தேநீர் நேரம்- 19: உத்தம புத்திரன் போனதால் நாடோடி மன்னனை பிடித்த எம்ஜிஆர்!


பானுமதி - எம்ஜிஆர்

எம்ஜிஆர் தனது கலைத்துறை வாழ்க்கையில் அடிப்படை மாற்றங்களை எப்படியெல்லாம் கண்டடைந்தார் என்பதை அறிந்தால் ஆச்சரியமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். இன்றும்கூட அவை வியப்பாகவே இருக்கும்.

அப்போது எம்ஜிஆர் நாடக மன்றத்தை அவர் உருவாக்கியிருந்த நேரம். அப்போதே எம்ஜிஆர் பிக்சர்ஸ் என்ற சொந்தப் பட நிறுவனத்தையும் தொடங்கிவிட்டார். முன்பு பி.யு.சின்னப்பா நடித்து வெளிவந்த ‘உத்தம புத்திரன்’ படத்தை மறுபடியும் எடுக்க வேண்டும். அதில் தானும் இரட்டை வேடங்களில் நடிக்கவேண்டும் என்று எம்ஜிஆருக்கு விருப்பம். அது 1950-களின் நடுப்பகுதி. எம்ஜிஆர் நடிக்கும் ‘உத்தம புத்திரன்’ படம் குறித்த விளம்பரம் முன்னணி நாளிதழில் வெளிவந்தது. அதேநாளில் அதே பத்திரிகையில் இன்னொரு விளம்பரமும் இருந்தது. சிவாஜி இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘உத்தம புத்திரன்’ படத்தின் விளம்பரம் தான் அது.

எம்.வி.ராஜம்மா - பி.யு.சின்னப்பா

ஏற்கெனவே 1940-ல் பி.யு.சின்னப்பாவை வைத்து ‘உத்தம புத்திரனை’ எடுத்திருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திடம் அந்தத் திரைக் கதையின் உரிமையை வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டிருந்தார்கள். அவர்கள் தான் சிவாஜியை வைத்து ‘உத்தம புத்திரனை’ எடுக்கிறார்கள் என்று தெரிந்ததும் அந்தப் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் எம்ஜிஆர். என்றாலும் இரட்டை வேடத்தில் படமெடுக்கும் திட்டத்தை எம்ஜிஆர் கைவிடவில்லை.

சிவாஜி, நம்பியார், கண்ணாம்பா

‘பிரிசனர் ஆஃப் ஜென்டா’ (1937) என்ற படத்தின் கதையையும் ‘இஃப் ஐ வேர் கிங்’ (1938) என்ற படத்தின் கதையையும் ‘விவா ஜபட்டா’ (1952) என்ற படத்தின் கதையையும் கலந்து ஒரு அற்புதமான திரைக்கதையை எம்ஜிஆருக்காக உருவாக்கினார்கள் எம்ஜிஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவினர். அதுதான் ‘நாடோடி மன்னன்’. ஆர்.எம்.வீரப்பன், வித்வான் வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோர் அப்போது எம்ஜிஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் இருந்தவர்கள். இவர்களுக்கு உதவியாக இருந்த ரவீந்தரும் கவியரசு கண்ணதாசனும் வசனமெழுதுவது என்று முடிவானது.

‘நாடோடி மன்னனை’ இயக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட இயக்குநர் அந்தப் பணியில் இணைய முடியாமல் போனது. எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி உறுதியாகச் சொன்னார்: "இந்தப் படத்தைத் தம்பி எம்ஜிஆர் இயக்கினால் செய்யட்டும். இல்லையென்றால் ‘நாடோடி மன்னன்’ படமே வேண்டாம்!" இதை மறுத்து எம்ஜிஆர் எவ்வளவோ வாதாடிப் பார்த்தார். இறுதியில் வேறு வழியே இல்லாமல் ‘நாடோடி மன்னன்’ படத்தை இயக்க எம்ஜிஆர் ஒத்துக்கொண்டார். படத்தில் அவருக்குச் ஜோடி பானுமதி. நம்பியார், எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, சந்திரபாபு, ஜி.சகுந்தலா, எம்.என்.ராஜம் ஆகியோரும் இதில் நடித்தார்கள். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்தார்.

நாடோடி மன்னன் படத்தில்...

படத்தில் இன்னொரு எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜா தேவியை ஒப்பந்தம் செய்தார்கள். சரோஜாதேவியை முதன்முதலில் எம்ஜிஆருக்கு அறிமுகம் செய்துவைத்தவர் இயக்குநர் கே.சுப்பிரமணியம். இவரை எம்ஜிஆர் தனது குருவாக மதித்தார். அதனால் அவரின் சிபாரிசு சரோஜா தேவிக்கு உடனே க்ளிக் ஆனது.

முதல் கதாநாயகி பானுமதிக்கு இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டது. அதனால் பாதி படத்திலேயே அவர் வெளியேறிவிட்டார். படத்தின் கதையில் பானுமதி முதுகில் குத்தப்பட்டு வீழும் காட்சிதான் கடைசியாக எடுக்கப்பட்டது. கதையின் போக்கிலும் அவர் இறப்பதாக இருந்ததால் அத்துடன் அவரது பகுதியை முடித்துவிட்டார்கள்.

பின்னாளில், தான் தமிழ்நாட்டை ஆளப்போவதை மனதில் வைத்தே ‘நாடோடி மன்னன்’ படத்தை எடுத்ததுபோல படத்தில் எம்ஜிஆரின் கதாபாத்திரம் அமைந்துபோனது தற்செயலானதுதான். எம்ஜிஆர் பிக்சர்ஸ் சின்னத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கைகளில் திமுக கொடியைப் பிடித்திருப்பதுபோல வடிவமைத்தார் எம்ஜிஆர். திரையில் அதைக் காட்டும்போது ‘செந்தமிழே வணக்கம்’ என்ற சுரதாவின் பாடல் பின்னணியில் ஒலிக்கும். ‘பார்புகழும் உதய சூரியனே... பசியின்றி புவி காக்கும் பார்த்திபனே...’ என்று அந்தப் பாடலின் இறுதி வரிகள் இயம்பின.

ஒவ்வொரு காட்சியையும் மிகவும் சிரத்தையுடன் செதுக்கினார் எம்ஜிஆர். படத்தை வெளியிடுதற்கு முன்பாக எம்ஜிஆர் சொன்னார்: “இந்தப் படம் வெற்றிபெற்றால் நான் மன்னன், தோல்வியடைந்தால் நான் நாடோடி”. 1958 ஆகஸ்ட் 22-ல் ‘நாடோடி மன்னன்’ வெளிவந்து எம்ஜிஆரை மன்னனாக்கியது. திரைத்துறை, அரசியல் இரண்டிலும் எம்ஜிஆர் என்ற தனிப்பெரும் அடையாளத்தை நிறுவியது இந்தப் படம். உலகம் முழுவதும் 23 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது ‘நாடோடி மன்னன்’. தமிழகத்தில் 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது. 1959 அக்டோபர் 26 அன்று மதுரையில் மதுரை முத்து ஏற்பாட்டில் மாபெரும் வெற்றிவிழா நடந்தது.

அதில் கலந்துகொண்டு பேசிய அண்ணா, “கருத்தைக் கலையிலே காட்டமுடியும் என ஒரு நல்ல செயலைச் செய்துகாட்டிய படம் ‘நாடோடி மன்னன்’. எம்ஜிஆருக்குக் கிடைத்த புகழ் நாம் பெற்ற புகழ். நாம் பெற்ற புகழ் நாட்டுக்குச் சொந்தமாகும்” என்றார்.

பி.எஸ்.வீரப்பா, எம்.ஜி.சக்கரபாணி

கருணாநிதி பேசுகையில், “இயக்கக் கொள்கை, இலட்சிய விளக்கம், மயக்கும் மடமையைக் கொளுத்தும் மார்க்கம் கலையினிற் காண செயல்முறை வகுத்தார், அளவிலாப் புகழை அடைந்தார், உயர்ந்தார், அண்ணா தம்பிகள் அனைவரும் வாழ்த்தப் பொன்னார் விளக்கெனப் புகழ்மலை ஏறினார்” என்றார் தனக்கேயுரிய கவிதை அடுக்குமொழியில்.

எம்ஜிஆர் நடித்து அடுத்து வெளிவந்தபடம் ‘காஞ்சித் தலைவன்’ (1963). எம்ஜிஆர் ராஜா ராணி கதைகளாகவே நடித்துக்கொண்டிருந்த வேளையில் சிவாஜி கணேசன் சமூகப் படங்களில் புகழடைந்துகொண்டிருந்தார். தமிழ் சினிமாவின் போக்கும் சமூகப் படங்களின் பக்கம் திரும்பியிருந்தது. ‘அந்தமான் கைதி’, ‘கூண்டுக்கிளி’ போன்ற எம்ஜிஆர் நடித்த சமூகப் படங்கள் சரியாகப் போகாததால் அவரை சமூகப் படங்களை எடுப்பவர்கள் ஒப்பந்தம் செய்யத் தயங்கினார்கள்.

ஒருநாள் நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. கதாசிரியர் ரவீந்திரனும் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும் எம்ஜிஆர் வீட்டு வராண்டாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். எம்ஜிஆர் வீட்டுக்குள் இருந்தார். மழையை ரசித்துக்கொண்டே சுப்பையா நாயுடு சொன்னார்: “அப்டியே... இந்த மழையில கார்ல போகணும். திங்கிறதுக்கு கேக், சிப்ஸ், பக்கோடா எல்லாம் இருக்கணும். தின்னுக்கிட்டே, எதையாவது பேசிக்கிட்டே போனா எவ்வளவு சுகம்மா இருக்குமில்ல?”

அந்த சமயத்தில் உள்ளே இருந்து வெளியே வந்த எம்ஜிஆர், தனது ஓட்டுநர் ராமசாமியை உள்ளே அழைத்துப்போனார். சற்று நேரத்தில் ஓட்டுநர் ராமசாமி காரை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினார். அரை மணிநேரம் கழித்து கார் மீண்டும் வந்தது. எம்ஜிஆர் வெளியே வந்து ரவீந்திரனையும் சுப்பையா நாயுடுவையும் பார்த்து, “வாங்க போகலாம்” என்றார். காரின் முன் இருக்கையில் எம்ஜிஆர். பின் இருக்கையில் அவர்கள் இருவரும்.

“இப்ப நாம எங்க போறோம்?” நாயுடு கேட்டார். “எனக்கென்ன தெரியும்? நீங்கதானே மழை நேரத்துல கார்ல வெளியில் போகணும்னு ரவீந்திரன்கிட்ட சொன்னீங்க. நீங்க கேட்ட பலகாரங்கள் எல்லாம் காருக்குள்ள இருக்கு; சாப்பிடுங்க. எதைப் பத்திப் பேசலாம் இப்போ?” என்ற எம்ஜிஆர், “கார் பெங்களூர் போகுது. காரிலும் பேசுங்க... அங்க போயும் பேசலாம்” என்றார்.

கார் போய்க்கொண்டிருந்தது. நாயுடு மெல்ல வாய் திறந்தார். “ரொம்ப நாளா என் மனசிலிருந்த ஆசை ஒண்ணு. சொல்ல இப்பத்தான் தனிமை கிடைச்சிருக்கு” என்றார். பின்பக்கம் திரும்பி இருவருக்கும் முகம் தெரிவதுபோல உட்கார்ந்துகொண்டார் எம்ஜிஆர்.

“உங்க நடிப்பு கொஞ்சம் மாறணும். சரித்திரப் படங்களை விட்டுட்டு சமூகப் படங்களுக்கு நீங்க மாறணும். பேன்ட், சட்டை போட்டு நடிக்கணும். அந்த டிரஸ் உங்களுக்கு அழகா இருக்கும். ‘பணக்காரி’ படத்துல பேன்ட், ஷர்ட்ல நீங்க நல்லா இருந்தீங்க. இனி அது தொடரணும்” என்றார் நாயுடு. இனி சமூகப் படங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாமே நினைத்திருந்தபோது நாயுடுவும் அதையே சொன்னது அதன் அவசியத்தை எம்ஜிஆருக்கு உணர்த்தியது.

ஏ.எல்.எஸ். புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில் ‘திருடாதே’ பட வாய்ப்பு வந்தது. சரோஜாதேவியே நாயகி. இடையில், சீர்காழியில் ‘இன்பக் கனவு’ நாடகம். அதில் குண்டுமணியைத் தூக்குகிற காட்சியில் ஏற்பட்ட விபத்தில் எம்ஜிஆருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆறு மாத ஓய்வு. அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்க நினைத்தபோது சரோஜாதேவி பிசி ஆகிவிட்டார். அவர் தேதி கிடைப்பதில் சிக்கல். எம்ஜிஆரின் முதல் மனைவி சதானந்தவதி உடல்நிலை பாதிப்பு. இப்படி அடுக்கடுக்காக இடையூறுகள். இடையில், எம்ஜிஆர் நடித்த ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ படமும் படுதோல்வி கண்டது.

எம்ஜிஆர்

‘திருடாதே’ படப்பிடிப்புக்கு சரோஜாதேவி பெரும்பாலும் தாமதமாகத்தான் வருவார். அதுவரையில் எம்ஜிஆர் பொறுமையாகக் காத்திருப்பார். எப்படியாவது சமூகப் படமொன்றில் நடித்து வெற்றியடைவதே அவருக்கு ஒரு சவாலாக இருந்தது. கடும் உழைப்பும் பொறுமையும் காட்டிய அவருக்கு ‘திருடாதே’ படம் பெரும் வெற்றியைப் பரிசளித்தது.

முன்பு தேவர் பிலிம்ஸ் தயாரித்த ‘தாய்க்குப் பின் தாரம்’ பெரும் வெற்றியைத் தந்தது எம்ஜிஆருக்கு நினைவில் வந்தது. உடனே சின்னப்பா தேவருக்கு அழைப்பு விடுத்தார். “படம் எடுங்கள், நடிக்கிறேன்” என்றார் இரண்டே சொற்களில். உடனே களமிறங்கினார் தேவர். ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்ற வெற்றிப்படம் வந்தது. அடுத்த ஆண்டே, ‘தாயைக் காத்த தனயன்’, ‘குடும்பத் தலைவன்’ என இரண்டு எம்ஜிஆர் படங்களைத் தேவர் தயாரித்தார்.

எம்ஜிஆரை தேர்தல் பிரச்சாரப் பணி அழைத்தது. மனைவி சதானந்தவதி கவலைக்கிடமானார். அளவற்ற பாசம் வைத்திருந்த அவரை எம்ஜிஆர் இழந்தார். அதைத் தொடர்ந்து ‘பாசம்’ படத்தில் நடித்தார். அதன் க்ளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் எம்ஜிஆர் இறந்துவிடுகிறார். முதலில் இயக்குநர் ராமண்ணாவிடம், “ரசிகர்கள் இதை ரசிக்கமாட்டார்கள்” என்று சொல்லிப் பார்த்தார் எம்ஜிஆர். “கதையின் போக்கில் அதை ஏற்பார்கள்” என்றார் இயக்குநர். படம் வெளிவந்து படுதோல்வி கண்டது. எம்ஜிஆர் சொன்னது மெய்யானது.

அதன் பிறகு கதைத் தேர்வில் கூடுதல் கவனம் வைத்தார் எம்ஜிஆர். ரசிகர்கள் தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாகவே பார்க்க விரும்புகிறார்கள் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. தன்னுடைய பாத்திரப்படைப்பு எப்படிப்பட்ட குணமுடையதாக இருக்க வேண்டும், எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என்றெல்லாம் வரையறுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு வந்துசேர்ந்தார் எம்ஜிஆர்.

அதுசரி... அவருக்கு சிவாஜியைப் போலவோ மற்ற நாயகர்களைப் போலவோ பலதரப்பட்ட வேடங்களில், குடும்பப்பாங்கான, இயல்பான படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததே இல்லையா?

எம்ஜிஆர் - சரோஜா தேவி

‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் அப்படியும் ஒரு சோதனையைச் செய்துபார்த்தார் எம்ஜிஆர். அந்த சமயத்தில் சினிமா பத்திரிகையான பொம்மையில் இதுபற்றி கட்டுரை எழுதிய எம்ஜிஆர், ‘ஒரு நடிகன் பல்வேறு குணவிசேடங்கள் உள்ள பாத்திரங்களை ஏற்று நடித்தால்தான் நடிப்பில் பல புதுமைகள் பிறக்க முடியும்’ என்றார்.

‘நான் அதிகம் அறியப்படாத காலத்தில் ‘என் தங்கை’ என்ற படத்தில் நாயகனாக நடித்தேன். அது வெற்றியும் பெற்றது. ஆனால், அதில் சண்டைக் காட்சிகள் இல்லை. நாளடைவில் நான் நடிக்கும் படங்களில் சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்ற நிலை எப்படியோ நிரந்தரமாக உண்டாக்கப்பட்டுவிட்டது’ என்று கவலையும் அக்கறையும் தொனிக்கச் சொல்லியிருந்தார் எம்ஜிஆர்.

‘ரசிகர்களின் எதிர்பார்ப்புதான் தன் படங்களில் சண்டைக் காட்சிகளைச் சேர்க்கக் காரணம் என்று தயாரிப்பாளர்கள் கூறுவதாகவும் குறிப்பிட்ட எம்ஜிஆர், ‘கதைக்குத் தேவையான இடத்தில் மட்டும் சண்டைக்காட்சி இருக்கலாம். தேவைப்படாத, இடங்களில் சண்டைக் காட்சிகள் இல்லாமலிருப்பதை ரசிகர்கள் தம் ரசனை உணர்வுடன் வரவேற்க வேண்டும்’ என்றும் சொன்னார்.

ஆக, எம்ஜிஆருக்கும் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கும் ஆசை இருந்திருக்கிறது. ஆனால், அவரை வில்லனோடு சண்டையிட்டுச் ஜெயிக்கும் மாஸ் ஹீரோவாக மட்டுமே இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் பெரிதும் விரும்பினார்கள். அதனால் எம்ஜிஆரின் மாறுபட்ட நடிப்புகள் மழுங்கடிக்கப்பட்டு, எம்ஜிஆர் படம் என்றால் இப்படித்தான் இருக்கும். இதுதான் எம்ஜிஆர் ஃபார்முலா என்று தனியாக ஒரு ஃபார்முலாவையே உருவாக்கிவிட்டார்கள்.

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

தேநீர் நேரம்- 18: பட்டுக்கோட்டையாருக்காக கதவைச் சாத்திக்கொண்டு கண்ணீர் விட்ட எம்எஸ்வி!

வீடியோ வடிவில் காண:

தேநீர் நேரம்- 19: உத்தம புத்திரன் போனதால் நாடோடி மன்னனை பிடித்த எம்ஜிஆர்!

x