’மஞ்சுமெல் பாய்ஸ்’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: இழப்பீடு பெற்றார் இளையராஜா!


'மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் தனது பாடலை அனுமதி பெறாமல் பயன்படுத்தியதற்காக, இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வருடத் தொடக்கத்தில் மலையாளத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் வெளியானது. தமிழிலும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கொடைக்கானலில், குணா குகையில் விழுந்த தனது நண்பரைக் காப்பாற்றும் கதைதான் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’.

இந்தப் படத்தில் ‘குணா’ படத்தில் இடம்பெற்றிருந்த இளையராஜாவின் ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை ’மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் பயன்படுத்தி இருந்தார்கள். தான் இசையமைத்த இந்தப் பாடலை உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தி இருப்பதாகவும் இதற்காகத் தனக்கு ரூ. 2 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் எனவும் இளையராஜா இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

பாடலின் உரிமையாளர்களான பிரமிட் மற்றும் ஸ்ரீதேவி சவுண்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் முறைப்படி அனுமதி வாங்கிய பிறகே, இந்தப் பாடலை படத்தில் பயன்படுத்தியதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனி விளக்கம் சொல்லியிருந்தார். இதையடுத்து, இளையராஜாவை நேரில் சந்தித்த ’மஞ்சுமெல் பாய்ஸ்’ தயாரிப்பாளர். ரூ.60 லட்சம் இழப்பீட்டுத் தொகை கொடுத்து நீதிமன்றம் செல்லாமல் தங்களுக்குள் சமரசம் செய்துக் கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

x