காலை வெட்ட சொன்னார்கள்: ‘தங்கலான்’ படவிழாவில் நடிகர் விக்ரம் உருக்கம்!


விபத்து ஒன்றில் மாட்டிக் கொண்ட போது தன் காலை வெட்டச் சொன்னார்கள் என நடிகர் விக்ரம் 'தங்கலான்’ விழாவில் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

நடிகர் விக்ரம் விழாவில் தனது ஆரம்பகால நடிப்புப் பயணம் அதில் சந்தித்த சவால்கள் உள்ளிட்ட அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. கல்லூரியில் ’பிளாக் காமெடி’ என்ற நாடகத்தில் நடித்து சிறந்த நடிகராக விருது பெற்றேன்.

ஆனால், அன்றைய தினமே எதிர்பாராமல் ஒரு விபத்து நடந்து விட்டது. அதில் என் காலை வெட்டி எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி 23 அறுவை சிகிச்சை செய்தார்கள். என்னால் நடக்க முடியாது என்று என் அம்மாவிடமும் சொல்லிவிட்டார்கள். பின்பு, அதில் இருந்து படிப்படியாக மீண்டு வந்தேன்.

சினிமாவில் வாய்ப்புகள் வர ஆரம்பித்த பின்னரும் உடனே வெற்றிக் கிடைத்துவிடவில்லை. பலமுறை சினிமாவை விட்டுவிட சொல்லி நண்பர்கள் சொன்னார்கள். ஆனால், எப்போதும் சினிமாவுக்கு முயற்சி செய்து கொண்டேதான் இருந்திருப்பேன். ‘தங்கலான்’ படம் பற்றி நான் போகும் இடமெல்லாம் கேட்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை உருவாக்கியவர் இரஞ்சித் தான். அவருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. உங்கள் பேச்சுக்கு வலிமை இருக்கிறது. அதை சரியாக கையாளுங்கள்” என்றார்.

x