ஜெயலலிதாவை வரவேற்ற ‘வந்தாளே மகராசி!’


’வந்தாளே மகராசி’ ஜெயலலிதா, ஜெய்சங்கர்

நாயகர்களின் ஆதிக்கம் நிறைந்த திரையுலகில், இரட்டை வேடங்களில் நடிப்பவர்களும் பெரும்பாலும் நடிகர்களாகத்தான் இருந்தார்கள். சாவித்திரி, கே.ஆர்.விஜயா முதலானோர் இரட்டை வேடங்களில் தங்களின் நடிப்பை வெளிப்படுத்தினார்கள். எழுபதுகளில், வாணிஸ்ரீ ‘வாணி ராணி’யில் கலக்கியெடுத்தார்.

அதேபோல் ஜெயலலிதாவின் திரைவாழ்வில் ‘அடிமைப்பெண்’ மிக முக்கியமான படம். நமக்கே இது முக்கியமான படம்தான். அப்பாவாகவும் மகனாகவும் எம்ஜிஆர் கலக்கியிருப்பார். ‘ஆயிரம் நிலவே வா’ என்று எஸ்பி.பி. பிரமாதமாகப் பாடியிருப்பார். ‘அம்மா என்றால் அன்பு’ என்று முதன்முதலாக ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடி நடித்தார். அதேபோல், முதன்முதலாக இரட்டை வேடங்களில் வித்தியாச மேனரிஸத்தால் அசத்தலான நடிப்பை வழங்கினார்.

‘அடிமைப்பெண்’ படத்துக்குப் பிறகு ஜெயலலிதாவின் ஆகச்சிறந்த நடிப்பை வழங்கியதும் இரட்டை வேடங்களில் வித்தியாசங்கள் காட்டி அட்டகாசம் பண்ணியதுமான திரைப்படம்தான் ‘வந்தாளே மகராசி’.

அப்பாவியாகவும் துணிச்சல்மிக்கவராகவும் என இரண்டு வேடங்களிலும் அத்தனை வித்தியாசங்களும் உடல் மொழிகளும் கொண்டு ஜெயலலிதா பிரமாதம் பண்ணியிருப்பார் இந்தப் படத்தில். டைட்டில் கூட அவரைச் சொல்வது போல, ‘வந்தாளே மகராசி’ என வைக்கப்பட்டது.

டாக்டர் சுந்தரம், பெற்றோர் இல்லாமல் வளர்ந்தவர். நண்பரின் உதவியால் மருத்துவம் படித்த சுந்தரம், கிராமத்துக்கு வந்து மக்களுக்கு மருத்துவச் சேவை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு கிராமத்துக்கு வருகிறார். அங்கே மங்கம்மாவும் அவரின் அம்மாவும் சேர்ந்துகொண்டு அட்டூழியங்கள் செய்கின்றனர். சக மனிதர்களை கடுகளவுவும் நேசிக்காமல் அவமதித்து நடந்துகொள்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் சுந்தரம், நொந்துகொள்கிறார். போதாக்குறைக்கு மங்கம்மா தன் கணவரான சிவலிங்கத்தை படாதபாடுபடுத்துகிறார்.

சுந்தரம்தான் ஜெய்சங்கர். மங்கம்மாதான் எம்.என்.ராஜம். அவருடைய அம்மா சி.கே.சரஸ்வதி. எம்.என்.ராஜத்தின் கணவர் சிவலிங்கம்தான் வி.எஸ்.ராகவன். இவருடைய மகள் உமாவாக புஷ்பலதா. இவருடைய கணவராக கே.விஜயன். இந்த கே.விஜயன் தான் ஜெய்சங்கரின் நண்பன். மருத்துவம் படிக்க உதவிய நண்பன்.

வி.எஸ்.ராகவனை இரண்டாந்தாராமாக திருமணம் செய்துகொள்கிறார் எம்.என்.ராஜம். அப்போதே சொத்துகளை தன் பெயருக்கு எழுதச் சொல்லி அடம் பண்ணுகிறார். அப்போதுதான் கல்யாணம் என்று மேடையில் உட்காராமல் வீம்பு செய்கிறார். புஷ்பலதா, கைப்பட சொத்துகள் வேண்டாம் என்று எழுதிக்கொடுத்த பிறகுதான் திருமணம் நடக்கிறது. பிறகு புஷ்பலதாவுக்கும் கே.விஜயனுக்கும் திருமணம் நடந்து, குழந்தைகளும் பிறக்கிறார்கள்.

இந்த நிலையில், கே.விஜயன் ராணுவத்தில் சேரக் கிளம்புகிறார். அங்கே போரில் உயிர் துறக்கிறார். தன் குழந்தைகளுடன் அப்பா வீடே கதியென இருக்கிறார் புஷ்பலதா. அவரையும் குழந்தைகளையும் இரக்கமே இல்லாமல் வாட்டிவதைக்கிறார் எம்.என்.ராஜம்.

அடுத்த வீட்டில் உள்ள எஸ்.என்.லட்சுமியின் மகள்தான் ஜெயலலிதா. பெயரும் லட்சுமிதான். அப்பாவி. பயந்தாங்கொள்ளி. தூக்கத்தில் எழுந்து பள்ளிக்குச் சென்று பாடம் நடத்துகிற அளவுக்கு மந்தமான மனநிலை கொண்டிருக்கிறார். இவரின் அப்பாவித்தனத்தைப் புரிந்து தெரிந்து, எம்.என்.ராஜம் தன் தம்பி சோவுக்கு இவரைத் திருமணம் செய்துவைக்கிறார். சொத்துக்கு ஆசைப்பட்டு நடக்கிற இந்தத் திருமணத்தை அடுத்து, தம்பதியைச் சேரவிடாமல் தடுக்கிறார். ஒரு வேலைக்காரியைப் போல் ஜெயலலிதாவை வேலை வாங்குகிறார். அத்தனைக் கஷ்டங்களையும் பயந்து நடுங்கிக் கொண்டே தாங்கிக்கொள்கிறார் ஜெயலலிதா. சோவும் எதுவும் எதிர்த்துக் கேட்பதில்லை.

இங்கே நடக்கிற கூத்துக்களையெல்லாம் கண்டு கொதித்துப் போகிறார் ஜெய்சங்கர். இந்தநிலையில், சென்னைக்கு வரும் ஜெய்சங்கர்... அங்கே ஜெயலலிதாவைச் சந்திக்கிறார். அதிர்ச்சியாகிறார். ‘கிராமத்தில் இருக்கும் லட்சுமி, இங்கே பட்டணத்தில் எப்படி?’ என்று யோசிக்கிறார். ‘’என் பெயர் ராணி’’ என்கிறார் ஜெயலலிதா. அவரையும் அவரின் அப்பா டி.கே.பகவதியையும் சந்தித்து, கிராமத்தில் உள்ள ஜெயலலிதா பற்றிய விவரங்களையெல்லாம் சொல்கிறார் ஜெய்சங்கர். ‘’கிராமத்துக்கு வந்து, அந்த ஜெயலலிதாவுக்குப் பதில் நீங்கள் நடித்து, எல்லோரின் கொட்டத்தையும் அடக்கவேண்டும், சொத்துகளை மீட்கவேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார் ஜெய்சங்கர். இதற்கு ஜெயலலிதாவும் டிகே.பகவதியும் சம்மதிக்கிறார்கள்.

யாருக்கும் தெரியாமல் ஆள்மாறாட்டம் நடக்கிறது. அதுவரை அடங்கி ஒடுங்கி பயந்து நடுங்கிக் கொண்டிருந்த ஜெயலலிதா பேயாட்டம் போட்டு அதகளம் பண்ணி, எம்.என்.ராஜம் கூட்டத்தினரை உண்டு இல்லை என்று பண்ணுகிற ‘எங்க வீட்டு பிள்ளை’ பாணி கதைதான். ஆனால், அப்பாவியாகவும் அத்துமீறுகிறவர்களை ஒடுக்குகிறவராகவும் என ‘டபுள் ஆக்ட்’ கொடுத்து வெரைட்டி காட்டி நடிப்பில் அசத்தியிருப்பார் ஜெயலலிதா. அதிலும் அப்பாவி ஜெயலலிதா, பதற்றமாகப் பார்த்தபடி, பேசுவதற்கே பயந்தபடி, எதையும் கொஞ்சம் இழுத்து இழுத்துப் பேசுகிற ஸ்டைலே காமெடி ரகளை பண்ணியது.

ஜெய்சங்கர்தான் நாயகன். படத்தின் ஆரம்பத்தில் இவரைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கும். ஜெயலலிதாவும் வந்துபோவார். ராணி கேரக்டர் ஜெயலலிதா வந்ததும், மொத்தப் படமும் அவரைச் சுற்றிச் சுழலத் தொடங்கிவிடும். வி.எஸ்.ராகவனுக்கு மனைவியிடம் இருந்து மரியாதை கிடைக்கும். புஷ்பலதாவுக்கும் குழந்தைகளுக்கு நல்ல உணவு கிடைக்கும். அப்பாவி ஜெயலலிதா, தன் அப்பாவிக்கணவன் சோவுடன் சேர்ந்து நல்லபடியாக வாழ்வார். சொத்துகளை பறிபோகாமல் மீட்டு புஷ்பலதாவிடம் கொடுப்பார். ஜெய்சங்கரைத் திருமணம் செய்துகொள்வார் ஜெயலலிதா என அடுத்தடுத்து நடக்கிற ஒவ்வொரு காட்சிகளும், அழகிய திரைக்கதையால் பின்னப்பட்டிருக்கும்.

படம் முழுக்க ஜெயலலிதா ராஜாங்கம்தான். கேரக்டரை உணர்ந்து தன் நடிப்பால் கலகலக்க வைத்திருப்பார் ஜெயலலிதா. ஜெய்சங்கரின் நடிப்பும் கச்சிதமாக இருக்கும். எம்.என்.ராஜம் இத்தனை கொடூரமாக நடித்து, ‘ரத்தக்கண்ணீர்’ காலத்திலேயே பார்த்திருந்தாலும், இதிலும் தன் முத்திரையைப் பதித்திருப்பார். சோ வழக்கம் போல், காமெடி பண்ணி, அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

இயக்குநர் திலகம் என்று கொண்டாடப்படும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கினார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுத, சங்கர் கணேஷ் இசையமைத்தார்கள்.

இந்தப் படத்தில் ’கண்களில் ஆயிரம்’ என்றொரு பாடலை டி.எம்.எஸ். ஸுடன் இணைந்து ஜெயலலிதா பாடினார். ஏற்கெனவே ‘அடிமைப்பெண்’ படத்தில் ‘அம்மா என்றால் அன்பு’ பாடியவர், இந்தப் படத்திலும் பாடி தன் திறமையை வெளிப்படுத்தினார்.

1973-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி வெளியான ‘வந்தாளே மகராசி’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஜெய்சங்கர் - ஜெயலலிதா ஜோடி வெற்றி ஜோடி என்று பேசப்பட்ட அந்தக் காலத்தில், இந்தப் படமும் வெற்றிப் படமாகவும் வெற்றி ஜோடிப்படமாக அமைந்தது. முக்கியமாக, ஜெயலலிதாவின் நடிப்பை எல்லோரும் கொண்டாடினார்கள். பெண்கள் மத்தியில் ஜெயலலிதாவின் நடிப்புக்கு தனித்த வரவேற்பு கிடைத்தது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கம் என்றாலே பெண்களுக்குப் பிடித்த படம் என்ற பட்டியலில் இடம்பிடித்துவிடும். அதேபோல, ‘வந்தாளே மகராசி’யும் மக்கள் மனங்களில் தனியிடம் பிடித்தது. நூறுநாள் படமாக வசூல் குவித்தது.

படம் வெளியாகி, 50 வருடங்களாகின்றன. ஜெயலலிதா இரட்டை வேடங்களில் நடித்து ஜொலித்த ‘வந்தாளே மகராசி’யைக் கொண்டாடினார்கள் தமிழ் ரசிகர்கள். பின்னாளில், அரசியலிலும் ‘வந்தாளே மகராசி’ என கொண்டாடினார்கள் தமிழ் மக்கள்.

பொதுவாகவே, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படங்களை எப்போதும் பார்க்கலாம். ஜெயலலிதாவின் உன்னத நடிப்பில் வெளியான ‘வந்தாளே மகராசி’யை இப்போதும் பார்க்கலாம்!

x