எம்ஜிஆர் படங்களிலேயே முற்றிலும் மாறுபட்டதொரு படம்தான் 'அன்பே வா'. எம்ஜிஆர் ஃபார்முலா கொஞ்சம்கூட இல்லாமல் வித்தியாசமானதொரு காதல் கதை. இப்படியான ஒரு படத்தில் நடிக்க எம்ஜிஆர் எப்படி ஒப்புக்கொண்டார் என்று இப்போதும்கூட வியப்பைத் தரும் படம் இது.
1966-ம் ஆண்டு வெளிவந்த ‘அன்பே வா’ திரைப்படத்தை இப்போது பார்த்தாலும் புத்தம் புதியதொரு படத்தைப் பார்க்கிற இனிய அனுபவத்தை அது தருவதும் ஆச்சரியம்தான். ஏவிஎம் நிறுவனம் ‘அன்பே வா’ படத்தைத் தயாரித்த அனுபவங்களும் சுவாரஸ்யமானவை.
ஏவிஎம் நிறுவனத்தின் அதிபர் மெய்யப்ப செட்டியாரின் புதல்வர் சரவணன் ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகர். சினிமாவில் எம்ஜிஆர் கத்திச் சண்டை போட்டால் அதனை அவ்வளவு ரசிப்பார் அவர். அப்போதெல்லாம் எம்ஜிஆர் படங்கள் முதலில் தாம்பரத்தில்தான் ரிலீஸ் ஆகுமாம். பிறகுதான் சென்னை நகரில் வெளியாகுமாம். எம்ஜிஆர் படங்களை முதல்நாளே பார்த்துவிடுவது சரவணனின் வழக்கம். அப்படித்தான் ‘நாடோடி மன்னன்’ வெளியான முதல்நாளே அவர் தன் சகோதரர்களான முருகன், குமரன் ஆகியோருடன் அந்நாளைய தாம்பரம் ஜிஆர் தியேட்டரில் அதைப் பார்த்துக் களித்தார்.
ஏவிஎம் செட்டியார் வீட்டு பிள்ளைகள் மனதில் எம்ஜிஆரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் நெடுநாட்களாக இருந்தது. ஏவிஎம் நிறுவனத்தின் சார்பில் அதுவரையில் எம்ஜிஆர் படம் ஒன்றுகூட உருவாகியிருக்கவில்லை. இவர்களின் எண்ணத்தை முதலில் சொன்னது இயக்குநர் ஏ.சி.திருலோக்சந்தரிடம்தான். அவரும் எம்ஜிஆருக்காகவே ஒரு கதையை உருவாக்கிவிட்டார். அப்போது உலகெங்கிலும், இந்தியாவிலும் வெற்றிகரமாக ஓடிய, ராபர்ட் பேட்ரிக் மல்லிகன் இயக்கிய ஹாலிவுட் ஆங்கிலப்படம் 'கம் செப்டம்பர்' (1961). அந்தப் படம் சென்னையிலும் சக்கைப்போடு போட்டது. அதன் இசையும் உலகப் புகழ் பெற்றது. அந்தப் படத்தின் கதையை மிகச் சாதுரியமாகத் தழுவி தமிழில் ‘அன்பே வா’ திரைக்கதை உருவாக்கப்பட்டது.
ஆனால், எம்ஜிஆரை வைத்து ஒரு படம் பண்ணலாமா என மெய்யப்ப செட்டியாரிடம் பேசி சம்மதம் வாங்க அவரது மகன்களுக்குத் தயக்கமிருந்தது. காரணம், ஏவிஎம் நிறுவனத்தில் கதாநாயகனுக்காகக் கதையை உருவாக்கும் வழக்கம் கிடையாது. கதையை முடிவு செய்தபின் அதற்கான நாயகனைத் தேர்வு செய்வதுதான் அங்கே நடைமுறை. அதனால் எம்ஜிஆருக்காக ஒரு கதையைத் தயார் செய்து படமெடுக்கலாம் என்று தந்தையிடம் எப்படிக் கலந்தாலோசிப்பது?
அப்போது எம்ஜிஆர் நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ (1965) வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. எனவே, திரைப்பட விநியோகஸ்தர்கள் எம்ஜிஆர் படம் ஒன்றைத் தயாரிக்குமாறு ஏவிஎம் நிறுவனத்தினரை நிர்பந்தித்தார்கள். எம்ஜிஆருக்கும் ஏவிஎம் படத்தில் நடிக்க விருப்பமிருந்தது. எனவே, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு செட்டியாரிடம் கேட்டார்கள். அவரோ, “இதை ஏன் முன்னமேயே சொல்லவில்லை?” என்று கோபித்துக் கொண்டார். உடனே பணிகளைத் தொடங்கச் சொன்னார்.
ராமாவரம் தோட்டம் சென்று எம்ஜிஆரைச் சந்தித்தார்கள் செட்டியாரின் பிள்ளைகள். எம்ஜிஆர் சம்மதித்தார். முதலில் 3 லட்சம் சம்பளம் கேட்டார் எம்ஜிஆர். 1966 ஜனவரி 14 அன்று பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்று ஏவிஎம் விரும்பியது. அதற்கு ஒப்புக்கொண்ட எம்ஜிஆர் சம்பளத்தை மூனேகால் லட்சமாக உயர்த்திக் கேட்டார். அப்போது ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘நான் ஆணையிட்டால்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் எம்ஜிஆர். அந்தப் படத்தைத்தான் 1966 பொங்கலுக்கு வெளியிடத் திட்டம். ஆனால், வீரப்பனை விட்டுக்கொடுக்கச் சொல்லிவிட்டார் எம்ஜிஆர். எல்லாம் ஏற்கப்பட்டு ஒப்பந்தமானது. படப்பிடிப்பு தொங்கியது.
ஏவிஎம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘அன்பே வா’. கதை சிம்லாவில் நகர்வதாக இருந்தாலும் முக்கால்வாசிப் படப்பிடிப்பை ஊட்டியிலேயே எடுத்து முடித்தார்கள். ஐந்தே ஐந்து நாட்கள்தான் சிம்லாவில் ஷூட்டிங். ஏ.சி.திருலோகசந்தரின் திரைக்கதை மிக அற்புதமாக இருந்தது. எம்ஜிஆரின் இயல்பான நடிப்பு படத்தின் கதைக்குப் பலம் சேர்த்தது. அழகுப் பதுமையாக விதவிதமான ஆடைகளில் வந்த நாயகி சரோஜாதேவி கொஞ்சுமொழி பேசியும் நாயகனுடன் சண்டையும் ஊடலுமாகவும் ரசிகர்களின் கவனம் பெற்றார்.
நாகேஷ் - மனோரமா நகைச்சுவை ஜோடி படத்திற்கு அசைக்கமுடியாத அடித்தளமிட்டார்கள். இவர்களோடு எஸ்.ஏ.அசோகன், டி.ஆர்.ராமச்சந்திரன், ராமராவ், பி.டி.சம்பந்தம், டி.பி.முத்துலட்சுமி, மாதவி போன்றோரும் படத்திற்கு பங்களித்தார்கள். எம்ஜிஆருடன் பணியாற்றி பழக்கமில்லாத ஏவிஎம் நிறுவனத்தினருக்கு ‘அன்பே வா’ படப்பிடிப்பு நாட்கள் முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. அதிலும் குறிப்பாக, சிம்லாவில் நடந்த படப்பிடிப்பின்போதான அனுபவங்கள் புதுமையானவையாக இருந்தன.
மாலை நேரங்களில் படப்பிடிப்பு முடிந்ததும் எம்ஜிஆர் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எல்லையில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இந்திய ராணுவ வீரர்களை ஒருநாள் போய்ப் பார்த்தார் எம்ஜிஆர். அப்போது பயங்கரமான குளிர். தமிழ்நாட்டு ஜவான்கள் எம்ஜிஆரை அடையாளம் கண்டுகொண்டு மிகவும் நெகிழ்ந்துபோனார்கள். அப்போது ராணுவ வீரர்களுக்காக நிதி திரட்டிக்கொண்டிருந்தார்கள்.
அந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பேசினார். ”ராணுவ வீரர்களுக்காக இங்கே எவ்வளவு நிதி சேருகிறதோ அதே அளவு தொகையை நான் என் தனிப்பட்ட அன்பளிப்பாகத் தருகிறேன்” என்று அப்போது அறிவித்தார். யாருமே அதை எதிர்பார்க்கவில்லை. ராணுவத்தினர் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பிறகு அந்தத் தொகை எவ்வளவு எனத் தெரிந்துகொண்டு தனது சம்பளத்தில் கழித்துக்கொள்ளுமாறு சொல்லி ஏவிஎம் நிறுவனத்தாரிடம் பணத்தைப் பெற்று ராணுவத்தினருக்கு வழங்கிவிட்டார் எம்ஜிஆர். இது அப்போது சிம்லா முழுவதும் மகிழ்ச்சிச் செய்தியாகப் பரவி அங்கே பலரும் அப்போதே எம்ஜிஆரின் ரசிகர்களாகிவிட்டார்கள். ‘அன்பே வா’ படப்பிடிப்பின்போது இதுமட்டுமா நடந்தது?
ஏவிஎம் சரவணனுக்குக் குளிர் தாங்காமல் கடுமையான தொண்டை வலி வந்துவிட்டது. உடல் நடுக்கத்தில் வேறு அவதிப்பட்டார். அதனால் ஒருநாள் படப்பிடிப்பின்போது தனது காருக்குள்ளேயே முடங்கிக்கிடந்தார் சரவணன். எம்ஜிஆருக்கு இது தெரியவந்ததும் என்ன செய்தார் தெரியுமா? ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் ஒரு மப்ளரைச் சுற்றியபடி சூடான பாலை எடுத்துக்கொண்டு சரவணன் இருந்த காருக்குப் போனார். கார் கதவைத் தட்டினார். சரவணன் அதிர்ந்துபோனார்.
“என்ன இது புது வழக்கம்? எனக்காக நீங்கள் எதற்கு இப்படிச் சிரமப்படுகிறீர்கள்? யாரிடமாவது கொடுத்து அனுப்பியிருக்கலாமே...” என்றார் பதற்றத்தோடு.
“ஆமாம்... யாரிடமாவது கொடுத்து அனுப்பியிருக்கலாம்தான். ஆனால், நீங்கள் சாக்குப்போக்கு சொல்லி பாலைக் குடிக்காமல் இருந்துவிடுவீர்களே. அதனால்தான் நானே கொண்டுவந்தேன். இப்போது நீங்கள் மறுக்காமல் குடிப்பீர்கள். உங்கள் தொண்டை வலிக்கு இந்தச் சூடான பால் ரொம்ப நல்லது. குடியுங்கள்...” என்றாராம் எம்ஜிஆர்.
அதைக் கேட்டு நெகிழ்ந்து போனாராம் சரவணன்!
முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:
தேநீர் நேரம் - 10: ஒட்டுமொத்த கச்சேரிக்கும் ஒன்ஸ்மோர்!வீடியோ வடிவில் காண: