திரை விமர்சனம்: மழை பிடிக்காத மனிதன்


‘கோலி சோடா’, 'கோலி சோடா2' போன்ற ஃபீல் குட் படங்களை கொடுத்த இயக்குநர் விஜய் மில்டன், நடிகர் விஜய் ஆண்டனியுடன் கைக்கோர்த்திருக்கும் படம் 'மழை பிடிக்காத மனிதன்'. விஜய் ஆண்டனியுடன் மேகா ஆகாஷ், சத்யராஜ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

கதைப்படி வெளி உலகத்திற்கு நடிகர் விஜய் ஆண்டனி இறந்து விட்டார். ஆனால், அவர் சீக்ரெட் ஏஜெண்ட்டாக நிழல் உலகில் வலம் வருகிறார். விஜய் ஆண்டனி சீஃப்பாக சரத்குமார் இருக்கிறார். இவரின் தங்கையை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் விஜய் ஆண்டனி. சென்னையில் இருக்கும் அமைச்சர் ஒருவர் விஜய் ஆண்டனி உயிரோடு இருப்பதை தெரிந்து கொண்டு அவரைக் கொல்ல வேண்டும் என்று ஸ்கெட்ச் போட, அதில் எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனியின் மனைவி இறந்து விடுகிறார்.

இனியும் இந்தப் பிரச்சினைகள் வேண்டாம், புது வாழ்க்கையை ஆரம்பி என்று விஜய் ஆண்டனியை அந்தமானில் கொண்டு விடுகிறார் சரத்குமார். அங்கு விஜய் ஆண்டனியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது? என்ன மாதிரியான பிரச்சினைகளை அவர் சந்திக்கிறார்? அமைச்சர் ஏன் விஜய் ஆண்டனியை தேடுகிறார் போன்ற கேள்விகளுக்கு விடை தான் ‘மழை பிடிக்காத மனிதன்’.

படம் முழுக்க சீரியஸான முகத்துடன், வசனங்களை அளவாய் அளந்து பேசும் கதாபாத்திரம் விஜய் ஆண்டனிக்கு. தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். சரத்குமாருக்கு இது பழக்கப்பட்ட கதாபாத்திரம் என்பதால் இயல்பாக செய்திருக்கிறார். கேமியோவில் வரும் சத்யராஜ் கதாபாத்திரம் இன்னும் அழுத்தமாக எழுதப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் எழாமல் இல்லை. விஜய் ஆண்டனியின் நண்பன் பர்மா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ப்ருத்வி நியாயம் சேர்த்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். படத்தில் விஜய் ஆண்டனிக்கும் நாய்க்குட்டிக்கும் இடையில் இருக்கும் அழகான தருணங்கள் ரசிகர்களைக் கவர்கிறது.

படத்தில் அச்சு ராஜாமணி, விஜய் ஆண்டனியுடன் சேர்ந்து இன்னும் மூன்று பேர் இசையமைத்திருக்கிறார்கள். ஆனால், படத்தின் பாடல்கள் எதுவுமே மனதில் நிற்கும் படியாக இல்லை. சில இடங்களில் ஒளிப்பதிவு ‘வாவ்’ சொல்ல வைத்தாலும், பல இடங்களில் வித்தியாசமாக செய்கிறேன் பேர்வழி என வைத்திருக்கும் கேமரா கோணங்களும் ஆக்‌ஷன் காட்சிகளும் ரசிகர்களை நெளிய வைக்கிறது. முதல் இருபது நிமிடங்கள் மெதுவாக நகரும் திரைக்கதை இடைவேளை வரை விறுவிறுப்பாக நகர்கிறது. வலுவில்லாத வில்லன், யூகிக்கக் கூடிய இரண்டாம் பாதி, சுமாரான திரைக்கதை என ’மழை பிடிக்காத மனிதன்’ தடுமாறுகிறது.

x