சிவாஜியை வைத்து தன் முதல்படத்தை இயக்கினார் ஏ.பி.நாகராஜன். எம்ஜிஆரை முதலும் கடைசியுமாக வைத்து இயக்கினார். சிவாஜியை வைத்து ‘நவராத்திரி’யைக் கொடுத்த இயக்குநர் எம்ஜிஆரை வைத்து ‘நவரத்தினம்’ கொடுத்தார்.
அந்தக் காலத்தில் ஏ.பீம்சிங், பி.ஆர்.பந்துலு, ஏ.பி.நாகராஜன் படங்களுக்கெல்லாம் தனி வேல்யூ இருந்தது. பீம்சிங் குடும்பக்கதைகளில் கலக்குவார். பந்துலு குடும்பக்கதைகளை காமெடியாகக் கொடுத்து அசத்துவார். ஏ.பி.நாகராஜன், குடும்பக்கதைகளையும் கொடுப்பார். நாவல்களையும் படமாக்குவார். புராணப் படங்களிலும் பிரம்மாண்டம் காட்டுவார்.
படங்களுக்குக் கதையும் வசனமும் எழுதத் தொடங்கி, சினிமாவில் கால்பதித்த ஏ.பி.நாகராஜன், 1962-ம் ஆண்டு இயக்குநராக அவதாரம் எடுத்தார். ‘வடிவுக்கு வளைகாப்பு’ படம்தான் ஏ.பி.நாகராஜன் இயக்கிய முதல் படம். நடிகை வடிவுக்கரசிக்கு பெரியப்பாதான் ஏ.பி.நாகராஜன். இந்தப் படம் வெளியான தருணத்தில் பிறந்ததால், படத்தின் நினைவாக, ‘வடிவுக்கரசி’ என்று பெயர்சூட்டியதை வடிவுக்கரசியே பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
சிவாஜி - ஏ.பீம்சிங், சிவாஜி - பி.ஆர்.பந்துலு, சிவாஜி - ஏ.பி.நாகராஜன் கூட்டணி என இந்தக் கூட்டணிகள் எல்லாமே வெற்றிக் கூட்டணியாக அமைந்தன. வருடத்துக்கு ஒருபடம் வீதம், பீம்சிங், பி.ஆர்.பந்துலு, ஏ.பி.நாகராஜன் என வரிசையாக கால்ஷீட் கொடுப்பதை வழக்கமாகவே கொண்டிருந்தார் சிவாஜி.
’நான் பெற்ற செல்வம்’, ’மக்களைப்பெற்ற மகராசி’, ‘பாவை விளக்கு’ முதலான சிவாஜியின் படங்களுக்கு வசனம் எழுதிய ஏ.பி.நாகராஜனுக்கும் சிவாஜிக்கும் நல்லதொரு நட்பு உருவானது. 62-ம் ஆண்டு ‘வடிவுக்கு வளைகாப்பு’, 63-ம் ஆண்டு ‘குலமகள் ராதை’ என இயக்கினார். 1964-ம் ஆண்டு சிவாஜியின் 100-வது படமான ‘நவராத்திரி’ படத்தை இயக்கினார்.
பொதுவாகவே விஜயலட்சுமி பிக்சர்ஸ் எனும் பேனரில், படத்தைத் தயாரித்து இயக்குவது ஏ.பி.என் வழக்கம். ‘திருவிளையாடல்’, ‘கந்தன்கருணை’, ‘தில்லானா மோகனாம்பாள்’ என எத்தனையோ வெற்றிப் படங்களை சிவாஜி - ஏ.பி.என் கூட்டணி தந்தது.
1973-ல் ‘ராஜராஜசோழன்’ படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கினார். 1962-ம் ஆண்டு தொடங்கி 11 வருடங்களில் ஏராளமான படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். ‘ராஜராஜ சோழன்’ படம்தான் சிவாஜியும் ஏ.பி.நாகராஜனும் கடைசியாக இணைந்து பணியாற்றிய திரைப்படம்.
அடுத்து ‘காரைக்கால் அம்மையார்’ படத்தை எடுத்தார். 1974-ம் ஆண்டு சிவகுமார், கமல் முதலானோர் நடித்த ‘குமாஸ்தாவின் மகள்’ படத்தையும் 1975-ம் ஆண்டு, சிவகுமார், கமல் இணைந்து நடித்த ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தையும் இயக்கினார்.
1976-ம் ஆண்டு, எம்ஜிஆருடன் முதன்முதலாக ஏ.பி.நாகராஜன் இணைந்தார். இந்தப் படத்தை வேறொரு பெயரில் அவரே தயாரித்து இயக்கத்தொடங்கினார். இந்தப் படம் 1977-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி வெளியானது.
’நவராத்திரி’ படத்தில் கதையின் நாயகி சாவித்திரி, வீட்டைவிட்டு வெளியேறியிருப்பார். ‘நவரத்தினம்’ படத்தில் எம்ஜிஆர் வீட்டைவிட்டு வெளியேறியிருப்பார். வெளியே வந்த சாவித்திரி அந்த ஒன்பது நாட்களிலும் ஒவ்வொரு குணாதிசயங்களைக் கொண்ட ஆண்களைச் சந்திப்பார். இங்கே, எம்ஜிஆர், ஒன்பது வித குணங்களைக் கொண்ட பெண்களைச் சந்திப்பார்.
’நவராத்திரி’யில் சாவித்திரி சந்திக்கிற தன் காதலர் உட்பட மீதமுள்ள எட்டுப்பேரும் சிவாஜிகள். ஆக மொத்தம் ஒன்பது சிவாஜிகள். ‘நவரத்தினம்’ படத்தில் ஒரேயொரு எம்ஜிஆர். அந்த எம்ஜிஆர், லதா, ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா, ஒய்.விஜயா முதலான ஒன்பது பெண்களைச் சந்திப்பார். மற்றபடி, ‘நவராத்திரி’க்கும் ‘நவரத்தினம்’ படத்துக்கும் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் தயாரிப்பு டைரக்ஷன் என்பதைத் தவிர, எந்தத் தொடர்புமில்லை!
1928-ம் ஆண்டு பிறந்த ஏ.பி.நாகராஜனுக்கு இந்தப் படம் ரிலீஸாகும்போது, 49 வயதுதான். ஆனாலும் உடல்நல பாதிப்பால், இந்தப் படம் வெளியான 25-வது நாளில், ஏப்ரல் 1-ம் தேதி காலமானார் ஏ.பி.நாகராஜன்.
நடிகர்திலகம் சிவாஜியை வைத்து தன் முதல் படத்தை இயக்கிய ஏ.பி.நாகராஜன் மக்கள்திலகம் எம்ஜிஆரை வைத்து இயக்காத குறை இருந்தது. எழுபதுகளின் ஆரம்பத்தில், அதாவது கருணாநிதியும் எம்ஜிஆரும் பிரிவதற்கு முன்னதாக, நடிகை ஜி.சகுந்தலா ஒரு படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. கருணாநிதி கதை வசனம் எழுத, எம்ஜிஆர் நடிக்க, இயக்குநர் ஏ.பி.நாகராஜன் இயக்குவதாக இருந்தது. அந்தப் படத்தின் பெயர் ‘வெள்ளிக்கிழமை’. இந்தப் படம் ஏதோ காரணத்தால் எடுக்கப்படாமலே நின்றுபோனது.
அதன் பிறகு 1977-ம் ஆண்டு, எம்ஜிஆர் நடித்து ஏ.பி.நாகராஜன் தயாரித்து இயக்கிய ‘நவரத்தினம்’ வெளியானது. சிவாஜியை வைத்து ‘நவராத்திரி’ கொடுத்த ஏ.பி.என், எம்ஜிஆரை வைத்து ‘நவரத்தினம்’ படத்தை இயக்கியதன் மூலம் எம்ஜிஆரை வைத்து படமெடுக்க வேண்டும் என்ற அவரது ஆசையும் நிறைவேறியது. ஆனால், அதுவே அவருடைய கடைசிப் படமாக ஆனது என்பதுதான் பெரும் சோகம்!