இயக்குநர் ஷங்கர் - ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ டப்பிங் பணி தொடக்கம்!


சென்னை: இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம் சரணுடன் தெலுங்கில் கைக்கோத்திருக்கும் படம் ‘கேம் சேஞ்சர்’. ‘இந்தியன்2’ படத்துடன் இந்தப் படத்தையும் இணையாக இயக்கி வந்தார் ஷங்கர். ஒருக்கட்டத்தில் ஷங்கர் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் பிஸியாக இருந்ததால், அவருக்குப் பதிலாக முன்பு ஷங்கரிடம் அசோசியேட் இயக்குநர்களாக இருந்த வசந்தபாலன் உள்ளிட்ட சில இயக்குநர்கள் ‘இந்தியன்2’ படத்தின் பெரும்பகுதியை இயக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இந்தியன்2’ படத்திற்கு கடும் விமர்சனங்கள் வந்ததை அடுத்து, ‘இந்தியன்3’ படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறாராம் ஷங்கர். அதற்கு முன்பாக, இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ‘கேம் சேஞ்சர்’ படப் பணிகளை முடித்துவிட தீவிரம் காட்டி வருகிறார். இப்போது, அந்தப் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் மூலம் ஷங்கர் கம்பேக் கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

x