சாவர்க்கரால் கிளம்பிய சர்ச்சை: மன்னிப்பு கேட்ட இயக்குநர் சுதா கொங்கரா


சென்னை: சாவர்க்கர் பற்றி இயக்குநர் சுதா கொங்கரா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து, அவர் மன்னிப்புக் கேட்டு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தை இந்தியில் ‘சர்ஃபிரா’ என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. இதுதொடர்பாக சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு கொடுத்த நேர்காணலில்தான் இந்த சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

இந்துத்துவா அமைப்புகளின் கொள்கை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுவர் சாவர்க்கர். இவர் அந்தக் காலத்திலேயே பெண் கல்விக்கு சமூகத்தில் எதிர்ப்புகள் இருந்தபோதே, தனது மனைவியை போராடி படிக்க வைக்க முயற்சிகள் எடுத்தார். ஆனால், அவரது மனைவிக்கு வீட்டில் இல்லத்தரசியாக இருப்பதே விருப்பம் என்பதை வரலாற்று மாணவியான தனக்கு ஆசிரியர் பாடம் எடுத்ததாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சுதா கொங்கரா பேசியிருக்கிறார்.

இந்த விஷயங்கள்தான் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. உண்மையில் இந்த சம்பவத்தை பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடிய ஜோதிபா பூலேதான் செய்திருக்கிறார். அவர்தான் தன் மனைவி சாவித்ரி பாயை படிக்க வைத்து ஆசிரியராக்கினார். இதைப் பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் தவறுக்கு வருந்துவதாகக் கூறியிருக்கிறார் சுதா கொங்கரா. வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை சோதித்திருக்க வேண்டும் என்றவர் எதிர்காலத்தில் இதுபோல தவறு நடக்காது என்றும் சொல்லி இருக்கிறார்.

x