சிவாஜி - மேஜர் அசத்தல் நடிப்பில் என்றென்றும் பிரகாசிக்கும் ’ஞானஒளி!’


’ஞானஒளி’ ஆன்டனியாக நடிகர்திலகம்

கண்ணாமூச்சி விளையாட்டு, எப்போதுமே சுவாரஸ்யமானதுதான். குற்றவாளிக்கும் போலீஸுக்கும் இடையே நடக்கிற கண்ணாமூச்சி அவற்றையெல்லாம் விட சுவாரஸ்யமும் பதட்டமும் தருபவை! சினிமாவில் இந்த கண்ணாமூச்சி விளையாட்டுகளை ரொம்பவே ரசிக்கிறோம். அப்படியொரு திருடன் - போலீஸ் கண்ணாமூச்சி ஆட்டம்தான் ’ஞானஒளி!’

குற்றவாளி யாரோ ஒருவன் என்பதைவிட, குற்றவாளியும் போலீஸும் நண்பர்களாக இருப்பின் இன்னும் எகிறுமே சுவாரஸ்ய முடிச்சு.. அப்படித்தான் ‘ஞானஒளி’யில் கதை பின்னப்பட்டிருக்கும்.

நடிகர்திலகம் சிவாஜிகணேசன் என்கிற நடிப்புலகச் சக்ரவர்த்தியின் முக்கியமான படங்களில் ‘ஞானஒளி’யும் உண்டு. சிவாஜியை ரசித்து இயக்கியவர்களில், பி.மாதவன் என்கிற அருமையான இயக்குநரும் ஞானஒளி மூலமாக இடம்பிடித்திருக்கிறார்.

’ஞானஒளி’ சிவாஜி, கோகுல்நாத்

’வியட்நாம் வீடு’, ’கெளரவம்’ வரிசையில் ’வியட்நாம் வீடு’ சுந்தரம் கதை, வசனம் எழுதி, சிவாஜியின் தனி ஸ்டைல் நடிப்பாலும் கரவொலிகளை வாங்கியது ‘ஞானஒளி’!

தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா கோயில், பிரசித்தி பெற்ற தேவாலயம். அங்கேயுள்ள பாதிரியார், அன்பே உருவெனக் கொண்டவர். அந்த மாதா கோயிலில் மணியடிக்கும் பணியைச் செய்துகொண்டிருக்கும் ஆன்டனி, பாதிரியாரின் செல்லப்பிள்ளை. நல்லவன்... ஆனால் மகா முரடன். கையால் பேசிவிட்டு அப்புறமாக ஆற அமரப் பேசுகிற வேகமுள்ளவன்.

ஆன்டனி, ஆசை ஆசையாய் காதலிக்கிறான். அன்பு ததும்ப வாழ்கிறான். மனைவியுடன் வாழத் தொடங்குகிற வருடத்திலேயே அவள் இறந்துபோகிறாள். பின்னர் தன் மகள் மேரியே உலகம் என்று வாழ்கிறான். பாதிரியாரின் உதவியால் வெளியூருக்கு அனுப்பி, பெரிய படிப்பெல்லாம் படிக்கவைக்கிறான்.

இதனிடையே, அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புதிதாக வேலைக்கு வருகிறார் லாரன்ஸ் எனும் போலீஸ் அதிகாரி. பாதிரியாரைச் சந்தித்து ஆசி பெறுகிறார். அப்போது சிறுவயதில் இங்கே வளர்ந்ததைச் சொல்லி நினைவுபடுத்துகிறார். ஆமாம்... சிறுவயதில், ஆண்டனியும் லாரன்ஸும் இணைபிரியாத நண்பர்கள். பால்ய சிநேகிதர்கள் இருவரும் பெரியவர்களாக அறிமுகமானதில் பழைய நட்பு மீண்டும் துளிர்க்கிறது.

இதனிடையே படிக்கச் சென்ற மேரி ஒருவனைக் காதலித்த நிலையில் திரும்பி வருகிறாள். ஒருநாள் கொல்லைப்புறத்தில் மகளும் அவள் காதலிக்கும் இளைஞனும் ஒன்றிணைந்திருக்க, ஆவேசமாகிறான் ஆன்டனி. அரிவாளை எடுக்கிறான். ஆனால், நண்பன் லாரன்ஸ் தடுக்கிறான். அப்போதே மோதிரம் மாற்றிக்கொள்ளச் செய்கிறான். பிறகு கல்யாணம் நடத்திக்கொள்ளலாம் என்கிறான்.

அதையடுத்து, அந்தப் பையனைச் சந்திக்க திருவையாறுக்குச் செல்கிறான் ஆன்டனி. அங்கே அவனின் நிஜமுகம் தெரிகிறது. மீண்டும் கோபமாகித் துடிக்கிறான் லாரன்ஸ். ‘’உம்பொண்ணு பத்தோட பதினொன்னு’’ என்று அலட்சியமாகப் பேச, அவனை ஒரேயொரு அடிதான் அடிக்கிறான் லாரன்ஸ். ஆனால், அவன் இறந்துவிடுகிறான். கொலைக்குற்றவாளி ஆன்டனியை, போலீஸ் லாரன்ஸ் கைது செய்கிறான்.

’ஞானஒளி’ சிவாஜி, மேஜர், சாரதா

கோர்ட்டில் குற்றம் நிரூபணமாகிறது. தண்டனை கிடைக்கிறது. பாதிரியாருக்கு ஆண்டனி இல்லாமல் கை ஒடிந்தது போலிருக்கிறது. லாரன்ஸிடம் ஆண்டனியைப் பார்க்க ஆசைப்படுகிறேன் எனச் சொல்கிறார். ‘’எனக்காக அவனை இங்கே அழைத்து வா’’ என்று உதவி கேட்கிறார். அதன்படி பரோலில் ஆண்டனியை பாதிரியாரிடம் அழைத்து வருகிறான் லாரன்ஸ்.

இப்போது, பாதிரியாரைப் பார்க்கிறான் ஆன்டனி. ‘’நான் ஆண்டனிகிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும். லாரன்ஸ் கொஞ்சம் வெளியே இரு’’ என்கிறார் பாதிரியார். தன் ஆசைகளையும் தேவாலயத்தை வளர்க்கவேண்டும் என்பதையும் மருத்துவமனை, பள்ளிக்கூடமெல்லாம் கட்ட ஆசைப்படுகிறேன் என்பதையும் சொல்லிவிட்டு இறக்கிறார்.

அப்போது லாரன்ஸ், ‘’பரோல் நேரம் முடிந்துவிட்டது. வா போகலாம்’’ என்கிறார். ஆன்டனியோ, ‘’பாதிரியார் இறந்துட்டாரு. அவர் இறந்த சேதியை மணியடிச்சுச் சொல்லணும். எத்தனையோ பேருக்கு சவப்பெட்டி செஞ்சிருக்கேன். என்னை வளர்த்து ஆளாக்கிய பாதிரியாருக்கும் சவப்பெட்டி செய்யணும்’’ என்கிறான். ஆனால் லாரன்ஸ் விடவில்லை. இருவருக்கும் சண்டை மூள்கிறது. பாதிரியார் கொடுத்த ‘ஞானஒளி’யை கையில் வைத்திருக்கிறான் ஆண்டனி. அந்த இரும்பு ஸ்டாண்டைக் கொண்டு, லாரன்ஸை நெற்றியில் அடித்துவிட்டு, ஊரைவிட்டே ஓடுகிறான்.

பல வருடங்கள் ஓடிவிட்ட நிலையில், திருக்காட்டுப்பள்ளிக்கு தொழிலதிபர் அருண் என்பவர் வருகிறார். பாதிரியார் ஆசைப்பட்ட பணிகளையெல்லாம் செய்கிறார். அந்தத் தொழிலதிபரை உற்றுப் பார்க்கிற லாரன்ஸுக்கு சந்தேகம்... ‘இவன் ஆண்டனியாக இருக்குமோ’ என்று! ஆமாம் அது ஆன்டனிதான்! ஆரம்பகாலத்தில், பாதிரியாரை தீவிபத்தில் இருந்து காப்பாற்றும் வேளையில், ஆண்டனிக்கு ஒரு கண் பறிபோயிருக்கும். ஆனால், இப்போது கூலிங்கிளாஸுடன் ஸ்டைலாக இருப்பார் அவர்.

லாரன்ஸுக்கு ‘இவனே ஆண்டனி’ என்று சந்தேகம் வலுக்கிறது. ஆனால் ஆதாரம் ஏதுமில்லை. அவரை தன் வலையில் விழவைக்கவும், ஆன்டனி என்பதை நிரூபிக்கவும், அடுத்தடுத்து திட்டங்கள் போடுகிறார் லாரன்ஸ். இறுதியில் என்னவானது என்பதுதான் ’ஞானஒளி’யின் கதை!

ஆண்டனியாக, மாதாகோயிலில் மணி அடிப்பவராக சிவாஜி. அரை நிஜாரும் ஒருபக்க கண்ணை துணியால் மூடியபடியும் வந்து அமர்க்களப்படுத்துவார். பாதிரியாராக கோகுல்நாத். மகள் மேரியாக சாரதா. அவளை காதலித்து ஏமாற்றி இறந்து போகிற இளைஞனாக ஸ்ரீகாந்த். சாராதாவைக் காப்பாற்றும் டாக்டராக வி.கே.ராமசாமி. லாரன்ஸ் எனும் போலீஸ் நண்பனாக, மேஜர் சுந்தர்ராஜன். சிவாஜிக்கு இணையாக போட்டிபோட்டுக்கொண்டு நடித்திருப்பார். ஆண்டனி என்கிற அருணும் லாரன்ஸும் மோதிக்கொள்ளும் காட்சிகள், தியேட்டரில் விசிலை வரவழைக்கும். வலிக்க வலிக்க கைத்தட்டி கைத்தட்டினார்கள்.

அடிக்கடி, நெஞ்சில் கைவைத்துத் தடவித் தட்டுகிற மேனரிஸம், ’ஞானஒளி’யின் சிவாஜி ஸ்பெஷல். ’’என்னடா வாங்க போங்கன்னு கூப்பிடுறே. வாடா போடான்னே கூப்பிடு’’ என்பார் மேஜர் சுந்தர்ராஜன். உடனே சிவாஜி, ’’சரிடாடாடா... வரேண்டாடடாடா’’ என்று சிவாஜி சொல்லும் ஸ்டைல் நம்மை நெகிழவும் மகிழவும் வைத்துவிடும்.

பார்க்க ஆசைப்படும் பாதிரியாருக்காக, கைதி சிவாஜியை மேஜர் அழைத்துவருவார். ஹாலின் வாசற்கதவருகேயே நின்றிருப்பார் சிவாஜி. ’’ஏய்... முரட்டுப்பயலே... வாடா’’ என்று பாதிரியார் அழைக்க, கைகளை குறுக்கிக்கொண்டு, கால்கள் துவளவிட்டு, தலை கவிழ்ந்திருக்க... குற்ற உணர்ச்சியுடனும் குழந்தையைப் போலவும் நடந்தும் ஓடியுமாக வந்து, பாதிரியாரின் காலடியில் தொப்பென்று விழுவாரே... அதை சிவாஜியைத் தவிர சிவாஜிதான் செய்யமுடியும்!

தப்பிக்கும் சிவாஜியைப் பார்த்து, மேஜர் துப்பாக்கி காட்டுவார். ’’ஓடுனா ஷூட் பண்ணிருவேன். ஷூட்டிங் ஆர்டர் வாங்கிட்டுதான் வந்திருக்கேன்’’ என்பார். ’’சுடமுடியாது லாரன்ஸு...’’ என்பார் சிரித்துக்கொண்டே! ’’இந்த வெளிஉலகம் கத்துக்கொடுத்ததை விட, ஜெயில் உலகம் நிறையவே கத்துக்கொடுத்திருக்கு. அந்தக் குண்டுகளை நான் எடுத்து...ட்டேன்...’’’என்று ‘எடுத்து...ட்டேன்...’’ என்று சொல்லும்போது மொத்தத் தியேட்டரும் வெடித்துச் சிரித்தது!

டிராயரும் சின்ன சட்டையும் ஒரு கண்ணை மறைத்த துணியும் நெஞ்சில் ஆடும் சிலுவை டாலருமாக வலம் வந்தபோது சிவாஜியின் உடல்மொழி ஒருமாதிரி! பிறகு தொழிலதிபராக, லேசான முறுக்கு மீசையும் கறுப்புக் கூலிங்கிளாஸும், கோட்டும்சூட்டுமாக மிடுக்குடன் வரும்போது, அவரின் மேனரிஸம் நம்மை மிரளவைத்துவிடும்.

சிவாஜிக்கு இணையான கதாபாத்திரம் என்பதை புரிந்து நடித்திருப்பார் மேஜர் சுந்தர்ராஜன். மேஜரின் வாழ்நாள் கேரக்டர்களில், இதுவும் ஒன்று. ‘’மத்தவங்க எடுத்தா திருட்டு. அதையே போலீஸ் செஞ்சா, ஞாபகமறதி’’ என்று சிவாஜி சொல்லிவிட்டு, ’’ உங்க கோட்டுக்குள்ளே இருக்கிற வெள்ளி டம்ளர்’’ என்று ஸ்டைலாகச் சொல்லுவார் சிவாஜி. அசடு வழிவார் மேஜர். இப்படியாகத்தான் ஒவ்வொரு காட்சியிலும் சிவாஜியும் மேஜரும் நடிப்பில் அசத்துவார்கள்.

கவியரசரும் மெல்லிசை மன்னரும் கூட்டணி அமைத்து அசத்தினார்கள். ‘அம்மாகண்ணு சும்மா சொல்லி ஆசை இல்லியோ’’ பாட்டு காதல் ரகம். ‘’தேவனே என்னைப் பாருங்கள், என் பாவங்கள் தம்மை வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்ற பாடல் துக்கத்தின் சாயல். ’’உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன. இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே...’’ என்று சொல்லும்போது, சிவாஜியின் நடிப்பு அழவைத்துவிடும்.

1972ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி வெளியானது ‘ஞானஒளி’. 51 ஆண்டுகளாகின்றன. இப்போதும் எப்போதும் நம் மனங்களில், ‘ஞான ஒளி’ சுடர் பிரகாசமாக எரிந்துகொண்டே இருக்கும். அந்த மாதாக்கோயில் மணிச்சத்தம் நமக்கு கேட்டுக்கொண்டே இருக்கும்!

x