தேநீர் நேரம் - 21: சினிமா கொட்டகைகள் உருவான சரித்திரம்!


லூமியர் சகோதரர்கள் உருவாக்கிய சினிமாடோகிராஃபி

சினிமாக்களைப் பற்றி பத்தி பத்தியாக பேசியும் எழுதியும் வருகிறோம். ஆனால், இந்த சினிமா என்னும் கலையைக் காலமெல்லாம் மக்களிடத்தில் விரித்துக்காட்டி அக் கலையை வாழவைத்துக்கொண்டிருக்கிற திரையரங்குகள் பற்றி எப்போதாவது பேசியிருப்போமா என்றால் அது அரிதிலும் அரிதுதானே?

திரைப்படங்கள் குறித்து உரையாடுகிறவர் எவருக்கும் திரையரங்குகள் குறித்தும் உரையாடுவதன் முக்கியம் புரிந்துவிடுவதில்லை. திரையரங்குகளின் தோற்றம், வளர்ச்சியென்பதும் சினிமாவின் வரலாற்றின் பகுதிதான் என்பதை மறக்கக்கூடாது. இங்கே திரையரங்குகளின் பிறப்பு பற்றியும் பார்த்துவிடுவோம்.

எத்தனையோ ஆய்வுகளுக்குப் பிறகு, எத்தனையோ முயற்சிகளுக்குப் பின்னர் இப்போதுள்ள சினிமா காட்டும் கருவியான புரொஜக்டரின் முன்னோடி வடிவத்தை உருவாக்கியவர்கள் லூமியர் சகோதரர்கள். அவர்கள் உருவாக்கிய கருவிக்கு சினிமாடோகிராஃபி என்பது பெயர். அதில் படச்சுருளை ஓடவிட்டபடியே அதில் ஒளியை ஊடுருவச் செய்து வெள்ளைத் திரையில் அந்த ஒளியைப் பாய்ச்ச அதிலே அசையும் படம் தெரிந்தது. இதைக் கண்ட உலகம் வியந்தது. வியந்ததுமட்டுமா..?

லூமியர் சகோதரர்கள்

இது ஏதோ சாத்தானின் வேலை, பில்லி சூனியம் வைத்துவிட்டார்கள், உலகத்தின் அழிவுக்கான தருணம் நெருங்கிவிட்டது என்றெல்லாம் அறிவியலைப் புரிந்துகொள்ளாத பழமைவாதிகள் கூப்பாடு போட்டார்கள். சினிமா தயாரிக்க முன்வந்தவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். பல இடங்களில் தாக்கப்பட்டுத் துரத்தப்பட்டார்கள். இது நடந்தது அமெரிக்காவிலேயேதான். தப்பித்த திரைப்படக் கலைஞர்கள் லாஸ்ஏஞ்செல்ஸ் பகுதியின் அடர்ந்த காடுகளுக்குள் சென்றுவிட்டார்கள். அந்தக் காடுகளில் தங்கிப் படப்பிடிப்பை நடத்தத் தொடங்கினார்கள். அந்தக் காடுதான் இன்றைய ஹாலிவுட்.

அங்கே நடிகர்களை ஆடவிட்டார்கள். சண்டை போடவிட்டார்கள். பாடியும் பேசியும் கதாபாத்திரங்கள் நடித்தபோதிலும் சப்தம் எழுப்ப இயலவில்லை அந்தநாளின் சினிமாவினால். அதனால் அதைப் பேசாப்படம் என்றே விளித்தார்கள். திரைப்படங்கள் கதைப்படங்களாக உருவாகின. லூமியர் சகோதரர்களின் படப்பெட்டி பெருமளவுக்குத் தயாராகி உலகம் முழுதும் விற்பனைக்கும் படம் காட்டி மக்களை மகிழ்விக்கவும் போயிற்று. அப்படியொரு படப்பெட்டியோடு கூடவே ஒரு சினிமா படமும் முதன்முதலில் இந்தியாவுக்கு வந்துசேர்ந்தது. அந்தப் படத்தின் பெயர் ‘ஏசுவின் வாழ்க்கை’. 1896-ம் ஆண்டு பம்பாயில் இந்தப் பேசாப்படம் காட்டப்பட்டது. இந்தப் படம் இந்தியாவில் 4 வருடங்கள் ஓடியது. காரணம் வேறொன்றுமில்லை. அதற்கு அடுத்து வேறொரு படம் தயாராகி வந்துசேரவில்லை.

இந்தியாவுக்கு அந்தப் படத்தைக் கொண்டுவந்து பல நகரங்களிலும் போய்க் காட்டிக் கொண்டிருந்தார் டியூபான்ட் என்ற பிரெஞ்சுக்காரர். ‘ஏசுவின் வாழ்க்கை’ படத்துடன் திருச்சி வந்த அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே அவரது நாட்டுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம். அவர் கொண்டுவந்த படத்தை ஆச்சரியத்தோடு விழி இமைக்காமல் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்த எத்தனையோ பேர்களில் சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவரும் ஒருவர். யாரந்த சாமிக்கண்ணு வின்சென்ட்?

சாமிக்கண்ணு வின்சென்ட்

கோவையைச் சேர்ந்த சாமிக்கண்ணு வின்சென்ட் திருச்சி பொன்மலை ரயில் நிலையத்தில் வேலை செய்துவந்தார். தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் தன்னிடமிருந்த படம் காட்டும் கருவியை யாரிடமாவது விற்றுவிட்டு பிரான்சு தேசத்திற்குத் திரும்பிட எண்ணினார் டியூபான்ட். அதை அறிந்து அவரைத் தொடர்புகொண்ட வின்சென்ட் தனது மனைவியின் நகைகளை விற்று தன்னிடமிருந்த பணத்தையும் சேர்த்து 2,250 ரூபாய் கொடுத்து டியூபான்ட்டிடமிருந்த அந்த சினிமா புரொஜக்டர், படச் சுருள்கள் மற்றும் அதனைச் சேர்ந்த கருவிகளை விலைக்கு வாங்கினார்.

அதுவரையில் தான் பார்த்துவந்த ரயில்வே வேலையை விட்டுவிடத் துணிந்தார் சாமிக்கண்ணு. அந்த வேலையை விட்டுவிட்டு ‘ஏசுவின் வாழ்க்கை’ படத்தையும் அதைக் காட்டும் கருவிகளையும் சுமந்துகொண்டு ஊர்ஊராகப் புறப்பட்டார். தமிழகத்தைக் கடந்து மற்ற மாநிலங்களுக்கும் பயணித்து ஆங்காங்கே டேரா போட்டு மிகுந்த ஆர்வத்தோடு சினிமா காட்டினாராம் சாமிக்கண்ணு வின்சென்ட். அதுதான் டூரிங் சினிமா என்றும் பின்னர் டென்ட் கொட்டகை என்றும் ஆனது. சினிமா பிரதிகள் அதிகம் தயாரிக்கப்படாத அந்தக் காலத்தில், இருக்கிற படச்சுருளை எடுத்துக்கொண்டு ஊர்ஊராகப் போய் படம் காட்டவேண்டிய நிலை. அதனால்தான் அதற்கு டூரிங் சினிமா, டூரிங் டாக்கீஸ் என்றெல்லாம் பெயர் வந்தது.

மெல்ல மெல்ல படத் தயாரிப்புகள் அதிகரிக்கவும் அந்த டூரிங் சினிமாக்கள் ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து படங்காட்ட நேர்ந்தது. அதன் தொடர்ச்சியாகவே நிரந்தரக் கொட்டகைகள் அதாவது பர்மனென்ட் தியேட்டர்கள் உதயமாயின. தமிழக சினிமாவின் வரலாற்றைத் துவக்கிவைத்த சாமிக்கண்ணு வின்சென்ட்தான் தமிழகத்தின் நிரந்தர சினிமாக் கொட்டகைக்கும் அச்சாரமிட்டார்.

1914-ல், தனது சொந்த ஊரான கோவையில் அவர் ஒரு நிரந்தர சினிமாக்கொட்டகையைக் கட்டினார். அதற்கு ‘வெரைட்டி ஹால்’ என்பது பெயர். அதுதான் தென்னிந்தியாவின் முதல் நிரந்தர சினிமாக் கொட்டகையாகும்.

அதனைத் தொடர்ந்துதான் சென்னையிலும் மற்ற ஊர்களிலும் சினிமாக் கொட்டகைகள் முளைத்தன. சினிமாவுக்கு மவுசு அதிகரித்ததால் நாடகக் கொட்டகைகள் பலவும் சினிமாக் கொட்டகைகளாக மறுபிறவி கண்டன. லாபம் அதிகம் கிடைக்கும் தொழில் என்பதால் நெல் அரைக்கும் மில்களும்கூட சில ஊர்களில் சினிமாக் கொட்டகைகளாயின.

படங்கள் பேசாத காரணத்தால் விறுவிறுப்பாகக் காட்சிகளை வைத்தே படங்களை உருவாக்கினார்கள். அத்தோடு, திரையரங்குகளிலேயே கவர்ச்சி நடனங்கள், தேகப்பயிற்சி வித்தைகள், விகடக் கச்சேரி என்று பல்சுவை நிகழ்ச்சிகளையும் நடத்தவேண்டியிருந்தது. ரசிகர்களைச் சோர்வடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய பெரும் பொறுப்பு அந்தநாளின் சினிமாக்காரர்களுக்கு அதிகமாக இருந்தது. படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே அருகில் ஒருவர் நின்றுகொண்டு படத்தின் கதையையும் ஆங்காங்கே வசனங்களையும் உரத்த குரலில் சொல்லி விளங்கவைப்பார்.

அதுவரையில் மேலை நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட படங்களையே நம்மவர்கள் தியேட்டர்களில் காட்டிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் நம்மவர்களுக்கும் நம் நாட்டிலேயே சினிமாவை உருவாக்கினால் என்ன என்று தோன்றியது. அது 1911-ம் ஆண்டு. ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு இங்கிலாந்தில் முடிசூட்டு விழா. அப்போது நடந்துகொண்டிருந்தது பிரிட்டிஷ் ஆட்சியல்லவா? அதனால் நமது டெல்லியில் தர்பார் அலங்கார அணிவகுப்பு நடந்தது. அதனை ஒரு வெள்ளையர் சினிமாவாகப் படம் பிடித்து திரையிட்டார். அதைப் பார்த்த நம்மவர்களுக்கு நம் இந்தியாவில்கூட சினிமா படம் பிடிக்கலாம் போலிருக்கிறதே என்று வியப்பு தோன்றியிருக்கிறது.

தாதாசாகேப் பால்கே

அதைத் தொடர்ந்து நம் நாட்டிலேயே படங்களைத் தயாரிக்கலாம் என்று பலரும் எண்ணினார்கள். அதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்தான் இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கே. அவரே திரைக்கதை எழுதினார். அன்றைய சினிமாதான் பேசவில்லையே. அதனால் வசனம் அவசியமில்லையே. அவரே டைரக்ட் செய்தார். அவரே லேப் வைத்து ஃபிலிமை டெவலப் செய்தார். அவரே எடிட் செய்தார். அப்படி தாதாசாகேப் பால்கே உருவாக்கிய இந்தியாவின் முதல் திரைப்படம் ‘ராஜா ஹரிஸ்சந்திரா’ 1913-ல் வெளிவந்து வரலாறு படைத்தது.

ராஜா ஹரிஸ்சந்திரா படத்தில்...

சென்னையைச் சேர்ந்த ஆர்.நடராஜ முதலியார் மோட்டார் வணிகம் செய்துகொண்டிருந்தார். அவரைப் புணே நகருக்கு அழைத்துச் சென்று படப்பிடிப்பு பற்றிய நுட்பங்களை அறியச் செய்தார் லார்டு கர்சானின் தர்பாரில் வேலை செய்துவந்த ஸ்டீவர்ட் ஸ்மித் என்பவர். அப்படி சினிமாவைக் கற்றுவந்த நடராஜ முதலியார் சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் ஸ்டூடியோ ஒன்றை நிறுவினார். அங்கே எம்.எஸ். தர்மலிங்க முதலியார் துணையோடு ‘இந்தியா ஃபிலிம் கம்பெனி’ என்ற பெயரில் திரைப்பட நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார். இங்கேயும் பால்கே போலவே நடராஜ முதலியாரே இயக்குநர், கேமராமேன், எடிட்டர் எல்லாம்.

நடராஜ முதலியார்

சென்னையில் படப்பிடிப்பு நடக்கும், பெங்களூரில் லேபரட்டரி. ஒவ்வொரு வாரமும் ஞாயிரன்று அதுவரையில் எடுக்கப்பட்ட படச் சுருளோடு பெங்களூர் போவார் நடராஜ முதலியார். முதன் முதலில் அப்படி அவரால் 35 நாட்களில் எடுக்கப்பட்ட படம்தான் ‘கீசகவதம்’. 1916-ல் வெளிவந்த தென்னிந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் பேசாப்படம் அதுதான். தொடர்ந்து ‘திரௌபதி வஸ்திராபஹரணம்’, ‘மயில் ராவணா’, ‘மார்க்கண்டேயா’ போன்ற படங்களைத் தயாரித்தார் நடராஜ முதலியார்.

அந்த சமயத்தில் இந்தியர்கள் பலரும் சினிமாத் தொழிலில் இறங்கியிருந்தார்கள். இதனால் 1918-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய சினிமாட்டோகிராப் சட்டம் ஒன்றை அமலாக்கியது. 1920-ல், பம்பாய், கல்கத்தா, சென்னை, ரங்கூன் நகரங்களில் தணிக்கை வாரிய அலுவலகங்களைத் திறந்தது. இந்த நெருக்கடிகளாலும் நிதிநிலை பாதிக்கப்பட்டதாலும் 1923-ல் சினிமாத் தொழிலையே கைவிட்டார் நடராஜ முதலியார்.

அப்போது சென்னையில் பேசாப்படங்களைத் திரையிட்டுக்கொண்டிருந்தவர்களுள் ஆர்.வெங்கையா என்பவரும் ஒருவர். அவர் ஒரு வெற்றிகரமான புகைப்படக் கலைஞரும்கூட. 1909- ல் அவர் திரைப்படம் தொடர்பான ஒரு கண்காட்சியைக் காண நேர்ந்தது. க்ரோனோ மெகாபோன் ஃபிலிம் புரொஜக்டர் மற்றும் கிராமபோன் பிளேயர் அடங்கிய கூட்டுக் கருவியின் கண்காட்சி அது. அவரை அது மிகவும் கவர்ந்துவிட்டது. உடனே அதை 30 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிவிட்டார்.

ஆர்.வெங்கையா

ஏற்கெனவே அன்றைய மதறாசில் 1911-ல் திருமதி கிளக்கின் பயாஸ்கோப் மற்றும் வார்விக் மேஜரின் எலக்ட்ரிக் பயாஸ்கோப் ஆகிய தியேட்டர்கள் இயங்கிக்கொண்டிருந்தன. அத்துடன் எஸ்பிளனேட் பகுதியில் ஒரு கூடார அரங்கை சோதனை முயற்சியாக அமைத்தார் வெங்கையா.

படிப்படியாக 1913-ல் தனது முயற்சியால் 3 திரையரங்கங்களை அவர் உருவாக்கினார். அவற்றில் கெயிட்டி முதன்மையானது. இந்தியர் ஒருவரால் கட்டப்பட்ட சென்னையின் முதல் முழுமையான திரையரங்கு அதுதான். ஆங்கிலேய ஆட்சியில் அவர்களின் மனங்கவர் கோடைவாசஸ்தலமாக இருந்த சிம்லாவில் 1887- ல் ஹென்றி இர்வின் வடிவமைத்துக் கட்டிய கெயிட்டி தியேட்டரால் கவரப்பட்ட வெங்கையா தனது கனவுத் திரையரங்குக்கும் அந்தப் பெயரையே வைத்தார்.

சிம்லா கெயிட்டி திரையரங்கம்

சிம்லாவின் கெயிட்டி அளவுக்கு அழகியல் அம்சங்களில் நிறைவாக இல்லையென்றாலும் சிம்லா கெயிட்டியில் 300 பேர்தான் அமர இயலும் என்ற நிலையில் சென்னையில் வெங்கையாவின் கெயிட்டி 800 பேருக்கு இடமளித்தது. அவ்வளவு விஸ்தாரமாக அதனை வடிவமைத்திருந்தார் அவர். இந்த கெயிட்டி அமைந்த இடம் அப்போது சென்னையில் மண்ணெண்ணெய் சில்லறை விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பெங்களூரின் தொழிலதிபர் ஹாஜி சர் இஸ்மாயில் சேட் என்பவருக்குச் சொந்தமானது. அந்த இடத்தைத்தான் வெங்கையா குத்தகைக்கு எடுத்திருந்தார்.

சென்னை கெயிட்டி திரையரங்கம்

காலப் போக்கில் வெங்கையாவுக்கும் படத்தயாரிப்பில் இறங்க விருப்பம் வந்தது. அதனால் தனது மகன் ரகுபதி பிரகாஷாவை சினிமாத் தொழிலில் பயிற்சிபெற்றுவர லண்டனுக்கு அனுப்பினார். ஒரு வருடம் பயிற்சி. அப்போது வெள்ளையர்கள் இந்தியர்களைக் கீழானவர்களாக மதித்துவந்த காலம். லண்டன் வாசம் ரகுபதிக்கு இனிக்கவில்லை. “கருப்பு நாயே உனக்கு சினிமா ஒரு கேடா” என்றுகூட அந்தப் பயிற்சியின்போது அவரை ஆசிரியர் ஒருவர் தனது ஷூவினால் முகத்தில் உதைத்து விரட்டிய சம்பவமெல்லாம் அங்கே நடந்திருக்கிறது. இப்படியான கடுமையான சிரமங்களோடுதான் ரகுபதி பிரகாஷா திரைப்பட உருவாக்கத்தைக் கற்று இந்தியா திரும்பினார்.

சென்னை வேப்பேரியில் ஒருலட்ச ரூபாய் செலவில் தனது தந்தை வெங்கையாவின் ஸ்டார் ஆப் தி ஈஸ்ட் ஃபிலிம் கம்பெனிக்காக ஒரு ஸ்டூடியோவை நிறுவினார் பிரகாஷா. அங்கே முதன்முதலில் 12 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது ‘பீஷ்ம பிரதிக்ஞா’ (1922) என்ற பேசாப்படம். அது பெரிய அளவில் ஹிட் ஆகி 60 ஆயிரம் ரூபாயை வசூலித்துத் தந்தது. தொடர்ந்து 3 படங்களை உருவாக்கிய பிரகாஷா, கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்தார். கடன் தொல்லை வேறு வந்துசேர்ந்தது. அதன் காரணமாக, அந்த ஸ்டூடியோ மூடுவிழா கண்டது. வெங்கையாவின் தியேட்டர்கள் பல கட்டங்களில் பல கைகளுக்கு மாறின.

இப்படித்தான் இந்தியாவில், தென்னகத்தில், தமிழ்நாட்டில் சினிமாவை ரசிகர்களிடத்தில் எடுத்துச்செல்லும் திரையரங்கங்கள் ஒருசில தனிமனிதர்களின் ஆர்வத்தினாலும் கடும் உழைப்பு முயற்சிகளாலும் கண்ணீராலும் வியர்வையாலும் உருவாகி சினிமா என்ற கலையை இங்கே வேரூன்ற வைத்தன!

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

தேநீர் நேரம்- 20 : எம்.கே. தியாகராஜ பாகவதர் எப்போது அந்த முடிவை எடுத்தார்?

வீடியோ வடிவில் காண:

தேநீர் நேரம் - 21: சினிமா கொட்டகைகள் உருவான சரித்திரம்!

x