தேநீர் நேரம்- 15: ‘ஏவிஎம்’ மெய்யப்பச் செட்டியாரின் யோசனையை நிராகரித்த ஜெயகாந்தன்!


ஜெயகாந்தன்

இலக்கியவாதி ஜெயகாந்தனின் திரைத்துறை முயற்சிகள் வித்தியாசமானவை. நிரம்ப அனுபவங்களைக் கொண்டவை. ஆய்வுக்கு உட்படுத்தி படிப்பினை பெற வேண்டியவை. உண்மையில் ஜெயகாந்தனுக்கு சினிமா விருப்பம் இருந்ததோ இல்லையோ. ஆனால் அவருடனிருந்த தோழர்கள் இதுபற்றி அவரை நச்சரித்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது அவர் பொதுவுடைமை இயக்கப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுவது வழக்கம். அப்படிப் போகிற இடமெல்லாம் அவரிடம் இந்தக் கோரிக்கையை வைக்கத்தொடங்கினார்கள் இயக்கத்தினரும் அவரது வாசகர்களும்.

"நீங்கள் ஒரு நல்ல படம் எடுத்து வெளியிட்டால் என்ன?" - இதுவே அவரிடம் பலரும் கேட்டுவந்த கேள்வி. 'பாதை தெரியுது பார்' என்ற தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்த விஜயன், சகஸ்ரநாமம் நடத்திவந்த சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவில் சேர்ந்து நடித்துக்கொண்டிருந்தார். அந்த விஜயனும் எப்போதும் ஜெயகாந்தனைத் திரைத்துறையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டே இருந்தார். ரஷ்ய எழுத்தாளர்கள் டால்ஸ்டாய், செகாவ் ஆகியோரின் நூல்களில் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்த நா.பாஸ்கரனும் ஜெயகாந்தனை சினிமா எடுக்க வலியுறுத்துவார்.

யாருக்காக அழுதான் படத்தில்...

ஜெயகாந்தனுக்கும் இதில் விருப்பம் ஏற்பட்டு சினிமாதுறையில் இறங்கி சில அழுத்தமான முயற்சிகள் செய்தார். தனது எழுத்தில் உருவான இரண்டு கதைகளைக் கொண்டு, ‘உன்னைப்போல் ஒருவன்’ (1965), ‘யாருக்காக அழுதான்’ (1966) ஆகிய படங்களை இயக்கினார். அத்துடன், ‘காவல் தெய்வம்’ (1968), ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ (1977), ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978) ஆகிய படங்கள் அவரது கதைகளைக் கொண்டு எடுக்கப்பட்டன. இதில் ‘காவல் தெய்வம்’ படத்தை கே.விஜயன் இயக்கினார்.

இதன் கதை ஜெயகாந்தனின் கை விலங்கு நாவலைத் தழுவியது. ஜெயகாந்தனே ‘காவல் தெய்வம்’ என்ற பெயரைத் அந்தத் திரைப்படத்திற்குச் சூட்டினார். இதில் சிவாஜி கணேசன் கௌரவ வேடத்தில் மிக அற்புதமாக நடித்தார். சிவகுமார், லட்சுமி, முத்துராமன், எஸ்.வி.சுப்பையா, சௌகார்ஜானகி, எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன், ஓ.ஏ.கே.தேவர், டி.எஸ்.பாலையா, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், வி.கே.ராமசாமி, நாகேஷ், என்று ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டமே இந்தப் படத்தில் பங்கேற்றது.

அதுபோலவே, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற அவரது நாவல் அதே பெயரில் படமானது. ஸ்ரீகாந்த், லட்சுமி நடித்தார்கள். ஏ.பீம்சிங் இயக்கினார். அதே ஜோடியை வைத்து அதே பீம்சிங் இயக்கத்தில் அவரின் நாவலான ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ திரைப்படமானதும் குறிப்பிடத்தக்கதுதான். இதன் பிறகு ஜெயகாந்தனின் அடுத்த கதை திரைப்படமானது 23 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் 2001-ல் தான். எடிட்டர் பி.லெனின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஊருக்கு நூறு பேர்’ படம்தான் அது. அவரின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதையைத்தான் அதே ஆண்டில் இயக்குநர் பாலா ‘பிதாமகன்’ ஆக்கினார். பின்னர், ‘ஒரு மனிதன் ஓரு வீடு ஒரு உலகம்’ (2017) படமும் அவரது கதையைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான்.

ஜெயகாந்தனை ஆரம்பத்திலிருந்தே சினிமா எடுக்க வற்புறுத்தியவர்களுள் பிரபல தயாரிப்பாளர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி முக்கியமானவர். அவர்தான் முதலில் ஜெயகாந்தனின் கதையைப் படமாக்கும் தன் விருப்பத்தைச் சொன்னவர். “உங்கள் கதைகளில் ஏதேனும் ஒன்றை நீங்களே தேர்ந்தெடுத்து அதை டைரக்ட் செய்யவும் விரும்பினால் எனக்கு போன் செய்யுங்கள்” என்றார் கிருஷ்ணமூர்த்தி. “அப்படியொரு திட்டமும் ஆசையும் எனக்கு இருக்கிறது” என்ற ஒரு உத்தரவாதத்தையும் அவர் ஜெயகாந்தனுக்குத் தந்தார்.

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில்...

அப்போதுதான் ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ கதை வெளிவந்திருந்தது. அதை வாசித்த அவரது தோழர்களுக்கு அதையே திரைப்படமாக்கலாம் என்று தோன்றியது. இந்த நிலையில் ஜெயகாந்தன் வீனஸ் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தார். ஜெயகாந்தனின் அந்தக் கதையை பம்பாயில் இருந்தபோதே படித்துவிட்டதாகச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி. “அப்போதே நானும் உங்களுக்குப் போன் செய்ய நினைத்தேன். நீங்களும் அதே கதையைப் படமாக்கும் எண்ணத்தோடு வந்திருக்கிறீர்கள். நீங்கள் உடனே ஸ்கிரிப்ட் எழுதத் தொடங்கிவிடுங்கள்” என்றார்.

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தில்...

இயக்குநர் கே.விஜயனின் ஒண்டுக்குடித்தன வீட்டில் உட்கார்ந்து 10 நாட்களிலேயே ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்தார் ஜெயகாந்தன். அப்போது அவருக்கு மசால் வடையும் தேநீரும்தான் துணையிருந்தனவாம். கே.விஜயன், சோவியத் நாடு பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த என்.வி.கிரி, நா.பாஸ்கரன் ஆகியோரோடு ‘உன்னைப்போல் ஒருவன்’ ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டு வீனஸ் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தார் ஜெயகாந்தன். ஸ்கிரிப்ட்டைப் படித்த கிருஷ்ணமூர்த்திக்கு அது பிடிக்கவில்லை. ”இதை வைத்துப் படமெடுத்தால் வங்காளப்படம்போல இருக்குமே” என்றார் கிருஷ்ணமூர்த்தி. அதற்கு என்.வி.கிரி இப்படி பதில் சொன்னார்: "எப்பாடுபட்டாவது இந்தப் படத்தை நாங்கள் எடுத்துக்காட்டுகிறோம்!"

சோவியத் நாடு பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய வழக்கறிஞர் ரா.கிருஷ்ணய்யா, மதுரை எம்.நடராஜன், ஜி.ஆளவந்தார், ‘தெய்வப்பிறவி’ படத்தின் கதாசிரியரும் நாடக ஆசிரியருமான மல்லியம் ராஜகோபால், என்.வி.கிரி ஆகியோர் முதலீடு செய்தார்கள். ஆழ்வார்ப்பேட்டையில் ஒரு வீட்டு மாடியிலிருந்த குடிசையில் ஆசிய ஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் உதயமானது. கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஜெயகாந்தன். அவருக்கு உதவியாக நா.பாஸ்கரன், கே.விஜயன், மல்லியம் ராஜகோபால் ஆகியோர். ஒளிப்பதிவு நடராஜன். 1964 தீபாவளியன்று படப்பிடிப்பு தொடங்கியது. பிரபாகர், காந்திமதி இவர்களோடு சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவினர்கள்தான் பிரதான நடிகர்கள். 21 நாட்களில் படப்பிடிப்பு முடிந்தது. வீணை வித்வான் சிட்டிபாபுவின் வீணை இசைதான் படத்தின் பின்னணி இசை.

ஏவிஎம் ஸ்டூடியோவின் திரையரங்கில் பிரத்தியேகக் காட்சி திரையிடப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர், ஏ.வி.மெய்யப்ப செட்டியார், பொதுவுடைமை இயக்கத் தலைவர் கே.பாலதண்டாயுதம் ஆகியோர் படத்தைப் பார்த்தார்கள். படத்தை வெகுவாகப் பாராட்டிய காமராஜர் சொன்னார்: "இந்தப் படத்தை அரசாங்கமே விலைகொடுத்து வாங்கி, மக்களுக்கு இலவசமாகத் திரையிட்டுக் காட்ட ஏற்பாடுசெய்ய வேண்டும்". அப்போது பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது. எனினும் காமராஜர் சொன்னது பலிக்கவில்லை.

1964 டிசம்பர் 30 அன்று தணிக்கை செய்யப்பட்ட இந்தப் படத்தில் பிரபல நடிகர்கள் இல்லாததால் விநியோகஸ்தர்கள் எவரும் அதை வாங்க முன்வரவில்லை. அதனால் ஜெயகாந்தனே படத்தை பிப்ரவரி 27, 1965 அன்று வெளியிட்டார். அதற்கு முன்னரே அது 1964-ல் 12-வது தேசிய திரைப்பட விருது விழாவுக்கு அனுப்பப்பட்டது. அவ்விழாவில் மூன்றாவது சிறந்த திரைப்படம் என்ற விருதினை வென்றது. இருப்பினும் வெற்றிகரமாக ஓடி வசூலைப் பெறத் தவறியது ஜெயகாந்தனின் இந்த ’உன்னைப்போல் ஒருவன்’. ஆனாலும், விமர்சகர்களால் தமிழ் சினிமாவின் முதல் நியோ-ரியலிஸ்டிக் சினிமா என்று பாராட்டப்பட்டது. “ஜெயகாந்தன் தமிழில் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியிருக்கிறார்” என்ற பிரெஞ்ச் திரைப்பட விமர்சகர் ஜார்ஜஸ் சாடோல், “இதுவொரு தலைசிறந்த படைப்பு” என்று பாராட்டினார்.

இந்தப் படத்தின் பிரத்யேகக் காட்சியைப் பார்த்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரும் படத்தை வெகுவாகப் பாராட்டத்தான் செய்தார். மிகவும் அற்புதமான கதை என்றும் வலுவான கரு என்றும் மிகவும் யதார்த்தமான படம் என்றும் பாராட்டிய செட்டியார், ஜெயகாந்தன் மற்றும் படக்குழுவினரிடம் இப்படிச் சொன்னார்: "இந்தப் படத்தை ஜனாதிபதி பரிசுக்கும், வெளிநாடுகளில் திரையிடவும் மட்டும் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கதையைப் பெரிய நடிகர்களை வைத்து தமிழில் மீண்டும் எடுக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. படத்திற்கு உங்களுக்கு ஆன மொத்தச் செலவையும் கதைக்குச் சன்மானமாக நான் தந்துவிடுகிறேன். நீங்கள் எனக்கு அனுமதி கொடுக்க வேண்டும்" - என்றார்.

ஒரு படைப்பு வணிக வெற்றியைப் பெறுவதற்கான சூட்சுமம் அறிந்தவர்தான் அவர். ஆனால், வணிகரீதியிலான வெற்றியும் நல்ல கலை வெளிப்பாடும் வேறுவேறாக இருப்பதன் விளைவை ‘உன்னைப்போல் ஒருவன்’ அனுபவிக்க நேர்ந்தது. இருந்தாலும் ஜெயகாந்தன் மெய்யப்பச் செட்டியாரின் யோசனைக்குச் சம்மதிக்கவில்லை. இப்போது ஜெயகாந்தனின் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தின் ஒரு பிரதிகூட நம்மிடம் இல்லாமல் அது அழிந்துபோன படங்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டது!

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

தேநீர் நேரம்- 14: அண்ணா மீது பாலசந்தருக்கு அத்தனை ஈர்ப்பு ஏன் தெரியுமா?

வீடியோ வடிவில் காண:

தேநீர் நேரம்- 15: ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரின் யோசனையை நிராகரித்த ஜெயகாந்தன்!

x