தேநீர் நேரம்- 18: பட்டுக்கோட்டையாருக்காக கதவைச் சாத்திக்கொண்டு கண்ணீர் விட்ட எம்எஸ்வி!


முத்துராமன் - சிவாஜி

திரைப்படப் பாடலை உருவாக்குகிறபோது பாடலாசிரியரும், இசையமைப்பாளரும், இயக்குநரும் ஒருமித்து இயங்க வேண்டியது அவசியம். ஒரு சில இடங்களில் நடிப்பாளுமைகளான நாயகர்களின் தலையீடும் இருக்கவே செய்யும்.

கதையின் உணர்வை, கதைப்போக்கை, கதையின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தின் தன்மையையெல்லாம் மனதில் கொண்டு, அதே சமயம் அந்தப் பாடலை அந்த சினிமாவிலிருந்து தனித்தும் கேட்டு, ரசிக்கும்படியான பொதுத்தன்மையோடும் எழுத வேண்டும். இந்தக் கடப்பாடுதான் திறன்மிக்க பாடலாசிரியர்கள் உருவாக ஏதுவான சூழலை ஏற்படுத்த வல்லது. தமிழில் அந்தவகையில் குறைவேதுமில்லை என்றே சொல்ல வேண்டும்.

உடுமலை நாராயணகவி

வடமொழிச் சொற்களைத் தாராளமாகத் தமிழுடன் கலந்து அதனை மணிப்பிரவாளம் என்று செல்லமாக அழைத்துவந்த காலத்துப் பாடலாசிரியர் பாபநாசம் சிவன். உடுமைலை நாராயணகவி நல்ல தமிழ் புழங்கத்தொடங்கிய காலத்துக் கவிராயர். சமூகத்தைப் பாடிய முதல்பெரும் கவிஞரும்கூட. தொடர்ந்து மருதகாசி என்று அந்தக் கண்ணி அறுபடாமல் இன்றுவரையில் தொடர்கிறது.

பாபநாசம் சிவன்

பல்வேறு சுவைகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள். வாழ்வின் ஒவ்வொரு தருணமும் அதன் உணர்வுகளும் பாடல்களாகக் குவிந்து கிடக்கின்றன. அவை அத்தனையும் தமிழை - நம் தாய்மொழியைச் செழுமைப்படுத்தியிருக்கின்றன. அதன் வளத்திற்கு வளம் சேர்த்திருக்கின்றன.

மருதகாசி

ஒவ்வொரு பாடலும் உருவான விதமும் சூழலும் ஒவ்வொரு வகையானதாகத்தான் இருந்திருக்கும். இனி அவற்றுக்கு எடுத்துக்காட்டாக ஒருசில திரைப்பாடல்கள் உருவான பின்னணியை, ஒருசில சுவையான சம்பவங்களைக் கொஞ்சம் பார்த்து அறிந்து வியப்போமா?

கந்தன் கருணை படத்தில்...

‘கந்தன் கருணை’ படத்தின் பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன். அந்தப் படத்தில் பல பாடல்களையும் அவர் எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிச் சூழலுக்குப் பாடல் எழுத வேண்டியிருந்தது. அப்போது அவருக்கு நினைவில் வந்தது அவர் வெளியில் கேட்ட ஒரு பக்திப் பாடல்தான்.

அது ஒரு தனிப்பாடல். அந்தப் பாடல் அந்தக் காட்சிக்குப் பொருத்தமாக இருக்கும் என்று கண்ணதாசன் கருதினார். அதை இயக்குநர் ஏ.பி.நாகராஜனிடம் சொன்னார். அது பூவை செங்குட்டுவன் எழுதி, குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் உருவாகியிருந்த ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்’ என்ற பாடல்.

உடனே, பூவை செங்குட்டுவனுக்கு கார் அனுப்பப்பட்டது அவரை அழைத்துவர. அவருடன் பேசி அந்தப் பாடல் ‘கந்தன் கருணை’ திரைப்படத்தில் சேர்க்கப்பட்டது. அதில் ஒரேயொரு வார்த்தையை மட்டும் மாற்றிக்கொள்ளலாமா என்று பூவை செங்குட்டுவனிடம் கண்ணதாசன் அனுமதி கேட்டார். ‘சென்னையிலும் கந்தக் கோட்டமுண்டு... உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு’ என்ற அந்த வரியை ‘சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு’ என்று கண்ணதாசனே மாற்றித்தந்தார்.

பூவை செங்குட்டுவன்

“தான் எழுதவேண்டிய பாடலுக்கு பதிலாக மற்றொருவரின் பாடலுக்கு வாய்ப்பளித்ததோடு மட்டுமில்லாமல் அதனைச் செழுமைப்படுத்தி, சிறப்பும் சேர்த்தார் கவிஞர். அதனால்தான் அவர் கவிஞர்களுக்கெல்லாம் அரசரானார்” என்று பூவை செங்குட்டுவன் நெகிழ்ந்துபோனார். நிறைய பக்திப்பாடல்களை எழுதிக் குவித்திருந்த பூவை செங்குட்டுவனுக்கு அடுத்து எம்ஜிஆர் படத்தில் ஒரு வாய்ப்பு வந்தது. அதையும் பார்ப்போம்.

எம்ஜிஆரின் ‘புதியபூமி’ படமாகிக் கொண்டிருந்த நேரம். தனது கொள்கைகளை விளக்குவதுபோன்ற ஒரு பாடல் வேண்டும் என்று விரும்பினார் எம்ஜிஆர். மூன்று முன்னணிக் கவிஞர்களும் எழுதித்தந்த பாடல்களைத் திருப்தி இல்லை என்று சொல்லி மறுத்துவிட்டார் எம்ஜிஆர். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம், “ என்ன விசு... இப்படி ஆகிவிட்டது? அருமையான பாடலாசிரியர்களாலேயே நான் விரும்புகிற அளவுக்கு ஒரு பாடலை எழுத முடியவில்லையே... என்ன செய்யலாம்?” என்று கேட்டார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா

அப்போது அங்கே ஒரு ஓரத்தில் ஒடிசலான உருவத்தில் ஒருவர் தன் கையில் மஞ்சள் பையுடன் நின்றுகொண்டிருந்தார். அவரை எம்ஜிஆரிடம் அறிமுகம் செய்தார் எம்எஸ்வி. “இவர் பூவை செங்குட்டுவன். நிறைய பக்திப்பாடல்கள் எழுதியிருக்கிறார். இவரை நாம் எதிர்பார்க்கும் அந்தப் பாடலை எழுதச்சொல்லலாம்” என்றார். அவரது சில பாடல்களை எம்ஜிஆர் படித்துப்பார்த்தார். “என்னப்பா நல்லா எழுதுவியா?” என்று கேட்டார். ”விசு டியூன் சொல்லுவான். நாளைக்கு ஒரு பாட்டு எழுதிட்டு வா. சரியா?” என்றார் எம்ஜிஆர். விஸ்வநாதனின் மெட்டைக் கேட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றார் செங்குட்டுவன்.

மறுநாள் பாட்டோடு வந்தார் பூவை செங்குட்டுவன். அதை வாங்கிப் படித்துப்பார்த்தார் எம்ஜிஆர். முதல் வரியைப் படித்ததுமே அவரது முகம் அத்துணை பிரகாசமானது. அந்தப் பாடல்தான் ‘புதியபூமி’ படத்தில் இடம்பெற்ற, மெகா ஹிட் ஆன ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை... இது ஊர் அறிந்த உண்மை... நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை’ என்ற பாடல். பூவை செங்குட்டுவனை வெகுவாகப் பாராட்டிய எம்ஜிஆர், அதே படத்தில் இன்னொரு பாடலை எழுதும் வாய்ப்பையும் அவருக்குத் தந்தார்.

கண்ணதாசன்

இன்னொரு சுவையான சம்பவம். இது சிவாஜி தொடர்பானது. ‘அவன்தான் மனிதன்’ படம். 1973 மே மாதம் சிங்கப்பூரில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள் படக்குழுவினர். கவியரசர் கண்ணதாசன் பாடல்களைத் தர தாமதப்படுத்திக் கொண்டே இருந்தார். தயாரிப்பாளர் தரப்போ அவருக்கு அடிக்கடி ‘மே மாதம் படப்பிடிப்பு’ என்று நினைவூட்டிக்கொண்டே இருந்தார்கள். சென்னையில் ஒரு நட்சத்திர விடுதியில் தங்கி பாடல்களை எழுதி முடித்தார் கண்ணதாசன். அவற்றில் ஒரு பாடல் அதிக கவனத்தோடு எழுதப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

‘அவன்தான் மனிதனில்’ மொத்தம் ஐந்து பாடல்கள். அவற்றுள் கவியரசரின் அதிக கவனிப்பைப் பெற்ற பாடலாக ‘அன்பு நடமாடும் கலைக்கூடமே’ என்ற பாடல் உருவானது. மிகவும் அற்புதமான பாடலாக அது அமைந்தது. எல்லோரும் ரசித்தார்கள். பலரும் கவனிக்காத விஷயம் அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் மே மே என்றே முடியும்.

சிவாஜி, மஞ்சுளா

கவியரசரை படக்குழுவினர் மே மாதம் படப்பிடிப்பு... மே மாதம் படப்பிடிப்பு... என்று அவ்வளவு டார்ச்சர் தந்திருக்கிறார்கள். அதற்கு எதிர்வினையாக தனது பாடலிலேயே மே மே என்று ஒவ்வொரு வரியிலும் இப்படிச் சுவைபட எழுதிப் பழிதீர்த்துக் கொண்டிருக்கிறார் கவிஞர். கோபமும்கூடக் கவித்துவமாகவே வெளிப்பட்டிருக்கிறது.

இப்படித்தான் ‘அன்னை இல்லம்’ படத்தில் ஒரு பாடலைக் கவியரசர் எழுதியிருந்தார். ‘எண்ணிரண்டு பதினாறு வயது... அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது’ என்ற பாடல்தான் அது. படத்தின் நாயகன் சிவாஜி. நாயகி தேவிகா.

பாடலைக் கேட்டுவிட்டு, தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இப்படிக் கேட்டிருக்கிறார்கள்: “ஏனய்யா... தேவிகாவைப் பார்த்தால் பதினாறு வயது போலவா தோன்றுகிறது உமக்கு?

அன்னை இல்லம் படத்தில்

அதற்குக் கவிஞர் இப்படி பதிலளித்தாராம்: “நான் எங்கே அப்படிச் சொல்லியிருக்கிறேன்? வரியை நன்றாக கவனியுங்கள். ‘எண்ணி ரெண்டு பதினாறு வயது’ என்றுதானே சொல்லியிருக்கிறேன். ரெண்டு பதினாறு முப்பத்தி இரண்டல்லவா?” என்று வாயடைக்க வைத்தாராம் கவிஞர்.

பாசவலை படத்தில்...

இப்படித்தான் முன்பொருமுறை ‘பாசவலை’ படத்திற்கு மருதகாசியும் கண்ணதாசனும் பாடல்கள் எழுதினார்கள். ஆனால், அவர்களாலேயே ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு ஏற்ற வரிகளோடு பாடல் ஒன்றை எழுத இயலவில்லை. வருத்தத்தில் இருந்த எம்எஸ்வி-யிடம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகி சுலைமான் சேட் ஒரு இளைஞனைக் கூட்டிவந்து, “இவர் நன்றாகப் பாடல்கள் எழுதுவார். இவரிடம் உள்ள ஒரு பாடல் அந்தச் சூழலுக்குப் பொருந்துகிறதா பாருங்கள்” என்றார்.

எம்எஸ்வி-க்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “பெரிய கவிஞர்களாலேயே முடியாததை இந்தப் புதுப்பையன் எழுதிடப்போறானா? போங்க... போங்க...” என்று விரட்டினார். சில நாட்கள் கழிந்தன. அப்போதுவரை அந்த நல்ல பாடல் அமைந்தபாடில்லை.

எம்.கே.ராதா

மறுபடியும் சுலைமான் அதே இளைஞனோடு வந்து மீண்டும் எம்எஸ்வி-யிடம் விண்ணப்பித்தார். சுலைமானின் நச்சரிப்பு பொறுக்காமல் வேண்டா வெறுப்பாக அந்த இளைஞனின் பாடலை வாங்கிப் படித்துப்பார்த்தார் விசு. அவரின் மனதில் வியப்பு. கணகள் சிவந்து கசிந்தன.

“இது... இதுவல்லவோ நான் இதுவரையில் எதிர்பாத்துக் கொண்டிருந்த பாடல்” என்று பூரித்துப்போனார் எம்எஸ்வி. அந்தப் பாடலை உடனே தேர்வு செய்தார். அந்த இளைஞனைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார். அன்று இரவு முழுதும் தூங்கவில்லை எம்எஸ்வி. தனது பூஜை அறையில் சென்று கதவை மூடிக்கொண்டார். கண்ணீர் பெருகியது. “இப்படியொரு திறமையான இளைஞனை இத்தனை நாட்கள் அலட்சியம் செய்திருக்கிறேனே” என்று வருந்தினார். இனி வாழ்நாளில் வாய்ப்புகளுக்காக எவர் தன்னிடம் வந்தாலும் அலட்சியம் செய்வதில்லை என்ற சபதத்தை எம்எஸ்வி எடுத்துக்கொண்டார். அதை இறுதிவரையில் கடைபிடித்தார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

‘பாசவலையில்’ இடம்பெற்ற அந்தப் பாடல்தான்,

‘குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்

குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்

தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்

சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்...’

எனும் தொகையறாவுடன் தொடங்கும் பாடல். இந்தப் பாடலை இயற்றிய அந்தப் புதியவர்தான் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

முந்தைய அத்தியாயத்தைப் வாசிக்க:

தேநீர் நேரம்- 17; வரலட்சுமியை நடிக்கவைத்து வாத்தியாரை காப்பாற்றிய சாவித்திரி!

வீடியோ வடிவில் காண:

தேநீர் நேரம்- 18: பட்டுக்கோட்டையாருக்காக கதவைச் சாத்திக்கொண்டு கண்ணீர் விட்ட எம்எஸ்வி!

x