மும்பை பங்களாவை ரூ.40 கோடிக்கு விற்கிறார் கங்கனா ரனாவத்?!


மும்பையில் உள்ள தனது பங்களாவை நடிகையும், பாஜக எம்.பி.,யுமான கங்கனா ரனாவத் ரூ. 40 கோடிக்கு விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கங்கனா ரனாவத்துக்கு சொந்தமாக மும்பை, பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தயாரிப்பு நிறுவனமான மணிகர்னிகா பிலிம்ஸ் அலுவலகமும் உள்ளது. கங்கனா தனது பெரும்பாலான நேரத்தை புது தில்லி மற்றும் இமாச்சல பிரதேசத்தில் செலவழித்து வரும் நிலையில், தனது பாந்த்ரா பங்களாவை ரூ. 40 கோடிக்கு விற்பனை செய்ய இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இது குறித்து உறுதிப்படுத்தப்பட்டத் தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

கோட் எஸ்டேட் எனப்படும் யூடியூப் சேனல் தயாரிப்பு அலுவலகமாக செயல்படும் வீடு ஒன்று விற்பனைக்கு இருப்பதாகச் சொல்லி வீடியோ ஒன்றைப் பகிரப்பட்டுள்ளது. அந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் உரிமையாளரின் பெயர் வெளியிடப்படவில்லை என்றாலும், வீடியோவில் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை வைத்து, அது கங்கனாவின் அலுவலகம் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 2020ல், சட்டவிரோத கட்டுமானத்தைக் காரணம் காட்டி இந்த வீட்டின் சில பகுதிகளை மும்பை மாநகராட்சி இடித்தது. செப்டம்பர் 9ம் தேதியன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்குப் பிறகு இடிக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மும்பை மாநகராட்சியின் இந்த செயலுக்கு எதிராக கங்கனா வழக்குத் தொடர்ந்து இழப்பீடாக ரூ. 2 கோடி கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

x