தமிழ் சினிமா இயக்குநர்கள் ஒவ்வொருவரும் ஒரு பாணியை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் பாணியில் படங்களைத் தந்து ஜெயித்துக் கொண்டுமிருக்கிறார்கள். ஒவ்வொரு படத்தையும் ஸ்டைலாக எடுப்பதுதான் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் பாணி; சொல்லப்போனால், அதுதான் அவரின் ஸ்டைல்!
பொதுவாகவே, இயக்குநர்களுக்குள் ஒரு ஹீரோயிஸம் ஒளிந்துகொண்டிருக்கும். அதேபோல், நாயகியைப் பற்றிய பிம்பங்களை மனதுக்குள் வரைந்துவைத்திருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், வில்லத்தனம் செய்யும் குணங்கள் கொண்ட கெட்டவர்களைக் கூட, ‘இவன் இப்படித்தான் இருப்பான்; இப்படித்தான் இருக்கணும்; இப்படியாகத்தான் நாம காட்டணும்’ என்றெல்லாம் உள்ளுக்குள் ஒரு உருவ ஓவியமே தீட்டிவைத்திருப்பார்கள்.
கவுதம் வாசுதேவ் மேனன் படங்களின் நாயகன், கிட்டத்தட்ட அவரைப் போலத்தான் இருப்பார். அவரைப் போலத்தான் உடை உடுத்துவார். அவ்வளவு ஏன்... கமல்ஹாசனின் ‘சத்யா’ படம் தந்த தாக்கத்தால், கையில் ‘காப்புவளையம்’ போட்டுக்கொண்டு இன்னமும் வலம் வருகிற கவுதம், தன் நாயகர்களுக்கும் அதை அணிவித்து அழகுபார்ப்பார். இதுவும் கவுதம் ஸ்டைல்தான்!
‘மின்னலே’ படத்தில் இளமை பொங்கும் மாதவனும் அழகு கொஞ்சும் ரீமா சென்னுமாக வந்து, நம்மை வசீகரித்தார்கள். இவர்கள் மட்டுமின்றி, ஹாரிஸ் ஜெயராஜ் இசையும் தாமரையின் வரிகளும் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலும் நம்மை இன்னும் ஈர்த்தது. அருமையான இந்த அனுபவத்தை கவுதம் வாசுதேவ் மேனனின் ‘மேக்கிங்’ ஜாலம் நமக்குத் தந்தது.
இயக்குநர் கவுதமிற்கு காதல் மீது ஒரு காதலே உண்டு. அதேபோல, காவல் துறை மீதும் காதலும் மரியாதையும் கூடவே உண்டு. இதனால், இவரின் கதைக்குள் காதலும் கவிதை எழுதியது. காவல்துறையும் கம்பீரம் காட்டியது. நடிகர் சூர்யாவின் திரையுலக வாழ்வில், ‘காக்க காக்க’ அட்டகாசமான திருப்புமுனையைத் தந்தது. அற்புதமான நடிகரான ஜீவன், வில்லனாக ‘கொலவெறி’ காட்டி பீதியைக் கிளப்பினார்.
சூர்யா உட்பட காவல்துறையினரை இயக்குநர் கட்டமைத்த விதம், நடுவே நம் தலைகோதுகிற தென்றல் போல் வந்து நம்மைத் தழுவுகிற சூர்யா - ஜோதிகா காதல், பார்ப்பது படம் என்று தெரிந்தாலும் ‘பாண்டியா’ ஜீவனின் மிரட்டல்களில் நாமே நடுநடுங்கிப் போகிற வில்லத்தன கேரக்டரைஸேஷன்... என ‘காக்க காக்க’ ஏற்படுத்திய தாக்கம்தான், ‘’கவுதம் வாசுதேவ் மேனன் படங்கள்னா, இப்படித்தான் இருக்கும்’’ என்கிற பாணியை, ஸ்டைலை நமக்குள் கடத்தியது.
சரத்குமாரை வைத்து ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் அப்படியொரு வில்லத்தன ஜோதிகாவை திரையுலகம் யோசிக்கவே இல்லை. ‘வாரணம் ஆயிரம்’ படத்தின், ஒரு இளைஞனின் திசை திரும்புகிற காதலையும் வாழ்க்கையும் அவனுக்குள் அப்பா ஏற்படுத்திய தாக்கத்தையும் அதற்கு முன்பு அப்படிச் சொன்ன படமாக வந்ததாகத் தெரியவுமில்லை.
கிட்டத்தட்ட, தந்தை சூர்யா கவுதமின் அப்பா; மகன் சூர்யா கவுதமேதான் என்றும் படம் பார்க்கிற நமக்குச் சொல்லாமல் சொல்லி, உணர்த்தி நெகிழவைத்திருந்தார். தனக்குப் பிடித்த கமல்ஹாசனை, எண்பதுகளைக் காட்டுகிற கதைக்களத்தில், எங்கெல்லாம் பாடலாகவும் போஸ்டராகவும் பயன்படுத்த முடியுமோ, அப்படி ரசித்து ரசித்து இணைத்து அழகூட்டுவதில், கவுதம் வாசுதேவ் மேனன் எனும் படைப்பாளி, ஒரு கவிஞனாக, ஒரு சிற்பியாக ஜொலிக்கிறார். பிரமிக்கவைக்கிறார்.
தமிழ் சினிமாவில் நீ.......ண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த மிக உயிர்ப்பான காதல் காவியத்தைப் படைத்தார் கவுதம். அப்படியான சிம்புவும் இப்படியான த்ரிஷாவும் நமக்கு மட்டுமில்லாமல், அவர்களுக்கு புத்தம்புதிய காப்பிதான்! படத்தில் ஏதேனும் ஒரு காட்சி கவிதையாக இருக்கும். ஆனால், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் மொத்தமும் கவிதைதான். காதல் கவிதை!
கமலை ராகவன் எனும் கதாபாத்திரத்தில், காவல்துறை அதிகாரியாக, பேரழகுடன் காட்டியிருப்பார் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில்! இதுவரை வந்த கவுதம் வாசுதேவ் மேனன் படங்களைக் கொஞ்சம் திருப்பிப் பார்த்தால், விழாக்களிலும் மேடைகளிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் வந்த கவுதம் வாசுதேவ் மேனனைப் பார்த்தால்... அவரின் கதை மாந்தர்கள், குறிப்பாக நாயகர்கள், கவுதம் போல்தான் உடை அணிந்திருப்பார்கள்.
அரைக்கை சட்டை, ஒட்டவெட்டிய தலைமுடி, கையில் காப்பு, காக்கி, பச்சை நிறங்களிலான பேன்ட் என ஒவ்வொரு காட்சிக்குமான ஆடைகளில், அத்தனை நேர்த்தியுடன் தன் விருப்பங்களையும் நிறைவேற்றியிருப்பார் இயக்குநர்.
ஒருநாளின் 24 மணி நேரத்தில், நாம் தூங்கும் நேரம் போக பல தருணங்களில், தனக்குள்ளேயே பேசிக்கொள்வது என்பது இயல்புதானே. இந்த இயல்பை, இயல்பு மீறாமல், தன் படங்களில் காட்சிப்படுத்திய செப்படிவித்தை கவுதம் வாசுதேவ் மேனனுக்கு மட்டுமே உண்டான தனி ஸ்பெஷல்!
அதேபோல், காதலையோ கோபத்தையோ அழுகையையோ சைக்கோத்தனத்தையோ எதுவாக இருந்தாலும் கவுதமின் எழுத்துகளில் சினிமாத்தனங்கள் இருக்கவே இருக்காது. நாம் காதலித்தால் பேசுவது போல், கோபம் கொண்டால் ஆத்திரப்படுவது போல், அழுகை வந்தால் துடித்துக் கதறுவது போல், நமக்குள் எப்போதேனும் ஈகோ உள்ளிட்ட கெட்டகுணங்களின் போது நாம் செய்கிற செயல் போல், கவுதம் வாசுதேவ் மேனன் எனும் படைப்பாளி, திரையில் அச்சுஅசலாக வசனங்களாலும் காட்சிகளாலும் மேனரிஸங்களாலும் கேரக்டர்கள் மூலமாக அசத்தி இருப்பார்!
தமிழ் சினிமாவில், கவுதம் அளவுக்கு காதலின் அடர்த்தியை இத்தனை நுணுக்கமாகச் சொன்னவர்கள் மிகக்குறைவுதான். அதேபோல், காவல்துறையினருக்கு கம்பீர சல்யூட் அடிக்கிற கதாபாத்திரங்களை உருவாக்கியதும் இவரளவுக்கு எவருமில்லை. கவுதமிற்குள் ஒரு இசைக்கலைஞனும் இருக்கிறான் போல!
அதனால்தான், ’காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘வாரணம் ஆயிரம்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘வெந்து தணிந்தது காடு’ என்றெல்லாம் பாடல் வரிகளைக் கொண்டு படங்களுக்குப் பெயர் சூட்டினார்.
அதனால்தான், இவர் படங்களின் பாடல்கள் எல்லாமே ஹிட்டாகி விடுகின்றன. அதேபோல், கதை எழுதும்போதே, காட்சிக்குக் காட்சி, மனதுக்குள் ஒரு பிஜிஎம் உருவாக்கிவைத்து, அதையெல்லாம் இசையமைப்பாளர்களிடம் சொல்லிவிடுகிற இசைக்காதலும் கவுதமிற்கு உண்டு.
படத்தின் முதல் நாளில் மிகப்பெரிய ஓபனிங், சில நடிகர்களுக்கும் சில இயக்குநர்களுக்கும் சினிமா ரசிகர்கள் கொடுத்துவைத்திருக்கிற ஸ்பெஷல் போனஸ். அந்தப் பட்டியலில், கவுதம் வாசுதேவ் மேனனும் தனியிடம் பிடித்து தடம் பதித்திருக்கிறார். ‘வெந்து தணிந்தது காடு’ படமாகட்டும் ‘அச்சம் என்பது மடமையடா’ படமாகட்டும், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படமாகட்டும், சிம்பு எனும் உன்னதக் கலைஞனை கவுதம் வெகு அழகாகவும் அடர்த்தியாகவும் முழுவதுமாக உள்வாங்கி பயன்படுத்திக் கொண்டார்.
கவுதம் வாசுதேவ் மேனனின் குரலும் கூட தனி ஸ்டைலுடன் இருக்கும். நாமே பேசுகிற போது, கால்வாசி தமிழும் முக்கால்வாசி இங்கிலீஷும்தானே பேசுகிறோம். அவரின் கதை மாந்தர்களும் அப்படித்தான் பேசுவார்கள். கவுதமும் அப்படித்தான் இருப்பார். அந்தக் குரலில் கம்பீரமும் இருக்கும். வாஞ்சையும் இருக்கும். அதனால்தான், சில படங்களில், அவரின் குரலைப் பயன்படுத்திக் கொண்டார்கள். பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வளவு ஏன்... அவரையே சில கேரக்டர்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமா என்பது காட்சி ஊடகம், கேமராவின் வழியே பேசுகிற மொழி என்பதை காட்சிக்குக் காட்சி, வார்த்தைக்கு வார்த்தை நிரூபித்துக் கொண்டே இருப்பார், தன் படங்களில். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தன் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி எனும் பெயரை எப்படியாவது படத்தின் வசனத்துக்குள் சேர்த்து விடுவார். அதேபோல், கதைக்குத் தேவைப்பட்டால், திருச்சி அருகேயுள்ள தான் படித்த மூகாம்பிகை கல்லூரியை, செருகிவிடுவார் கவுதம்.
தானும் ஸ்டைலாக இருந்து தன் படங்களையும் ஸ்டைலிஷாக உருவாக்கி, இளைஞர்கள் பலரின் மனங்களைக் கவர்ந்த அழகியல் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு பிப்ரவரி 25 பிறந்தநாள்!
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் கவுதம் மேனன்!