வர்த்தக சிந்தனைகளில்லாமல், தான் எடுக்க நினைத்த திரைப்படத்தை, தான் கொடுக்க விரும்பிய சினிமாவை, பணத்துக்காகவோ, பேரும்புகழும் கிடைக்கவேண்டும் என்பதற்காகவோ, தன்னையும் தன் படங்களையும் மாற்றிக் கொள்ளாமல் படங்களைத் தந்த வைராக்கிய சக்தி அவரிடம் இருந்தது. அதையெல்லாம் முன்பே அறிந்துதானோ என்னவோ அவருக்கு ‘சக்தி’ என்றே பெயர் வைத்திருக்கிறார்கள் போல! அவர் தான் இயக்குநர் ஆர்.சி.சக்தி!
கமலை நினைக்கும் போது அவரின் சொந்த ஊர் பரமக்குடியையும் நினைப்போம். அந்த பரமக்குடிக்குப் பக்கத்தில் உள்ள புழுதிக்குளம் கிராமத்தில் 1940-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் பிறந்தவர் ஆர்.சி.சக்தி.
கமல் குறித்து நினைக்கும்போதெல்லாம், கமலுக்கு நெருக்காமானவர்களெல்லாம் நம் மனத்திரையில் தடதடவென வருவார்கள். சமீபத்தில் மறைந்த கே.விஸ்வநாத் தொடங்கி, இன்றைக்கும் நட்புடன் பயணித்துக் கொண்டிருக்கும் இயக்குநரும் நடிகருமான சந்தானபாரதி வரை கமலின் நட்பு வட்டத்தில் இருப்பவர்களை நினைவுப்படுத்திக் கொள்வோம். அப்படியொரு நட்பும் பிரியமும் கமலுக்கும் ஆர்.சி.சக்திக்கும் உண்டு. ஆனாலும் ஆர்.சி.சக்தியை தன் அப்பாவுக்கு அடுத்தபடியாக, சித்தப்பா ஸ்தானத்தில் வைத்து மரியாதையும் பேரன்புமாகப் பழகினார் கமல்.
ராமநாதபுரம் ஜில்லாவில் அரைநிஜார் பருவத்தில், அதன் இரண்டுபக்க பாக்கெட்டுகளிலும் மனதுக்குள்ளும் எழுத்தையும் கலையையும் சேகரித்து அடைகாத்து வந்தார் சக்தி. ஒருபக்கம் நாடகம்; இன்னொரு பக்கம் சினிமா! இப்படியாகத்தான் அவரின் பால்யம் நிரம்பியிருந்தது. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, நாடகங்களை அரங்கேற்றினார். ‘’பாருப்பா இந்தப் பையனை’’ என ஊரே வியந்தது.
அந்தக் காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடப் படங்களெல்லாம் எடுக்கிற கோட்டையாகத் திகழ்ந்தது சென்னை கோடம்பாக்கம். சக்தியும் சென்னைக்கு வந்தார். வந்தாரை வரவேற்கும் சென்னை என்பது போல், வந்தாரை வரவேற்பவர் கலைவாணர் என்.எஸ்.கே. அவரின் நாடக சபாவில் இணைந்தார். அங்கே அவருக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. வில்லுப்பாட்டுக் கலையில் தனித்துவத்துடன் விளங்கிய சுப்பு ஆறுமுகத்துடன் நட்பு ஏற்பட்டது. அவருடன் இணைந்து நாடகங்களுக்கு திரைக்கதையும் வசனமும் எழுதுகிற பணியில் செயல்பட்டார் சக்தி.
‘பொற்சிலை’ எனும் திரைப்படம். இதில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிற வாய்ப்பு கிடைத்தது சக்திக்கு கிடைத்தது. இங்குதான் பிரபல நடன இயக்குநரான தங்கப்பன் மாஸ்டரின் நட்பு கிடைத்தது. அப்போது தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்த கமல்ஹாசனின் நட்பும் கிடைத்தது. தமிழ் சினிமா மீதான கமலின் பார்வையும் ஆர்.சி.சக்தியின் பார்வையும் ஒருபுள்ளியில் குவிந்து நின்றன. இருவரும் இன்னும் நெருக்கமானார்கள்.
இருவரும் இரவுக் காட்சி சினிமா பார்த்துவிட்டு வந்து எல்டாம்ஸ் ரோடு கமலின் வீட்டு வாசலிலும் அருகில் உள்ள சாம்கோ ஹோட்டலிலும் தேநீர் அருந்தியபடி, விடிய விடிய தாங்கள் பார்த்த சினிமாவைப் பிரித்து மேய்வார்கள். நான்கைந்து தேநீருக்குப் பிறகுதான் விடிந்ததையே உணருவார்கள். அந்த அளவுக்கு நல்ல சினிமா மீதும் தமிழ் சினிமா பயணிக்கும் பாதையை மடைமாற்றிவிடவேண்டும் என்பதன் மீதும் பேரார்வம் இருந்தது இருவருக்குள்ளேயும்!
அப்போது கமல், மலையாளப் படங்களில் அதிகம் நடித்துக் கொண்டிருந்தார். கேரளத்தில் இருந்து சென்னைக்கு வந்தால், ஆர்.சி.சக்தியுடன் தான் அவரின் பொழுதுகள் கழியும். கமலுடன் பேசிக்கொண்டே கேரளாவுக்குச் சென்று, கமல் படப்பிடிப்புக்குச் செல்ல, ஆர்.சி.சக்தி, ரயில் பிடித்து சென்னைக்குத் திரும்பியதெல்லாம் பலமுறை நடந்திருக்கிறது.
இயக்குநர் மகேந்திரன், சந்தானபாரதி, பி.சி.ஸ்ரீராம், மணி ரத்னம், சுஜாதா, பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, மனோபாலா என்று கமலுக்கு மட்டுமின்றி கமலின் ஒட்டுமொத்தக் குடும்பத்தாருக்கும் பழக்கமும் நெருக்கமும் கொண்டவர்கள் பட்டியல் மிகப்பெரிய நீளம். அந்தப் பட்டியலில் ஆர்.சி.சக்திக்கு தனியிடம் உண்டு. ’’அவங்க மாடிக்குப் போய் பேச ஆரம்பிச்சிட்டாங்களா? சோறுதண்ணி கூட ஞாபகம் இருக்காது. அவங்களுக்கு சாப்பாடைக் கொண்டு கொடுங்க’’ என்று கமலின் சகோதரர் சாருஹாசன் சொல்ல, கமலின் மன்னி உடனே கொண்டுகொடுப்பார். எல்டாம்ஸ் ரோடு கமல் வீட்டின் மாடியில், பல கதைகளை உருவாக்கினார்கள். அப்படி கமலும் ஆர்.சி.சக்தியும் திரைக்கதை, வசனங்களை எழுத, ‘உணர்ச்சிகள்’ என்கிற படத்தை எழுபதுகளில் இயக்கினார் ஆர்.சி.சக்தி.
இந்தப் படம் ஓடவில்லைதான். ஆனால், பார்த்தவர்கள் அனைவரும் படத்தின் கதையை உணர்ந்து ‘உணர்ச்சிகள்’ படத்தைக் கொண்டாடினார்கள். பத்திரிகைகளும் ஆர்.சி.சக்தியையும் கமலையும் பாராட்டித் தள்ளின. கமலும் ஆர்.சி.சக்தியும் உணர்வுபூர்வமாகக் கலந்து, ‘உணர்ச்சிகள்’ மாதிரி படம் கொடுக்க நினைத்து சாதித்தும் காட்டினார்கள். நடிப்பைக் கடந்து நடனம், நடிப்பையும் நடனத்தையும் கடந்து திரைக்கதை, வசனம், உதவி இயக்கம் என்று முழுமூச்சாக கமல் இறங்கி வேலை பார்த்த முதல் படம் ‘உணர்ச்சிகள்’ திரைப்படமாகத்தான் இருக்கும்.
இப்படியாகத்தான் ஆர்.சி.சக்தியிடம் இருந்து வந்த படைப்புகள், ஆகச்சிறந்ததாக வெளிப்பட்டன. யாரை வைத்து படம் இயக்கினாலும் அந்த மொத்தக்கதையையும் கமலிடம் சொல்லிவிடுவார் ஆர்.சி.சக்தி. இருவரும் விவாதிப்பார்கள். இதிலொரு ஆச்சரியம்... சைவம் சாப்பிடும் குடும்பத்தில் பிறந்த கமல், அசைவத்தில் வெளுத்துவாங்குவார். அசைவம் இருந்தால்தான் சாப்பாடே இறங்கும் எனும் குடும்பத்தில் இருந்து வந்த ஆர்.சி.சக்தியோ சைவத்தைத் தவிர எதையும் தொட்டுப் பார்க்கமாட்டார்.
ஸ்ரீதேவியை கதையின் ஆதாரமாக வைத்து ‘மனிதரில் இத்தனை நிறங்களா?’ என்றொரு படத்தை இயக்கினார் சக்தி. பாடல்களும் வேறொரு நிறத்தில், குணத்தில் இருந்தன. கதையும் அப்படித்தான் அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் படம் அப்போதே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தன் நண்பருக்காக, இந்தப் படத்தில் கமல், கெளரவத் தோற்றத்தில், சைக்கிள் கடை வைத்திருப்பவராக நடித்தார். ஸ்ரீதேவிதான் நாயகி என்றாலும் கமலுக்கு மனைவியாக நடிகை சத்தியப்ரியா நடித்தார்.
எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் ரஜினியை நெருங்கவே பலரும் யோசித்தார்கள். ஒரு கதை தயார் செய்து வைத்திருந்த சக்தி, வழக்கம் போல் கமலிடம் பகிர்ந்துகொண்டார். அவரும் கதையில் சில மாற்றங்களைச் சொன்னார். இன்னும் மெருகேற்றினார் ஆர்.சி.சக்தி. ’தர்மயுத்தம்’ என்கிற அந்தப் படத்தை இன்றைக்கும் நம்மால் மறக்கமுடியாது. அப்படியொரு படம் வருவதற்கும் ஆர்.சி.சக்திக்கும் ரஜினிக்குமான தொடர்புக்கும் வழி வகுத்துக் கொடுத்தார் கமல்.
’’கமலும் ஆர்.சி.சக்தியும் எங்கே போனாலும் ஒன்றாகத்தான் செல்வார்கள். கமல் இருந்தால் அங்கே சக்தியைப் பார்க்கலாம். அதேபோல் சக்தி இருந்தால், ‘என்ன கமலைக் காணோம்?’ என்று கேட்பார்கள். ‘அன்னை வேளாங்கண்ணி’ படத்தில் இருவரும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்கள். அப்போது இருவரும் அடிக்கும் லூட்டியை மறக்கவே முடியாது.
படத்தின் டைட்டிலில், ‘உதவி இயக்குநர்கள் - ஆர்.சி.சக்தி, கமலஹாசன்’ என்று ஒரே கார்டாக வந்ததை தியேட்டரில் இருவரும் பார்த்துவிட்டு, விசிலடித்து, கரவொலி எழுப்பி, ஆரத்தழுவிக் கொண்டனர். கமலின் வெற்றியை சக்தி கொண்டாடுவான். சக்தி படத்துக்கு பாராட்டு கிடைத்தால், கமல் அதை நான்கு நாட்களுக்குச் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வான். அப்படியொரு பந்தமும் நட்பும் அவர்களுக்குள்’’ என்று சாருஹாசன் வியந்து சிலாகித்திருக்கிறார்.
’உணர்ச்சிகள்’ படம் பெரிதாகப் போகாத நிலையில், மலையாளத் தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைச் சொல்லி, ஆர்.சி.சக்தியை அறிமுகப்படுத்த, ‘ராசலீலை’ என்று மலையாளத்தில் வெளியானது. தமிழகத்திலும் மலையாள மொழியிலேயே திரையிடப்பட்டு, நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தபோது, அங்கே நெகிழ்ந்தார் ஆர்.சி.சக்தி. மகிழ்ந்தார் கமல்!
நடிகர் சந்திரசேகரையும் அப்போதுதான் அறிமுகமாகி வளர்ந்துகொண்டிருந்த விஜயசாந்தியையும் வைத்து ‘ராஜாங்கம்’ படத்தை ஆர்.சி.சக்தி படமெடுத்தார். தயாரிப்பாளருக்கும் பைனான்சியருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் என மூன்று திசைகளில் முட்டிக்கொள்ள மனமுடைந்தார் ஆர்.சி.சக்தி. அப்போது ஒரு வக்கீலாக வந்து நின்று சமரசம் ஏற்படுத்தி, படம் எடுக்கவும் வெளிவரவும் காரணமாக இருந்தவர் சாருஹாசன். ‘அண்ணா’ என்று கட்டிக்கொண்டு ஆர்.சி.சக்தி அழுதேவிட்டார்.
’கூட்டுப்புழுக்கள்’, ‘சிறை’ என்று நாவல்களைப் படமாக்கியும் சாதித்துக் காட்டினார் ஆர்.சி.சக்தி. நடிகை லட்சுமிக்கு அப்படியொரு கதாபாத்திரம் வழங்கினார். ‘’லட்சுமியைத் தவிர இந்தக் கதாபாத்திரத்தைச் செய்ய ஆளே கிடையாது’’ என்று புகழ்ந்தார் ஆர்.சி.சக்தி. ‘’ரகுவரன் மிகப்பெரிய ஆளா வருவார். அவர்கிட்ட அப்படியொரு திறமை பொதிஞ்சு கிடக்கு’’ என்று ரகுவரனின் திரை வாழ்வின் ஆரம்பகட்டத்திலேயே சொன்னவர் சக்தி. இன்றைக்கும் ‘சிறை’யையும் லட்சுமியின் அபாரமான நடிப்பையும் ராஜேஷின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிப்பையும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்!
’மாம்பழத்து வண்டு’, ‘ஸ்பரிசம்’, விஜயகாந்தை வைத்து ‘சந்தோஷக் கனவுகள்’, ’பத்தினிபெண்’, ‘தாலிதானம்’, ‘வரம்’ என்றெல்லாம் படங்களை இயக்கினார் சக்தி. விஜயகாந்தும் கமலும் சேர்ந்து நடித்ததே இல்லை என்று பலரும் சொல்லுவார்கள். ஆனால், ‘மனக்கணக்கு’ படத்தில், விஜயகாந்த் ஒளிப்பதிவாளர் கேரக்டரிலும் கமல், இயக்குநர் கதாபாத்திரத்திலும் இணைந்து நடித்தார்கள். அப்படி இணைத்தவர் ஆர்.சி.சக்தி.
தமிழக அரசின் விருதுகளையும் பல அமைப்புகளின் விருதுகளையும் பெற்றிருக்கிறார் ஆர்.சி.சக்தி. அந்தக் காலத்திலேயே தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார். சின்னத்திரை இயக்குநர்களுக்கென ஒரு சங்கம் இன்றைக்கு இருக்கிறது. அதை உருவாக்கியவர் ஆர்.சி.சக்தி.
’’சக்தியண்ணன்... அப்படித்தான் நான் கூப்பிடுவேன். எனக்கும் அவருக்குமான நட்பையும் உறவையும் சொல்லிப் புரியவைக்கமுடியாது. என் குடும்பத்தில் சக்தியண்ணன் ஒருத்தர். அவர் குடும்பத்தில் நானும் உண்டு. அவ்ளோதான் சொல்லமுடியும். சினிமாவின் தரத்தை உயர்த்தவேண்டும் என்கிற கோபம் இருவருக்குமே உண்டு. அந்தக் கோபத்தின் வெளிப்பாடுகள்தான் சக்தியண்ணனின் படங்களும் என்னுடைய சில படங்களும்! இன்னும் சொல்லப்போனால், சக்தியண்ணன் என்னெல்லாம் சினிமால பண்ணணும்னு நினைச்சாரோ, அதில் பல விஷயங்களை நிறைவேற்றிவிட்டேன் என்பதுதான் எங்கள் தோழமைக்கான அடையாளம்.
அவர் எனக்கு நேரெதிர். நான் அவ்வளவு சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படமாட்டேன். ஆனால், உணர்ச்சியைக் கொட்டுவதில் சக்தியண்ணனை நடிகர்கள் கூட ஜெயித்துவிடமுடியாது. ஒரு காட்சியில் அழவேண்டும் என்றாலோ, கோபமாகப் பேசவேண்டும் என்றாலோ, சக்தியண்ணன் காட்சியை அழுதுகொண்டே விளக்குவார். நாம் நடித்து முடித்தாலும் கூட ‘கட்’ என்பதை அழுதுகொண்டே சொல்லுவார். அப்படியே கதையுடனும் காட்சிகளுடனும் ஒன்றிப்போகிற மெல்லிய மனசு அவருக்கு’’ என்று ஆர்.சி.சக்தியைப் பற்றி மேடையில் மனம் விட்டுப் பேசியிருக்கிறார் கமல்ஹாசன்.
உடல்நிலை குன்றிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஆர்.சி.சக்தியைப் பார்க்க கமல் சென்றார். ‘’தைரியமா இருங்கண்ணே. ரொம்ப உணர்ச்சிவசப்படாம இருங்கண்ணே’’ என்று ஒருமணி நேரம் கமல் பேசிவிட்டு, கிளம்பும் போது, ஆர்.சி.சக்தியின் தலையணைக்குக் கீழே ‘கவர்’ ஒன்றை வைத்தார். அந்தக் கவரை ஆர்.சி.சக்தி எடுத்துப் பிரித்துப் பார்த்தார். இன்னும் உணர்ச்சிவசப்பட்டு சின்னக்குழந்தை போல் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார் சக்தி.
ஆஸ்பத்திரியில் ஆர்.சி.சக்தியின் மொத்தச் சிகிச்சைக்குமான செலவுத்தொகையைத் தந்திருந்தார் கமல். அதுதான் நட்பு; ஆர்.சி.சக்தி, தமிழ் சினிமாவை வளர்க்கும் வெறியுடன் இருந்த கலைஞனுக்குக் கிடைத்த கமல் எனும் சொத்து!
2015-ம் ஆண்டு, பிப்ரவரி 23-ம் தேதி மறைந்தார் ஆர்.சி.சக்தி. ஆனால், அவரின் வணிக சமரசங்களில்லாமல் எடுத்த படங்களும் கமல் எனும் உன்னதக் கலைஞன் சந்தர்ப்பம் கிடைக்கிற தருணங்களிலெல்லாம் சொல்லிப் புகழ்ந்துகொண்டிருப்பதிலும் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் ஆர்.சி.சக்தி எனும் உன்னத படைப்பாளி!
உயிர்ப்புள்ள கலைஞன் ஆர்.சி.சக்தியைப் போற்றுவோம்!