61 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் ஒலிக்கும் ‘மணமகளே மருமகளே வா வா!’


எஸ்எஸ்ஆர் - விஜயகுமாரி

ஏ.பீம்சிங், பி.ஆர்.பந்துலு காலத்திலேயே, குடும்பக் கதைகளையும் மனித உணர்வுகள் சார்ந்த விஷயங்களையும் கதைகளாகக் கொடுத்து, கதை மாந்தர்களை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிற மனிதர்களைப் போலவே திரையில் கொண்டுவந்தவர் இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அப்போதே, தனக்கென தனியிடம் பிடித்த இயக்குநராகத் திகழ்ந்தார். குடும்பக் கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்குவதில், மனிதர் அந்தக் கால கே.பாக்யராஜ்.

ஒரு சின்ன விஷயம்தான், கதையின் முடிச்சாக இருக்கும். அதை வைத்துக் கொண்டு, தொய்வில்லாத திரைக்கதையையும் மிக இயல்பான வசனங்களையும் தந்து, நடிகர்களை நம் மனதுக்கு நெருக்கமானவர்களாக்கிவிடுவார் கேஎஸ்ஜி. அவர் இயக்கிய ‘சாரதா’ படத்தை மறக்கமுடியுமா?

கேஸ்ஜி தனது படங்களில் தேவையற்ற நகைச்சுவை, அச்சுப்பிச்சு காமெடி, சிகரெட் குடிக்கப் போவதற்காகவே பாடல்கள் என்றெல்லாம் செய்யவே மாட்டார். ’’கேஎஸ்ஜிக்கு எஸ்.வி.ரங்காராவ் ஒருத்தர் போதும்யா. படத்தை எடுத்து ஹிட்டாக்கிருவார்’’ என்பார்கள் அப்போது. இவரின் பல படங்கள் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். அதில் ‘சாரதா’வுக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுத்தேயாக வேண்டும். காரணம், அதற்கு முன்னதாக பல படங்களுக்கு கதை எழுதி, வசனம் எழுதி, பாடல்கள் கூட எழுதிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல்.சீனிவாசன் தயாரிக்க, முதன்முதலாக இயக்கிய காவியம்தான் ‘சாரதா’.

‘சாரதா’

ஆசிரியர் சம்பந்தம் எனும் கதாபாத்திரத்தில் எஸ்எஸ்ஆர். சாரதாவாக விஜயகுமாரி. இவரின் அப்பா எஸ்.வி.ரங்காராவ். மகளின் காதலை தந்தை எதிர்ப்பார். அந்த எதிர்ப்பையெல்லாம் மீறி எஸ்எஸ்ஆரை திருமணம் செய்துகொள்வார் விஜயகுமாரி. திருமணத்தன்று விழா ஏற்பாடுகளைப் பார்வையிட ஆசிரியரான எஸ்எஸ்ஆர். செல்ல, அங்கே மாடியின் உச்சியில் இருந்து கீழே விழுந்துவிடுவார். உயிர் பிழைத்துவிடுவார் எஸ்எஸ்ஆர். ஆனால்..?

’’உயிர் பிழைத்திருக்கலாம். இதுவே கடவுள் செயல். ஆனால், தாம்பத்யத்தில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபட்டால், அவரின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்’’ என்று எஸ்எஸ்ஆரின் அம்மாவிடமும் மனைவியிடமும் சொல்லி அறிவுறுத்துக்கிறார் மருத்துவர்.

ஆனால், இதை அறிந்திடாத கணவன், தன் மனைவியை அடிக்கடி நெருங்க முற்படுவார். மனைவியோ ஏதேதோ காரணங்கள் சொல்லி விலகிக்கொண்டே இருப்பார். சமாளித்துக் கொண்டே இருப்பார். இதெல்லாம் ஒரு பெண்ணுக்கே உண்டான நாணம், வெட்கம், கூச்சம் என்பதாக அவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தொடர்ந்து தாம்பத்யத்துக்கு மனைவியை அழைத்துக் கொண்டே இருப்பார் கணவர். தொடர்ந்து, அந்த தர்மசங்கடத்தில் இருந்து தப்பித்துக் கொண்டே வருவார் மனைவி.

‘சாரதா’

ஒரு கட்டத்தில் விஷயம் எஸ்எஸ்ஆருக்குத் தெரியவருகிறது. இதை உணர்ந்தவர் அதிர்ந்து போகிறார். இந்த நிலையில், அவருக்கு புதிய நண்பராக அசோகன் கிடைக்கிறார். அசோகனுக்குள்ளேயும் ஒரு சோகம் உண்டு. ‘’என் அக்கா பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அவளோ வேறொருத்தரை லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கிட்டா’’ என்று எஸ்எஸ்ஆரிடம் சொல்வார். அசோகனின் அக்கா மகள் ‘சாரதா’தான் தன் மனைவி என்பது எஸ்எஸ்ஆருக்குத் தெரியாது.

பிறகொரு தருணத்தில், மனைவிக்கு தாம்பத்ய சுகத்தைக் கொடுக்கமுடியாதவனாக இருக்கிறோமே... பாவம் அவள்... என நினைத்துக்கொண்டே கவலையில் உடைந்துபோவார். அப்போதுதான், தன் நண்பன் அசோகன்தான், தன் மனைவிக்கு முறைப்பையன் எனும் விவரம் தெரிந்ததும் யோசனை செய்வார். மனைவிக்கு எந்தச் சுகமும் தரமுடியவில்லை. அதேபோல், நண்பனுக்கும் ஆசைப்பட்ட அக்காபெண் கிடைக்கவில்லை. பேசாமல், இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தால் என்ன என்கிற முடிவுக்கு கணவன் எஸ்எஸ்ஆர் வருவார். ஆகவே, ‘’உன்னை விவாகரத்து செய்கிறேன். நீ உன் முறைமாமனையே திருமணம் செய்துகொள். நானே நடத்திவைக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, தன் அம்மாவிடம் அபிப்ராயம் கேட்க, அம்மாவும் சம்மதிக்கிறார்.

ஒருபக்கம், கணவனைப் பிரிய மனமின்றிக் கலங்கிக் கதறுகிறாள் சாரதா. அதேபோல், என்னதான் ஆசைப்பட்டாலும் அவளுக்குத்தான் திருமணமாகிவிட்டதே... என்று அசோகன் நினைக்கிறார். ஆனால், எஸ்எஸ்ஆரின் அம்மாவோ... ‘’நானே சொல்லலாம்னு இருந்தேன். நீயே முடிவு பண்ணிட்டேப்பா. உன்னைப் பெத்ததுக்கு நான் ரொம்பப் பெருமைப்படுறேன்’’ என்று உறுதியாகச் சொல்லி ஆசீர்வதிக்கிறாள்.

சாரதாவோ இன்னும் உடைந்து போகிறாள். ஒருவழியாக, விவாகரத்து நடக்கிறது. திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடக்கின்றன. காதலித்தவனைக் கல்யாணம் செய்துகொண்ட மகள் மீது ஏற்கெனவே கோபத்திலிருக்கும் அப்பாவோ, ‘’இதென்ன விவாகரத்து... இன்னொரு கல்யாணம்... ச்சீச்சீ..’’ என்று மகளைக் கண்டிக்கவும் தண்டிக்கவுமாக ஓடிவருவார்.

மணக்கோலத்தில் அசோகனும் விஜயகுமாரியும். ஆனால் அசோகனை ஏற்க மனமில்லாமல் விஜயகுமாரி இருப்பார். நண்பனின் மனைவியைத் திருமணம் செய்துகொள்ள மனசே வராமல் குறுகி நிற்பார் அசோகன். மணக்கோலத்தில், மணமேடையில், விஷமருந்திய நிலையில், கணவர் எஸ்எஸ்ஆரிடம் காலில் விழுந்து நமஸ்கரிப்பார் விஜயகுமாரி. அப்படியே சரிந்து மரணிப்பார். எல்லோரும் விக்கித்தும் துக்கித்தும் வெறித்திருக்க, படத்தை முடிப்பார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். படம் முழுக்க, ஒவ்வொரு காட்சியும் கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொருவரின் நடிப்பும் வசனங்களும் நம்மைக் கலங்கடித்துக் கொண்டே இருக்கும்.

எஸ்எஸ்ஆர், விஜயகுமாரி, எஸ்.வி.ரங்காராவ், எம்.வி.ராஜம்மா, எம்.ஆர்.ராதா, அசோகன் என ஒருவருக்கொருவர், நடிப்பில் மிளிர்ந்து ஒளிர்ந்து ஜொலித்தார்கள். ’ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன?’ என்ற பாடலும் காட்சிகளும் ரசனையாக இருக்கும். ’மெல்ல மெல்ல அருகில் வந்து, மென்மையான கையைத் தொட்டு, அள்ளியள்ளி அணைக்கத் தாவுவேன், நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்’ என்ற பாடல், நம்மை அழச் செய்துவிடும்.

’மணமகளே மருமகளேே வா வா...’ என்ற பாடல் இன்றைக்கும் மிகப்பெரிய ஹிட். அந்தப் பாடல் வந்த காலத்திலிருந்து இன்றைய ஹைடெக் காலம் வரைக்குமாக, திருமண வீடுகளில், நிச்சயதார்த்த விழாக்களில் ‘மணமகளே மணமகளே வா வா’ என்று அழைக்காத ஒலிப்பெருக்கிகளே இல்லை.

எல்லாப் பாடல்களையும் கவியரசு கண்ணதாசன் எழுதினார். இந்த ‘மணமகளே மருமகளே வா வா’ பாடலை மட்டும் பஞ்சு அருணாசலம் எழுதினார். கே.வி. மகாதேவன் இசையில் எல்லாப் பாடல்களுமே மனதில் பச்சக்கென்று இன்றைக்கும் பதிந்திருக்கிறது.

தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாத கணவன், கணவனே மனைவிக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு எடுப்பது, அதற்கு மாமியாரே சம்மதம் தெரிவிப்பது என்பதெல்லாம் இன்றைக்கு எப்படியோ..? ஆனால், அந்தக் காலத்தில் அவ்வளவு எளிதல்ல. அதைச் சொல்ல தைரியமும் அவசியம். 1962-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான இந்தப் படம், ’சுஹாகன்’ என்று இந்தியிலும் ’சுமங்கலி’ என்று தெலுங்கிலும் ’சோத்து கெத்தவாலு’ என்று கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்து மொழிகளிலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தக் கதையைக் கேட்டுவிட்டு ‘’வேணாம் செட்டியார். இந்தப் படம் மக்களுக்குப் பிடிக்காமப் போயிரும்’’ என்று பலரும் ஏஎல்எஸ்-ஸிடம் சொன்னார்கள். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. புதுமை விரும்பியான ஏஎல்எஸ், மிக தைரியமாகவும் துணிச்சலுடனும் படத்தை எடுக்க முன்வந்தார்.

இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

அதேபோல், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், படம் மொத்தத்தையும் பார்த்துவிட்டு, ‘’பணத்தைத் திருப்பிக் கொடுங்க. இந்தப் படம் கையைக் கடிக்குமோனு பயமா இருக்கு’’ என்று சொல்ல, எல்லா விநியோகஸ்தர்களுக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார் ஏஎல்எஸ். பிறகு தமிழகம் முழுவதும் சொந்தமாகவே ரிலீஸ் செய்தார். மிகப்பெரிய புதுமைகளைச் சொன்ன படம் என்று பத்திரிகைகள் கொண்டாடின.

படம் வெளியாகி 61 ஆண்டுகளாகின்றன. கிட்டத்தட்ட, இரண்டு தலைமுறைக்கு முன்னதாக இப்படியொரு விஷயத்தைக் கருவாக எடுத்து, கதையாக உருவாக்கி, எல்லோரும் ஏற்கும் வகையில் தனித்து ஜொலித்த ‘சாரதா’ நூறாண்டுகளானாலும் கொண்டாடப்பட்டுக்கொண்டே இருப்பாள். முகூர்த்தநாளில், வாழைமரமும் பந்தலும் கட்டப்பட்ட வீடுகளிலும் கல்யாண மண்டபங்களிலும் ‘மணமகளே மருமகளே வா வா’ ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்!

x