திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை


சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

லிப்ரா ப்ரொடக்சன்ஸ் என்ற பெயரில் தமிழ் திரை உலகில் திரைப்படங்களை தயாரித்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர், ’முருங்கைக்காய் சிப்ஸ்’, ’நட்புனா என்னன்னு தெரியுமா’, ’நளனும் நந்தினியும்’, ’சுட்ட கதை’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து உள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு புதிய நிறுவனம் ஒன்றை துவங்க 16 கோடி ரூபாய் அளவிற்கு தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரவீந்தர் பணம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நிறுவனத்தை துவங்காமல் தன்னை மோசடி செய்ததாக அந்த தொழிலதிபர் புகார் அளித்தார். இதன் பேரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி அவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். சுமார் ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர், பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது வெளியில் உள்ளார்.

இந்த நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மோசடியாக பெறப்பட்ட பணத்தை, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்த புகார் தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x