'மின்மினி’ என் அதிர்ஷ்டம்: இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மான் நெகிழ்ச்சி!


’மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானது தனக்கு மகிழ்ச்சி என இசையமைப்பாளர் ரஹ்மானின் மகள் கதிஜா தெரிவித்திருக்கிறார்.

’பூவரசம் பீப்பி’, ‘சில்லுக்கருப்பட்டி’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ஹலிதா ஷமீம். இவரது இயக்கத்தில் ‘மின்மினி’ என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் கதிஜா ரஹ்மான். முன்பு ரஹ்மான் இசையில் 'எந்திரன்' படத்தில் வெளியான 'புதிய மனிதா...' பாடலில் கதிஜா பாடகராக பலரையும் கவர்ந்தார். ’மின்மினி’ படத்தில் அவரது அற்புதமான பின்னணி இசை மற்றும் மெலோடி பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மான், "இதுபோன்ற மனதுக்கு இதமான பாராட்டுக்களைக் கேட்பது எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். சரியான வழிகாட்டுதலுடன் எனது பலத்தை வளர்த்த என் குடும்பத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் தான் எல்லாப் புகழும்.

தமிழ்த் திரையுலகில் எனது இசைப் பயணத்தைத் தொடங்க ‘மின்மினி’ போன்ற ஒரு படம் எனக்குக் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய அதிர்ஷ்டம் என்று சொல்வேன். இந்தப் படத்தின் எமோஷன் மற்றும் சூழல் எனக்கு சிறந்த இசை அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இதயத்தைத் தொடும் நல்ல செய்தியுடன் சிறந்த இயக்கமும் ஒளிப்பதிவும் இருப்பது இந்தக் கதையின் பலம். இந்த வாய்ப்பைக் கொடுத்து எனக்கு ஆதரவு கொடுத்து நம்பிக்கையளித்த ஹலிதா ஷமீம் மேம், மனோஜ் பரமஹம்சா சார் மற்றும் முரளி சாருக்கும் எனது நன்றி” என்றார்.

x