’அது இது எது?’, ‘கலக்கப் போவது யாரு?’, நடன ரியாலிட்டி நிகழ்ச்சி எனத் தொகுப்பாளராக ரசிகர்களைக் கவர்ந்தவர்.

இப்போதும் சிவகார்த்திகேயன் முன்பு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை யூடியூபில் ரிப்பீட் மோடில் பார்க்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதோடு, கமலின் குட் புக்கிலும் சிவகார்த்திகேயன் இருக்கிறார். தம்பி என உரிமையாகக் கூப்பிடும் அளவுக்கு சிவகார்த்திகேயன் மீது அன்பு வைத்திருக்கிறார் கமல். அவரது தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனை கருத்தில் கொண்டே பிக் பாஸ் தொகுப்பாளராக பரிந்துரைத்திருக்கிறார் கமல்ஹாசன். விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவகார்த்திகேயன் மீண்டும் தொகுப்பாளராக அவதாரம் எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

x