நீங்கள்தான் எங்கள் பதக்கம்: மல்யுத்த வீராங்கனை வினேஷூக்கு திரைப்பிரபலங்கள் ஆறுதல்


ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகள் விளையாட்டு ஆர்வலர்களின் கவனத்தைக் குவித்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வினேஷ் போகத் கியூபா வீராங்கனையைத் தோற்கடித்தார். மேலும், ஒலிம்பிக் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். இன்று ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் வினேஷ் போட்டியிடுவதாக இருந்தது.

இதற்காக, இன்று காலை அவருக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் நிர்ணயிக்கப்பட்ட எடையான 50 கிலோவைத் தாண்டி 100 கிராம் அதிகமாக இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வினேஷூக்குப் பலரும் ஆறுதலும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். திரைப்பிரபலங்களும் வினேஷூக்கு ஆறுதல் பதிவு பகிர்ந்துள்ளனர்.

நடிகை பார்வதி தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘நீங்கள்தான் எங்கள் தங்க பதக்கம்! எங்களின் வெற்றி! உங்களுக்கு சல்யூட்!! எப்போதும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ எனக் கூறியிருக்கிறார். அதுபோல நடிகை சமந்தாவும், ‘உறுதியானவர்களுக்கு இதுபோன்ற கஷ்டம் வரும். ஆனால், இதை விட பெரிய சக்தி ஒன்று உங்களைப் பார்த்துக் கொண்டுள்ளது. இதுபோன்ற கடின சூழ்நிலைகளிலும் உங்கள் உறுதி எங்களை பிரம்மிக்க வைக்கிறது. உங்களுடன் நாங்கள் இருப்போம்’ எனக் கூறியிருக்கிறார்.

x