#32YearsofAjith: ரணங்களும் சாதனைகளும்; ரத்தம் சொட்ட சொட்ட ‘விடாமுயற்சி’ அஜித்தின் புது போஸ்டர்!


நடிகர் அஜித் திரையுலகிற்கு வந்து 32 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக ‘விடாமுயற்சி’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் ‘அமராவதி’ படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அவர் திரைத்துறைக்கு வந்து 32 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக ‘விடாமுயற்சி’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிளாக் அண்ட் வொயிட்டில் வெளியாகி இருக்கும் அந்தப் போஸ்டரில் இரத்தம் சொட்ட சொட்ட ஆக்ரோஷமாகி இருக்கிறார் அஜித். இதோடு, ‘32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும் யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி’ என்ற கேப்ஷன் கொடுத்து அஜித்தை சிறப்பித்து இருக்கிறது.

பார்க்க பளிச்சென்று இருக்கும் முகம், கொள்ளை கொள்ளும் சிரிப்பு, தேர்ந்த நடிப்பு என சினிமா ஹீரோவுக்கான எல்லாத் தகுதிகளோடு அஜித் சினிமாவிற்குள் நுழைந்தாலும் அவரை திரைத்துறை ஆரம்பத்தில் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கவில்லை.

’காதல் மன்னன்’, ‘ஆசை’ என தொடக்கத்தில் சினிமா கதாநாயகனாக வலம் வந்தவர் பின்பு ‘சிட்டிசன்’, ‘ரெட்’ என ஆக்‌ஷன் நாயகனாகவும் தனக்கான இடத்தை வலுப்படுத்தினார். பின்பு, முன்னணி கதாநாயகன் என்ற அந்தஸ்தையும் அடைந்தார் அஜித். சினிமாவில் இவர் போராடி பெற்ற இந்த இடத்தை சிறப்பிக்கும் வகையில் ‘விடாமுயற்சி’ படக்குழு வெளியிட்டிருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்திருக்கிறது.

x