நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளார். இதுதொடர்பான பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பிரிட்டனில் இருந்து நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரை கடந்த 2021ல் வாங்கி இருந்தார். கோஸ்ட் சீரிஸ்1 சொகுசுவகையைச் சேர்ந்த இந்த காரைப் பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவகலத்திற்க்கு எடுத்துச் சென்ற போது தான் விஜய்க்கு பிரச்சினை வெடித்தது. வெளிநாட்டு இறக்குமதி கார் என்பதால் பலமடங்கு நுழைவுவரி விதிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த விஜய் இதனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை நாடினார். ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதி விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு நுழைவு வரியையும் கட்ட சொல்லி உத்தரவு பிறப்பித்தார். இந்த செய்தி அப்போது ஊடகங்களிலும் வைரலானது.
இந்நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனைசெய்ய முடிவெடுத்திருக்கிறார் நடிகர் விஜய். ரூ.3.5 கோடி மதிப்புள்ள இந்த காரை ரூ. 2.6 கோடிக்கு விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது எம்பயர் ஆட்டோஸ் என்ற ப்ரீமியம் கார் டீலர்ஷிப் நிறுவனம். இதற்காக, ரோல்ஸ் ராய்ஸ் காரை பல கோணங்களில் வீடியோ எடுத்து அதனை சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
‘பீஸ்ட்’ படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்தக் காரில் தான் படக்குழுவினர் சிலரை அழைத்து சென்று குஷிப்படுத்தினார் விஜய். மினிகூப்பர், இனோவா எனப் பல கார்களை விஜய் வைத்திருந்தாலும் இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரைத் தானே ஓட்டிச் செல்வதில் ஆர்வம் காட்டினார். அப்படியான இந்த காரை அவர் விற்பனைக்குக் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.