‘இருவர் உள்ளம்’ : உள்ளத்தை கொள்ளைகொண்ட காதல் காவியம்!


சிவாஜி, சரோஜாதேவி - ‘இருவர் உள்ளம்’

நாம் எல்லோருமே ஒவ்வொருவிதமான தவறை, ஒருகட்டத்தில் செய்கிறோம். அப்படித் தவறு செய்தவர்கள், உணர்ந்து, தெளிந்து, திருந்தியும் விடுவது உண்டு. அப்படித் திருந்தியவர்களை இந்தச் சமூகமும் உறவுகளும் ஏற்றுக்கொள்கிறதா? ‘ஆஹா... முன்னாடி தப்பு செஞ்சான். இப்ப திருந்திட்டான்’ என்று அவர்களை நம்புகிறதா? இவனாவது திருந்துவதாவது என்று தான் பேசுவார்கள். இந்த வாழ்வியலை காதலுடனும் கல்யாண பந்தத்துடனும் இணைத்து, உணர்வுபொங்க மனமுருகிச் சொல்லப்பட்டதுதான் ‘இருவர் உள்ளம்’. பிரபல எழுத்தாளர் லக்ஷ்மியின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது இந்தப் படம்!

பிரபல இயக்குநர் எல்.வி.பிரசாத் ’இருவர் உள்ளம்’ படத்தை இயக்கினார். மு.கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதினார். ஏற்கெனவே, கருணாநிதியும் எல்.வி.பிரசாத்தும் நடிகர்திலகமும் இணைந்து படைத்த ‘மனோகரா’ மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது போல், ‘இருவர் உள்ளம்’ திரைப்படமும் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது.

சிவாஜியுடன், சரோஜாதேவி நடித்த படங்கள் பலவற்றிலும் சரோஜாதேவியின் ஆகச்சிறந்த நடிப்பாற்றல் வெளிப்படும். அப்படியான கதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான் நிகழ்ந்தது. எஸ்.வி.ரங்காராவ், சந்தியா, டி.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா முதலானோர் நடித்த ‘இருவர் உள்ளம்’, திரையுலகிலும் மக்களிடையேயும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது.

மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் செல்வம். பணத்தில்தான் செல்வம். ஆனால் குணத்தில் அப்படியில்லை. பல பெண்களுடன் பழக்கம். நண்பர்களுடன் ஊர் சுற்றுவது என ஜாலியாகப் பொழுதைக் கழிக்கிற ‘ப்ளேபாய்’ குணங்கள் கொண்டவராகத் திரிகிறார். கல்யாணத்தின் மீது ஈடுபாடு இல்லாமல் இருப்பபவர், பல பெண்களுடன் பழக்கம் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில்,செல்வத்துடன் பழகிய வசந்தி, செல்வத்தின் தந்தைக்கு ‘என்னை ஏற்கமாட்டேன் என்று உங்கள் மகன் சொல்கிறார். என்னை ஏமாற்றிவிட்டார்’ என என்று கடிதம் எழுதுகிறார். இதையடுத்து செல்வத்தின் மாமா, ஊருக்கு வந்து வசந்தியைப் பார்த்து அவருக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து, செட்டில் பண்ணுகிறார்.

மருத்துவம் படித்துக்கொண்டிருந்த செல்வம், படிப்பை நிறுத்திவிட்டு, சென்னைக்கே வந்துவிடுகிறார். மாமாவின் கம்பெனியை நிர்வகித்து வரும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அந்த சமயத்தில்தான் சாலையில், சரோஜாதேவியைப் பார்க்கிறார். படத்தில் அவரின் பெயர் சாந்தா. சிவாஜிதான் செல்வம்.

சிவாஜியின் பழக்கவழக்கங்களைப் புரிந்துகொண்ட சாந்தா, அவரை அடியோடு வெறுக்கிறார். ஆனால் சரோஜாதேவியைப் பார்த்ததும் கல்யாணம், குடும்பம், மனைவி என்கிற வாழ்க்கைக் கட்டமைப்பின் மீது ஏக்கம் கொள்கிறார் சிவாஜி. அதற்காக அதுவரை இருந்த தன் மொத்த குணங்களையும் மாற்றிக் கொள்கிறார். திருந்தி வாழ நினைக்கிறார். திருந்தியே விடுகிறார். ஆனால், சிவாஜியை நம்ப மறுக்கிறார் சரோஜாதேவி.

ஒருகட்டத்தில், சிவாஜியின் சகோதரிக்கு டியூஷன் எடுக்க வீட்டுக்கு வருகிறார் சரோஜாதேவி. அப்போது ஒரு சூழலில், பிரச்சினையானது வர... அது திருமணம் வரை போகிறது. பிறகு எல்லோர் சம்மதத்துடனும் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால், சரோஜாதேவி விருப்பமே இல்லாமல், சிவாஜியை திருமணம் செய்துகொள்கிறார். சிவாஜியின் அப்பா கதாபாத்திரத்தில் ரங்காராவ். இவர், அரசு வக்கீல். சிவாஜியின் அண்ணன் எம்.ஆர்.ராதா வக்கீல்.

வசந்தி என்பவள், இன்சூரன்ஸில் வேலை செய்யும் டி.ஆர்.ராமச்சந்திரனை மணந்துகொள்கிறார். ஆனால், பணமே பிரதானம் என வாழும் அவள் மைனர் மாணிக்கம் கதாபாத்திரத்தில் வரும் கே.பாலாஜியிடம் மனதைப் பறிகொடுக்கிறார்.

சிவாஜியும் சரோஜாதேவியும் கன்யாகுமரிக்கு சுவாமி தரிசன வேண்டுதலுக்காகச் செல்கின்றனர். சரோஜாதேவிக்கு இஷ்டமே இல்லை. வேண்டாவெறுப்பாகச் சென்ற நிலையில், ஏதோவொரு உணர்வு உந்தித்தள்ள, சிவாஜி மீது அன்பு பிறக்கிறது. அதேசமயம், டிஆர்.ராமச்சந்திரனும் வசந்தியும் அங்கே வருகின்றனர். சிவாஜிக்கும் சரோஜாதேவிக்கும் டார்ச்சர் கொடுக்கிறார் வசந்தி. ’’நீதானே என்னை கன்யாகுமரிக்கு வரச்சொன்னே’’ என்று வசந்தி பொய் சொல்கிறாள். அவள் சொன்னது உண்மை, தன் கணவன் திருந்தவே இல்லை என மனம் நொந்து, மயங்கி விழுகிறார் சரோஜாதேவி. இந்த மயக்கம் விஷ ஜூரத்தில் கொண்டுவிடுகிறது.

அப்போது அவரை கண்ணும்கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார் சிவாஜி. இந்த சமயத்தில், வேலை விஷயமாக டெல்லிக்குப் போகும் சூழல் சிவாஜிக்கு ஏற்படுகிறது. அந்த நாட்கள்... சிவாஜியை உணர்ந்து, அவரின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் சரோஜாதேவி.

இந்த தருணத்தில், டிஆர்.ராமச்சந்திரன் வேலை விஷயமாக வெளியூர் செல்லக் கிளம்புகிறார். அப்போது கடிதம் ஒன்றைப் பார்க்கிறார். அது வசந்திக்கு மைனர் மாணிக்கம் எழுதிய கடிதம். ’’உன் கணவர் எப்போது கிளம்பிச் செல்வார் என்று காத்திருக்கிறேன்’’ என எழுதியிருப்பதைப் படித்து, கோபமாவார் டி.ஆர்.ராமச்சந்திரன். வெளியூர் செல்கிறேன் எனச் சொல்லிவிட்டு, உள்ளூரிலேயே லாட்ஜ் ஒன்றில் தங்குவார்.

வசந்திக்கு, கணவர் இருந்தாலும் மைனர் மாணிக்கமான பாலாஜியுடன் உறவு இருந்தாலும், மிகப்பெரிய செல்வந்தரான செல்வமான சிவாஜியை எப்படியேனும் தன் வலையில் வீழ்த்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். சிவாஜிக்கும் பாலாஜிக்கும் உள்ள நட்பு வசந்திக்கு தெரிந்திருக்கும். அப்போது சிவாஜிக்கு போன் செய்து, ’’உங்கள் நண்பர், ரொம்ப முடியாமல் இருக்கிறார். உடனே வாருங்கள்’’ என்று பாலாஜி வீட்டு வேலைக்காரப் பெண் பேசுவது போல் பேசி, சிவாஜியை அவள் இருக்கும் இடத்துக்கு வரச்செய்கிறாள்.

சிவாஜி வருவார். வசந்தியைப் பார்ப்பார். பணம்தானே வேணும் என்று பர்ஸைத் தூக்கிப் போடுவார். அங்கிருந்து கிளம்பிச் செல்வார். மாடியில் இருந்து இறங்கும்போது வசந்தியின் அலறல் சத்தம் கேட்கும்.

வீட்டுக்கு வந்த சிவாஜியுடன் இனிமையாகப் பேசும் சரோஜாதேவி மன்னிப்பும் கேட்பார். இருவரும் சந்தோஷமாக இருக்கும் வேளையில், போலீஸ் வரும். வசந்தியைக் கொலை செய்த குற்றத்திற்காக சிவாஜியைக் கைது செய்யும்.

அரசு வக்கீலான அப்பா, கொலைக்கு தண்டனை வாங்கித்தர முயற்சி செய்வார். வக்கீல் அண்ணன், தம்பியைக் காப்பாற்றப் போராடுவார். சரோஜாதேவி கணவனை முழுசாக நம்புவார். அவர் குற்றம் செய்திருக்கமாட்டார் என உறுதிபட இருப்பார். அப்படியெனில், வசந்தியைக் கொலை செய்தது யார், செல்வம் என்கிற சிவாஜி மாட்டிக்கொண்டது எப்படி? உண்மைக் கொலையாளி பிடிபட்டானா? சிவாஜி விடுதலையானாரா என்பதை உணர்ச்சிப்பொங்கும் வசனங்களாலும் ஜீவனுள்ள நடிப்பாலும் விவரித்ததுதான் ‘இருவர் உள்ளம்’.

கோர்ட், வழக்கு, வாக்குவாதம், உணர்வுபூர்வமான வசனங்கள். இறுதியில், டிஆர்.ராமச்சந்திரனே கொலையாளி என்பதை சரோஜாதேவி நிரூபிப்பார். போலீஸ் கைது செய்யும். சிவாஜி விடுதலை செய்யப்படுவார். குடும்பத்தில் பழைய நிம்மதி தவழத் தொடங்கும். சிவாஜியின் இயல்பான நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம். அதேபோல் கருணாநிதியின் குறும்பும் குசும்பும் கலந்த நகைச்சுவையுடன் கூடிய வசனங்கள் அற்புதம். ரங்காராவ், எம்.ஆர்.ராதா இருவரும் நடிப்பில் பின்னியிருப்பார்கள். சரோஜாதேவியின் நடிப்பு மிகவும் ரசிக்கப்பட்டு, பாராட்டப்பட்டது. சிவாஜியின் அம்மாவாக, ரங்காராவின் மனைவியாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்திருப்பார். அநேகமாக, அவரின் முகமும் நடிப்பும் பரிச்சயமான படங்களில் ’பலே பாண்டியா’ போலவே, இதுவும் சந்தியாவுக்கு முக்கியமான படம்.

எம்.ஆர்.ராதாவின் மனைவி முத்துலட்சுமி, காது கேட்காதவராக நடித்திருப்பார். ஆனால், அதைவைத்துக்கொண்டே அச்சுப்பிச்சு காமெடியெல்லாம் செய்யாமல் கதையை நகர்த்தியிருப்பார் இயக்குநர் எல்.வி.பிரசாத். இந்த எல்.வி.பிரசாத், தயாரிப்பாளராக, இயக்குநராக, ஸ்டூடியோ அதிபராக எல்லோருக்கும் பரிச்சயம். எண்பதுகளில், இவரை நடிக்கவைத்த பெருமை, கமல்ஹாசனுக்கு உண்டு. ஆமாம்... ‘ராஜபார்வை’ தாத்தாவை மறந்துவிடமுடியுமா என்ன?

கே.வி.மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் எல்லாப் பாடல்களையும் எழுதினார். அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ’பறவைகள் பலவிதம்’ என்று காரை ஸ்டைலாக ஓட்டிக்கொண்டே சிவாஜி பாடுகிற பாட்டு அப்ளாஸ் அள்ளியது. ’புத்திசிகாமணி பெத்தபுள்ள’ என்று எம்.ஆர்.ராதாவுக்கான பாடலுக்கு துள்ளித்துள்ளி ரசித்தார்கள் ரசிகர்கள். ’கண்ணெதிரே தோன்றினாள்’ என்ற பாடலில் காதல் பூத்துக்குலுங்கும். ’இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா’ என்று சரோஜாதேவி கேரக்டரின் ஏக்கமும் துக்கமும் சொன்ன பாடல் அழவைத்துவிடும். ‘அழகு சிரிக்கிறது ஆசை துடிக்கிறது’ என்ற பாடல், நம்மையும் குதூகலத்துக்குள் நுழைத்து கும்மியடிக்கச் செய்யும். ’ஏன் அழுதாய் ஏன் அழுதாய்?’ பாடலும் ’கண்ணே கண்ணே உறங்காதே’ பாடலும், ’நதி எங்கே போகிறது கடலைத்தேடி..’. என்கிற பாடலும் முக்கனிகளாக இனித்தன.

சிவாஜி கணேசனின் மிகச்சிறந்த படங்களின் பட்டியலில் இதுவும் ஒன்று. ’இருவர் உள்ளம்’ வெளியான போது, மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் எண்பதுகளில், புத்தம்புதிய காப்பி என்று மீண்டும் திரையிட்டபோது, தியேட்டரில் புதுப்படம் வெளியாகி ஓடுவது போல், ஏழு வாரம் ஒன்பது வாரம் என்றெல்லாம் ஓடி சாதனை படைத்தது. அந்தத் தியேட்டர் முடிந்து, வேறொரு தியேட்டருக்கு வந்த போது, இணைந்த 71-வது நாள் எனும் போஸ்டர்களையெல்லாம் பூரிப்புடன் ரசித்துக் கொண்டாடியது சினிமா ரசிகர் கூட்டம்!

1963-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியானது ‘இருவர் உள்ளம்.’ படம் வெளியாகி 60 ஆண்டுகளாகிவிட்டன. ‘வாழ்க்கையில் தப்பு செய்வது சகஜம். திருந்தி வாழ்வதே முக்கியம்’ என்பதையும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கைகோத்துக்கொண்டால், நல்லவனைக் கூட கெட்டவன் என்று இந்த உலகம் நம்பத்தான் செய்யும் என்பதையும் அப்போதே புரியும் வகையில் சொன்ன நாவல்டியான காவியம்தான் ‘இருவர் உள்ளம்’.

x