தி கேரளா ஸ்டோரி; இது கேரளத்தின் கதையே இல்லை!


தி கேரளா ஸ்டோரி

ஒரேவிடுதியில் தங்கிப்படிக்கும் மாற்று மத மாணவிகளை, இஸ்லாமிய மாணவி மூளை சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத நடவடிக்கைக்கு அனுப்புவதாக விரியும் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரைலரே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் இந்தப் படத்தைத் திரையிட்டால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை எழும் என உளவுத்துறையே எச்சரித்தது. கேரளத்திலோ, இந்தப் படத்தை முதல்வர் பினராயி விஜயனே முன்வரிசையில் நின்று எதிர்க்கிறார். எப்போதும், பினராயி விஜயனுக்கு எதிர்துருவத்தில் நிற்கும் காங்கிரஸ் கட்சியும் அவரோடு கைகோத்து ‘தி கேரளா ஸ்டோரி’யை எதிர்க்கிறது. இப்படம் பேசும் கருத்தியலால் கேரளத்திற்கு அப்படி என்ன தான் பிரச்சினை?

தி கேரளா ஸ்டோரி

இஸ்லாமிய வாலிபர்கள் மாற்றுமதத்தைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து, முஸ்லிமாக மாற்றுவதாகவும் லவ் ஜிகாத் என்னும் பெயரில் அது கேரளத்தில் புனிதப் போராக முன்னெடுக்கப்படுவதாகவும் தொடர்ந்து வலதுசாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை கேரள அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது.

இந்நிலையில் தான் விபுல்ஷா தயாரிப்பில், சுதிப்டோ சென் இயக்கத்தில் ’தி கேரளா ஸ்டோரி’ உருவாகி இருக்கிறது. கேரளத்தில் ஒரு விடுதியில் ஒரு முஸ்லிம் பெண்ணும், மாற்று மதங்களைச் சேர்ந்த மற்ற மூன்று மாணவிகளும் தங்கிப் படித்து வருகின்றனர். அதில் இஸ்லாமியப் பெண், மூளைச் சலவையுடன் கட்டாய மதமாற்றம் செய்து, சக மாணவிகளை தீவிரவாத நடவடிக்கைக்காக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ப்பதாக விரிகிறது இந்தப் படத்தின் கதை.

கேரளம் இந்த விஷயத்தில் கொந்தளிக்க இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. படத்தின் துவக்கத்தில் கேரளத்தில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு 32 ஆயிரம் பேர் சென்றிருப்பதாகச் சொல்லும் செய்தி. இது உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் எனச் சொல்லப்படுவது - இந்த இரண்டும் தான் கேரளத்தைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

பினராயி விஜயன்

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கேரளத்தில் லவ் ஜிகாத் என்பதே பொய் பிரச்சாரம் என்று சொல்லி உச்சநீதிமன்றமே அதை நிராகரித்து உள்ளது. வகுப்புவாதத்தைத் தூண்டுவது, அரசுக்கு எதிரான ஆயுதமாக, பிரச்சாரமாக இப்படத்தை பயன்படுத்துவது மட்டுமே படம் எடுத்தவர்களின் நோக்கம். இது சங்பரிவாரக் கும்பலின் பொய் தொழிற்சாலையில் உருவான படைப்பு’ என காட்டம் காட்டினார்.

’தி கேரளா ஸ்டோரி’யின் ட்ரைலரே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கேரள அரசு கேரளத்தில் படத்தை வெளியிடத் தடை கேட்கவோ, சட்ட நடவடிக்கை எடுக்கவோ இல்லை. இதுகுறித்து பேச அண்மையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகளை நேரில் அழைத்தார் பினராயி விஜயன்.

ரகசியமாக நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் பினராயி விஜயன் பேசியவற்றை நம்மிடம் பகிர்ந்த கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், “அந்தக் கூட்டத்தில் எங்கள் மத்தியில் பேசிய தோழர் பினராயி விஜயன், ‘இப்படம் பொய்யானது. போலி பரப்புரை. ஆனால் அதேநேரத்தில் திரைப்படத்தில் ஏதோ ஒரு சிந்தாந்தத்தைச் சொல்வதும், மிகைப்படுத்தியோ, சேதப்படுத்தியோ சொல்வதும் அவரவர் கருத்துரிமை. இந்தப் படம் பொய். போலியானது என்பதை பரப்புவதும், படத்தை நம் வட்டத்தில் இருக்கும் தோழர்கள் நிராகரிப்பதுமே சரியான அணுகுமுறையாக இருக்கும்; தடைசெய்வது அல்ல.

மோடிக்கு எதிரான பிபிசியின் ஆவணப்படத்தை எந்த கருத்துரிமையை ஆயுதமாகக் கொண்டு நாம் ஊரெல்லாம் திரையிட்டோமோ, அதே கருத்துரிமையை எதிர்தரப்புக்கும் கொடுத்து விமர்சனத்தால் எதிர்கொள்வோம். நம் கண்முன்பு இருக்கும் நல்வாய்ப்புகளில் ஒன்று, இப்படத்தைத் தோழர்கள் திரையரங்கில் பார்க்காமல் நிராகரிப்பதுதான்’ என்றார்” என்று சொன்னார்.

எம்.வி.கோவிந்தன்

படத்திற்கு கேரளத்தில் தடைகோரி மார்க்சிஸ்ட்களை வைத்து பினராயி வழக்குத் தொடுப்பார் என்று படக்குழுவினர்கள் கணித்தார்கள். அப்படி வழக்குத் தொடுத்தால் அதைவைத்து படத்தை புரமோட் செய்துவிடலாம் என்ற வியாபாரக் கணக்கும் இதற்குள் இருந்ததாகச் சொல்கிறார்கள். அதற்கெல்லாம் இடமளிக்காமல் பினராயி அமைதிகாத்தது படக்குழுவினரை கொஞ்சம் இறங்கி வர வைத்தது.

‘கேரளத்தில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்குச் சென்ற 32 ஆயிரம் பேரின் கதை’ என ட்ரைலரில் இருந்தது. அது இப்போது ‘ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்குச் சென்ற மூன்று பெண்களின் கதை’ என மாற்றப்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் 60 பேர் வரை இணைந்திருப்பதாக கேரள அரசு முன்பு ஒருமுறை அதிகாரபூர்வமாகவே தெரிவித்ததும் இங்கே கவனிக்கத்தக்கது.

இவ்விவகாரம் குறித்து கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் எம்.கோவிந்தனிடம் பேசினோம். “ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இந்தியாவிலேயே உத்தரபிரதேசத்தில் தான் அதிகம் பேர் உள்ளனர். ஆனால், படக்குழுவின் நோக்கம் கேரளத்தின் நற்பெயரை, குறிப்பாக இடதுசாரிகள் ஆளும் மாநிலத்தின் பெயரைக் கெடுப்பதுதான்.

அதிலும் படத்தின் ட்ரைலரில் அடுத்த இருபது ஆண்டுகளில் கேரளம் முழுமையான இஸ்லாமிய நாடாக இருக்கும் என முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார் என்பது போல் வசனம் வைத்துள்ளனர். திரைப்படத்தை எப்படி வேண்டுமானாலும் எடுத்துவிட்டுப் போகட்டும். இதற்கு கேரளா ஸ்டோரி என பெயரும், உண்மைக்கதை என்ற அடைமொழியும் ஏன்? இந்தப் படத்தை நாங்கள் எதிர்க்கக் காரணமே இது கேரளாவின் கதை இல்லை என்பதால் தான்” என்றார் அவர்.

தமிழகத்திலும் எதிர்ப்பு

காங்கிரஸ் கட்சியும் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீஷன் நம்மிடம் பேசுகையில், “இது நிச்சயம் கருத்து சுதந்திரம் கிடையாது. படக்குழுவின் நோக்கம் கேரளத்தை சிறுமைப்படுத்தும் முயற்சியே. எனவே இந்தப் படத்தை நிச்சயம் தடைசெய்ய வேண்டும்” என்றார்.

தோழர்களும் கதர்சட்டைக்காரர்களும் ஒருமுகமாய் இந்தப் படத்தை எதிர்க்கும் அதேசமயம், பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரிகள் இந்தப் படத்தை வரவேற்றுக் கொண்டாடு கிறார்கள். இதன் மூலம் கேரளத்தின் உண்மைக் கதை வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக படக்குழுவையும் பாராட்டுகிறார்கள்.

”இது நிச்சயம் எந்த ஒரு மதத்திற்கும் எதிரான படம் அல்ல. மதத்தின் பெயரால் மூளைச் சலவை செய்யும் தீவிரவாத அமைப்புகளைப் பற்றி பேசும் படம். கேரளம் அதிகம் கல்வியறிவு கொண்ட மாநிலம். கேரள மண்ணில் இப்படத்திற்காக நான் முழுதாக ஏழு ஆண்டுகள் உழைத்துள்ளேன். ட்ரைலரை மட்டுமே பார்த்துவிட்டு பலரும் விமர்சிக்கிறார்கள். முழு படத்தையும் பார்த்த பின்பு விவாதிக்கலாம். நாம் அனைவரும் இந்தியர்கள். அந்தவகையில் அவர்களின் நானும் ஒருவன்” என விளக்கம் அளித்துள்ளார் படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென்.

இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ ஒருவித பதற்றத்துடனேயே தியேட்டர்களில் கதை சொல்லிக் கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் இந்தப் படத்தை தடைசெய்ய வேண்டும் என தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தன. ஆனாலும் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்தப் படம் மற்ற மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ... ஆனால் கேரளத்தில், அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்!

x